தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. செல்போன்களுக்கு விதிக்கப்படும் மதிப்புக் கூட்டும் வரி கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் 2015-2016-க்கான பட்ஜெட்டை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
நிதிச்சுமை உயர்ந்துள்ள இந்த நிலையிலும் மாநிலத்தின் சொந்த வரிவருவாயில் குறைந்த வளர்ச்சியே உள்ள போதும், "புரட்சித் தலைவி அம்மா"வின் வழிகாட்டுதலின்படி புதிய வரிகள் எதனையும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக சில முக்கிய வரிச் சலுகைகளை வழங்கவும் இந்த அரசு முன் வந்துள்ளது. இதன்படி பின்வரும் வரிவிகித மாற்றங்களை நமது அரசு செயல்படுத்தும். - பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்
- தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி அலகுகளோடு சிறப்பாகப் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டம் 2006 பிரிவு 19 (2) (வி)ன் கீழ் கொண்டுவரப்பட்ட காப்புரையின்படி 11.11.2013 முதல் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும். - அனைத்து வகையான கொசு வலைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும். - நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். - ஏலக்காய் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் (எல்.இ.டி) மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். - கைபேசிகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். - 10 எச்.பி மோட்டார் பம்புக்கு வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்., - இத்தகைய வரிச்சலுகைகள் மூலமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 650 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment