ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட 8 பேர் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 2) ஆஜராக உள்ளனர்.
தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
ஆஜராக உத்தரவு: இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 2-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், தில்லி சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை (சம்மன்) எதிர்த்து மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், தில்லி சிபிஐ நீதிமன்றத்தை அணுகுமாறு கடந்த மாதம் 9-ஆம் தேதி உத்தரவிட்டது.
முன்னதாக, சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.742 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடுகள் செய்தது தொடர்பாக மாறன் சகோதர்களிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறையும் அழைப்பாணை அனுப்பியது. இதையடுத்து, அவர்கள் இருவரும், 2014, நவம்பர் மாதம் தில்லியில் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்காக ஆஜாரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த வழக்கில், தயாநிதி மாறன் பதவிக்காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலராக இருந்த ஜே.எஸ்.சர்மா தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவருக்கு எதிராக வழக்கை நடத்த முடியாது என்று சிபிஐ கூறியுள்ளது.
No comments:
Post a Comment