Latest News

வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் இ-சேவை மையம் தொடக்கம்


தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தொடங்கி வைத்தார்.

வாக்காளர் பெயர்சேர்த்தல், நீக்கல்

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், வருமானவரி சான்று, சாதிச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, நிரந்தர இருப்பிட சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று போன்ற சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆதார் அடையாள அட்டைக்கும் இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர் நீக்குதல் போன்ற வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் சேவையும், கூடுதலாக நேற்று முதல் இந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேவை மையம் தொடக்கம்

இந்த கூடுதல் சேவையை சென்னை மைலாப்பூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் 600-க்கும் மேற்பட்ட அரசு பொது இ-சேவை மையங்களில், இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டைக்கு பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் விட்டு போனவர்கள் மீண்டும் விண்ணப்பித்தல் போன்ற சேவைகளுக்கு உரிய படிவங்களை இந்த மையங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த மையங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீதுகள் வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அதற்கான தீர்வுகள் எட்டப்படும். சேவைக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

எல்காட், அரசு கேபிள் டி.வி. நிறுவனங்கள்

தற்போது வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் இறுதி பட்டியல் 2016 மார்ச் மாதம் வெளியிடப்படும். ஒன்றிற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை இந்த இ-சேவை மையங்களில் எல்காட்(தமிழ்நாடு மின்னணு கழகம்) நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இ-சேவை தொடக்க நிகழ்ச்சியில், இணை தலைமை தேர்தல் அதிகாரி அஜய் யாதவ், தகவல் தொடர்பு துறை செயலாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு மின்னணு கழக(எல்காட்) நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், சென்னை மாவட்ட கலெக்டர் ஏ.சுந்தரவல்லி, மைலாப்பூர் தாசில்தார் சொர்ணம் அமுதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.