வயதானவர்களுக்கே இதய அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும் நிலையில், பிறந்து 18 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து இந்திய மருத்துவர்கள், சர்வதேச அளவில் தங்களின் திறமையை மற்றொரு முறை நிரூபித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பிறந்த பெண் குழந்தையான மாயங்க் அகர்வாலுக்கு ‘டிஏபிவிசி’ என்ற அரிய வகை இதய நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நோய் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைபட்டிருந்ததால் ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த குழந்தை மூச்சு விடவே திணறியது.
இதனால், சில நிமிடங்களில் அதன் உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியது. உடனே அகர்வாலின் பெற்றோர் அவசரமாக டெல்லியில் உள்ள போர்டிஸ் எஸ்கார்ட் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டிற்கு குழந்தையை கொண்டு சென்றனர். உயிர் போகும் அபாயத்தில் இருந்த அந்த குழந்தையை பரிசோதித்த போர்டிஸ் மருத்துவர்கள் சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.
மிகவும் மெல்லிய அந்த பச்சிளங்குழந்தையின் இதய ரத்தக் குழாயில் மருத்துவர்கள் துல்லியமான இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். ஒவ்வொரு நொடியும் பதட்டத்தால் நிறைந்த அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. குழந்தையை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர். நீண்ட நாள் தவத்திற்குப் பின் கிடைத்த தங்கள் குழந்தை உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் அகர்வாலின் பெற்றோர் மருத்துவர்களுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
இந்தியாவில் பிறந்த 18 மணி நேரத்திலேயே ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment