டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் விடுப்பில் போக திட்டமிட்டுள்ளார். அவர் திரும்பி வரும் வரை மனீஷ் சிசோடியா முதல்வர் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. மார்ச் 5ம் தேதி முதல் 10 நாட்களுக்கு கெஜ்ரிவால் விடுப்பு எடுக்கவுள்ளாராம். நேச்சுரோபதி சிகிச்சைக்காக இந்த விடுப்பில் அவர் போவதாக தெரிகிறது. இருப்பினும் ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் காரணமாக அப்செட்டாகித்தான் அவர் விடுப்பில் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் இருமலால் கெஜ்ரிவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு ரத்த கொதிப்பும் உள்ளது. இதற்கு அவர் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட, பெங்களூரில் உள்ள ஆயுர்வதே வைத்தியரிடம் சிகிச்சை எடுக்குமாறு யோசனை கூறியிருந்தார். இதையடுத்து தற்போது தனது உடல் நிலை குறித்து தீவிர கவனம் செலுத்தவுள்ளார் கெஜ்ரிவால். அவர் சிகிச்சைக்காக பெங்களூர் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது விடுப்புக்கும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை என்றும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரஷாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.நாளை கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் கூடி இந்த இருவரையும் நீக்குவது குறித்த முக்கிய முடிவை எடுக்கவுள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி லீவில் போயுள்ள நிலையில் தற்போது இன்னொரு முக்கிய அரசியல்வாதியான கெஜ்ரிவாலும் விடுப்பில் போகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment