விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாமல் போனதே பாஜகவின் படுதோல்விக்குக் காரணம் என்று ஸ்ரீரங்கம் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுப்ரமணியன் கூறியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக சொற்ப வாக்குகளையே பெற்று பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது. இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் வேட்பாளர் சுப்ரமணியன், கூறியதாவது:
விளக்கி சொன்னேமே
இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தோம். மத்தியில் ஆளும் பாஜக அரசால் மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை விளக்கினோம்.
அவகாசம் போதவில்லை
ஸ்ரீரங்கத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்தால் பிரதமரின் மாதிரி நகர திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் தரம் உயர்த்தப்படும் எனக் கூறினோம். ஆனால், எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அவகாசம் போதவில்லை.
விஜயகாந்த் வரலையே
தேர்தல் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது. விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது. அவர் எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதது ஏமாற்றமே" என்று கூறியுள்ளார்.
கடைசி நேரத்தில்
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் முதல் ஆளாக திமுக வேட்பாளரை அறிவித்தது. அதிமுகவும் உடனடியாக வேட்பாளரை அறிவித்து படைகளை களமிறக்கியது. எல்லாவித பட்டுவாடாக்களும் முடிந்த பின்னர் கடைசியாக வேட்பாளரை அறிவித்தது பாஜக.
வாய் திறக்காத விஜயகாந்த்
தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூறினாரே தவிர கடைசி வரை விஜயகாந்த் வாயே திறக்கவில்லை. இதனால் தேமுதிகவினரும் குழம்பித்தான் போனார்கள். எனவேதான் தேமுதிகவினர் வாக்குகள் எதுவுமே பாஜக வேட்பாளருக்கு விழவேயில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
No comments:
Post a Comment