தொடர்ச்சியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதை தவிர்த்திட வேண்டும் என்றும், அதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து தீர்வை எட்டவேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அடுத்தடுத்து அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், குடியரசுத் தலைவரின் இந்த வலியுறுத்தல் கவனிக்கத்தக்கது.
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் குடியரசுத் தலைவர் பிரணாப் திங்கள்கிழமை கலைந்துரையாடினார்.
அப்போது, மத்திய அரசின் தொடர்ச்சியான அவசரச் சட்டங்கள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாதபோது, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் மூலம் சட்டங்களை நிறைவேற்றலாம் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. இந்தச் சூழ்நிலையில் நடைமுறைக்கு சாத்தியமாக ஒரு தீர்வினை எட்டும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு அவையில் பெரும்பான்மை இருக்கும்போது அவை மசோதாக்களை எதிர்க்கலாம், குறைகளை வெளிப்படுத்தலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால், சட்டம் இயற்றுவதில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் ஆனாலும் சரி, மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனாலும் சரி, அனைவருக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
எனவே, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் என அரசியல் கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
அசாதாரண சூழ்நிலையில் அவசரச்சட்டம் பிறப்பிக்க அரசியலைப்புச் சட்டம் வழி செய்துள்ளது. ஆனால், இந்த வழியை வழக்கமான சட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது” என்றார் பிரணாப் முகர்ஜி.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்குப் பிறகு, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்வு உள்பட 9 அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment