அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மறுநாளே நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கரின் தந்தை பாதுகாப்புத் துறை வல்லுநரான கே. சுப்ரமணியன், தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தவர். சென்னை பல்கலைக் கழகத்தில் படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர்.. ஜெய்சங்கர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்துமே டெல்லியில்தான்.. முதுகலை, முனைவர் பட்டம் வாங்கியது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்..
1977 முதல்.. 1977 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார் ஜெய்சங்கர். இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஜி. பார்த்தசாரதியின் உதவி செயலராகவும் பணியாற்றினார். பின்னர் அமெரிக்கா விவகாரங்களுக்கான உதவி செயலரானார்.
1985-ல் யு.ஸ். 1985 முதல் 1988ஆம் ஆண்டு வரை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல்நிலை செயலராக பணியாற்றினார்.
மைதிப்படை ஆலோசகர்
1988 முதல் 1990 ஆம் ஆண்டுவரை இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையின் அரசியல் ஆலோசகராக பணியாற்றினார். அதன் பின்னர் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் ஊடக செயலராகவும் பணியாற்றினார் ஜெய்சங்கர்.
ஜப்பான் தூதராக
1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை ஜப்பானுக்கான இந்திய தூதராகவும் பின்னர் செக் குடியரசுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணிபுரிந்தார்.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம்
2004 ஆம் ஆண்டு டெல்லி திரும்பிய ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையில் அமெரிக்கா விவகாரங்களுக்கான இணைச் செயலரானார். அப்போது அமெரிக்கா- இந்தியா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான முயற்சிகளில் தீவிர பங்காற்றினார்.
மன்மோகன் விருப்பம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2013ஆம் ஆண்டு சிவசங்கர் மேனன் ஓய்வுக்குப் பிறகு புதிய வெளியுறவுத்துறை செயலராக யாரை நியமிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ஜெய்சங்கரைத் தான் தேர்வு செய்ய விரும்பினார்.
சோனியா பிடிவாதம்
ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ஜெய்சங்கரை வீட சீனியரான சுஜாதாசிங்கை நியமிக்க விரும்பினார். இதற்கு காரணம் சுஜாதாசிங்கின் தந்தையான முன்னாள் உளவுத் துறை தலைவர் டி.வி. ராஜேஸ்வர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதுதான்.
சீனா தூதர்
இதன் பின்னர் சீனாவுக்கான இந்திய தூதரானார் ஜெய்சங்கர். இவரது பதவிக் காலத்தில் இந்தியா சீனா உறவுகள் மேம்பட்டதாக இருந்தது.
அமெரிக்கா தூதர்
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கைது விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டிருந்த சூழலில் ஜெய்சங்கர் பதவி ஏற்று பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
ஒபாமா பயணம்..
தற்போது இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பயணத்தை வெற்றிகரமாக சிக்கலின்றி நிறைவு செய்ததில் ஜெய்சங்கரின் பங்களிப்பு மிக முதன்மையானது.
அதிரடி நீக்கம்...
வெளியுறவுத் துறை செயலராக இருந்த சுஜாதாசிங்கின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் 8 மாதங்களுக்கு முன்னதாகவே அவர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு தூதர்கள்
மாற்றம்.. பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் வெளிநாட்டுக்கான தூதர்கள் மாற்றப்படாமல் இருந்தனர். தற்போது வெளியுறவுத் துறைச் செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment