அபுதாபியில் இருந்து நூதன முறையில் சென்னைக்கு 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கேரள வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
அபுதாபி விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இரவு அபுதாபியில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு அந்த விமானத்தில் திரும்பி வந்து இருந்தார்.
அவர் மீது சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர். அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. மேலும் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவர் கொண்டு வந்த ஒரு அட்டை பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் எல்.இ.டி. பல்புகள் இருந்தன.
2 கிலோ தங்கம் கடத்தல்
அவரிடம், ‘‘ஏன் இவ்வளவு எல்.இ.டி. பல்புகளை கொண்டு வந்து உள்ளீர்கள்?’’ என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு சுரேஷ், ‘‘நான் எலெக்ட்ரிக்கல் மெக்கானிக். எனது தொழிலுக்கு தேவைப்படும் என்பதால் 5 ஆயிரம் பல்புகளை வாங்கி வந்தேன்’’ என்றார்.
சந்தேகத்தின் பேரில் அதில் ஒரு பல்பை அதிகாரிகள் உடைத்து பார்த்தனர். அப்போது மெல்லிய கம்பியாக தங்கத்தை மாற்றி, அதை பல்பின் உள்ளே மறைத்து வைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மின்சார வல்லுனர்களை வரவழைத்து இரவு முழுவதும் பல்புகளை உடைக்காமல் சோதனை செய்ததில் 2 ஆயிரம் பல்புகளில் ஒரு கிராம் அளவில் மெல்லிய கம்பிபோல் தங்கத்தை மாற்றி, நூதன முறையில் எல்.இ.டி. பல்புகளில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
வாலிபர் கைது
மேலும் விசாரணையில் சுரேஷ், எலெக்ட்ரிக்கல் மெக்கானிக் படித்து இருந்தாலும் எந்த வித பணியும் இல்லாமல் இருந்ததால் கடத்தல் ஆசாமிகள் அவரை தொடர்பு கொண்டு நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தால் செலவுகள் போக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால் தங்கம் கடத்தலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கேரள வாலிபர் சுரேசை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இதன் பின்னணியில் உள்ள கடத்தல் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment