மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து மிகப் பெரிய அநீதி என்று கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் விடுமுறை நாளாகும். உலகெங்கும் உள்ள கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்ற புனிதத் திருநாளாகும். ஆனால் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், நவோதயா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், டிசம்பர் 25 ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையும், இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளையும் கொண்டாடுவதற்காக நல்லாட்சி தினமாக அறிவிக்க இருப்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது அநீதியான அடாத செயலாகும். மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.சி) கீழ் இயங்கும் பள்ளிகளிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
அனைத்து மதங்களையும் மதித்து, மதச்சார்பின்மையுடன் நடக்க வேண்டிய மத்திய அரசு, இந்துத்துவா கொள்கையின் ஊதுகுழலாக மாறி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து மத்திய அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மத்திய அரசின் விடுமுறை நாளாகவே கடைப்பிடித்து வந்துள்ளது.
நான் மிகவும் மதித்துப் போற்றுகின்ற முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் அன்று அவரோடு விருந்து அருந்தியவன். தற்போது கடந்த நான்கு ஆண்டு காலமாகவே அடல்பிகாரி வாஜ்பாய் மிகவும் உடல்நலம் குன்றி பேச முடியாமலும், ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அயர்ந்து தூங்குகின்றவராகவும இருந்து வருகிறார். நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் வாஜ்பாய் இல்லம் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். தனது பிறந்த நாள் அன்று மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து என்ற செய்தியை உணர்ந்தாலே வேதனையில் துடி துடித்துப்போவார்.
அடல்பிகாரி வாஜ்பாயின் அணுகுமுறையை எவ்விதத்திலும், குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்னையில் பின்பற்றாத நரேந்திர மோடி அரசு, இந்து மத வெறியரான மதன்மோகன் மாளவியா-வின் இந்துத்துவா நச்சு கருத்தைத் திணித்து பிற மதத்தினரை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்துள்ளது.
மத்திய அரசு பள்ளிகளில் கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் குடும்பங்களின் பிள்ளைகளும் படிக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, இந்துகளின் தீபாவளி பண்டிகை அன்று அனைத்து மதத்தினருக்கும் சேர்த்துத்தானே விடுமுறை அளிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மிகவும் அக்கிரமமான செயலாகும். கிறிஸ்துமஸ் விடுமுறையை மத்திய அரசு பள்ளிகளில் ரத்து செய்யும் மத்திய அரசின் செயலுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மத்திய அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


No comments:
Post a Comment