கிரானைட் முறைகேடு தொடர்பாக நேரிடையாக சென்று விசாரணையை தொடங்கிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அதிகாரிகளிடம் கேட்ட கிடுக்குப்பிடி கேள்விகளால் அவர்கள் திணறி போனார்கள்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக முதன் முறையாக நேரடியாக களத்தில் இறங்கிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இன்று விசாரணையை தொடங்கினார். மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் திருவாதவூர் என்ற ஊரில் சமணர் படுகையில் உள்ள ஓவா மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த மலைக்கு சிறப்பு என்னவென்றால், இந்தியாவில் 8 இடங்களில்தான் இந்த மலை இருக்கிறது. அதில் ஒன்று இங்கிருக்கும் ‘ஓவாமலை’. இந்த மலையில் பிராமி எழுத்து கொண்ட கல்வெட்டு இருக்கிறது. மற்ற இடங்களில் இந்த கல்வெட்டு இயற்கை சீற்றத்தால் சிதைந்து இருக்கிறது. ஆனால் இந்த கல்வெட்டு அப்படியே இருக்கிறது. மலை அருகில் மேலசுனை, கீழசுனை என இரண்டு பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில் ஆதிகாலம் முதல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.
இந்த இடத்தில் முறைகேடாக குவாரி இயங்கி வந்தது. இந்த இடத்தை சகாயம் இன்று ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள மக்களிடமும், அதிகாரிகளிடமும், அங்கிருந்த குளம், கண்மாய், ஆயக்கட்டு இவைகளை பற்றிய விவரங்களை கேட்டு விசாரித்தார்.
அப்போது, அருகில் இருந்த வருவாய் அதிகாரிகளிடம், குளம் ஒன்று இருந்து இருந்தால் கரை என்று ஒன்று இருந்திருக்குமே. எங்கே கரை இருக்கிறது? என்ற கேட்டார் சகாயம்.
அதற்கு பதில் அளிக்க நெளிந்த அதிகாரிகள், நீங்கள் நிற்கும் இடம்தான் கரை என்று கூறினர். அதிர்ச்சியான சகாயம், அப்படியென்றால் கரை கரைந்துவிட்டதா? என்றதோடு, மேலும் அதிகாரிகளிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை அடுக்கினார்.
சகாயம் விசாரணையில் முக்கிய அம்சமாக 25 கேள்விகள் அடங்கிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாய நிலம், கோயில்கள், பொதுமக்கள் வாழும் இடம் என அந்தந்த இடங்களுக்கு தக்கப்படி கேள்விகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேள்விகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குரிய பதில் பெறப்படுகிறது.
மேற்படி இடங்களுக்கு விசாரணைக்கு செல்லும் சகாயம், சேறு, சகதி என்று பாராமல் நடப்பதால் உடன் செல்லும் அதிகாரிகள் அவருடன் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
-சண்.சரவணக்குமார்


No comments:
Post a Comment