ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் களத்திலேயே சுருண்டு விழுந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார்.
இதனால் பிலிப் ஹியூஸ் குடும்பம், நண்பர்கள், கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதைப்போலவே அவருக்கு பந்து வசிடிய சீன் அப்பாட்டும் மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளார். ஏனெனில் பந்து தலையில் தாக்கியதும் சில வினாடிகள் பிலிப் ஹியூக்ஸ் குனிந்தபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பாட் அவர் அருகே சென்று ஆறுதல் கூறினார். அப்போது மயக்கமடைந்த பிலிப் ஹியூக்ஸ் தலைகுப்புற பவுலரின் காலடியில் விழுந்தார். இந்த சம்பவம் அப்பாட் மனதில் அப்படியே பதிந்துள்ளது.
அப்பாட் 22 வயதேயான இளைஞர் என்பதால் இந்த சம்பவத்தை இலகுவாக அவரால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே பதறியபடியே ஹியூக்ஸை தூக்கிச் சென்ற ஸ்ட்ரக்சரின் பின்னாலேயே ஓடிச் சென்றார். மருத்துவமனைக்கு சென்றும் நலம் விசாரித்தார். ஆனால் ஹியூக்ஸ் துரதிருஷ்டவசமாக இன்று உயிரிழந்துள்ள நிலையில் அப்பாட் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அணியின் சார்பில் மனோதத்துவ நிபுணத்துவ டாக்டர்களை கொண்டு அப்பாட்டுக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது.
அன்றைய போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுமே கவுன்சலிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளரின் மனநிலை, அவர் எதற்காக பந்தை பவுன்சராக வீசினார் என்பவையெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குதான் நன்கு தெரியும் என்பதால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அப்பாட்டுக்கு சப்போட் செய்துள்ளனர். கிளன் மெக்ராத், பிரெட்லீ, ஷான் பொல்லாக் போன்றோர், அப்பாட்டுக்காகவும் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அவர் சோர்ந்து விட கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment