வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன் – லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
2015–ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் சுருக்க முறைத் திருத்தத்தை ஆன் – லைன் வழியாகச் செய்வதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முக்கியத்துவம் தருகிறது. வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முறை 15–ந் தேதி தொடங்கியது.
1.1.15 அன்று வரை 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு ஆன் – லைனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எண்ணிக்கை உயர்வு
பெயர் சேர்ப்பு மட்டுமல்ல, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றையும் செய்யலாம். ஆன் – லைன் மூலம் விண்ணப்பிப்பதால், பெயர்ப் பதிவுப் பணி உடனே முடிவது மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலிலும், வாக்காளர் புகைப்பட அட்டையிலும், தவறில்லாமல் மிகச் சரியான பதிவுகளை செய்ய முடியும். www.elections.tn.gov.in/eregistration என்ற இணையதளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆன் – லைன் பதிவு வசதிக்காக, இந்த வசதி கொண்ட தமிழகம் முழுவதும் உள்ள இணையதள மையங்களின் எண்ணிக்கையை ஆயிரத்து 300–ஆக உயர்த்தியிருக்கிறோம். இவற்றில் ஏதாவது ஒரு மையத்துக்குச் சென்று அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது சேவை மையம்
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொது சேவை மையங்களிலும் இந்த இணையதள வசதியை மக்கள் பெற்றுக் கொள்ளும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முதன்முறையாக போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள புறநகர்களில் இந்த மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், அரசு முகமைகள் இயங்கும் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தாலுகா அலுவலகங்களில் உள்ள அரசு பொது இ–சேவை மையங்களில் இந்த வசதிகள் உள்ளன.
குறைந்த கட்டணம்
குறிப்பிட்ட தொகையை செலுத்தி இந்த ஆன் – லைன் வசதியை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை செலுத்துவதற்கு ரூ.10–ம், ‘‘பிரிண்ட்’’ எடுப்பதற்கு ஒரு பக்கத்துக்கு ரூ.3 என்றும் குறைந்த அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் சொந்த கம்ப்யூட்டரையும் அல்லது லாப் டாப்பையும் இதற்காக பயன்படுத்த முடியும். எனவே சுருக்கத் திருத்த முறை நிறைவடையும் நவம்பர் 10–ந் தேதிக்குள் இந்த வசதிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment