10-வது வகுப்பு மாணவியை வீட்டில் சிறை வைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இசைப்பள்ளி ஆசிரியரை போலீசார் தேடிவருகிறார்கள். வீட்டில் அடைத்து சிறை வைக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்டனர்.
சென்னையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
10-வது வகுப்பு மாணவி கடத்தல்
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் திவ்யா (வயது 16-பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை சைதாப்பேட்டையில் பெற்றோருடன் வசிக்கிறார். இவர் சென்னை தியாகராயநகரில் உள்ள பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படிக்கிறார். கடந்த 17-ந் தேதி அன்று பள்ளி சென்ற மாணவி திவ்யாவை காணவில்லை. பள்ளி முடிந்து வீடு செல்வதற்காக, தியாகராயநகர் தண்டபாணி தெருவில் நடந்துவந்த மாணவி திவ்யா கடத்தப்பட்டார்.
காரில் வந்த நபர் ஒருவர் மாணவி திவ்யாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளார். அதன்பிறகு திவ்யாவின் கதி என்ன ஆனது?, திவ்யாவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றது யார்?, எதற்காக காரில் ஏற்றிச்செல்லப்பட்டார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், திவ்யாவின் பெற்றோர் பரிதவித்தனர். திவ்யாவின் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை.
போலீசார் தேடுதல் வேட்டை
திவ்யா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், பயந்துபோன அவரது பெற்றோர், சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். சைதாப்பேட்டை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தினி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவி திவ்யாவின் செல்போனை கண்காணித்து ஆய்வு செய்தபோது, அவர் சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியில் இருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது.
ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியின் உதவியுடன், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தினி, ஜெ.ஜெ.நகர் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார். அங்குள்ள வண்டிக்காரன் தெருவில் ஒரு வீட்டில் மாணவி திவ்யா சிறை வைக்கப்பட்டிருந்தார். அந்த வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் இருந்து திவ்யாவின் அபயக்குரல் கேட்டது.
கதவை உடைத்து மீட்டனர்
உடனே போலீசார் கதவை உடைத்து, வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் ஒரு அறையில் திவ்யா அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். மாணவியை வீட்டில் சிறை வைத்தது, அவர் படிக்கும் பள்ளியில் இசை பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் என்று தெரியவந்தது.
மாணவியை அவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்து வந்து, தனது வீட்டில் சிறை வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரது செக்ஸ் இச்சைக்கு மாணவி ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை அறையில் அடைத்து வைத்து, 2 நாட்கள் சாப்பாடு எதுவும் கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். போலீசார் தனது வீட்டை முற்றுகையிட்டதை பார்த்த ஆசிரியர், வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்துள்ளது.
கைது செய்ய தீவிரம்
தப்பி ஓடிய அவரை போலீசார் தேடிவருகிறார்கள். மாணவியை அதிரடி நடவடிக்கை எடுத்து பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சைதாப்பேட்டை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தினி ஆகியோருக்கு, கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தப்பி ஓடிய இசைப்பயிற்சி ஆசிரியரை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் தேடும் ஆசிரியர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. மனைவியை பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.
அவர் தனது வீட்டிலேயே இசைப்பயிற்சி பள்ளி நடத்தி வந்துள்ளார். அவரிடம் நிறைய மாணவ-மாணவிகள் இசைப்பயிற்சி பெற்று வந்துள்ளனர். அந்த மாணவிகளிடமும், அவர் செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டால், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment