கோபி அருகே கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரேஷன்கடை விற்பனையாளர்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர் கொங்கர்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மாலதி (வயது 29). இவர்களுக்கு கவின் (14) என்கிற மகனும், தனுஸ்ரீ (11) என்கிற மகளும் உள்ளனர். இதில் கவின் 9-ம் வகுப்பும், தனுஸ்ரீ 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இரவு ரவிச்சந்திரன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய நாக்கு அறுபட்ட நிலையில் ரத்தக்கறையுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் போராட்டம்
ஆஸ்பத்திரியில் ரவிச்சந்திரனின் உடல் 11-ந்தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ரவிசந்திரனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும், கொலையாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். போலீசார் சமரசத்துக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.
கள்ளக்காதல்
ரவிச்சந்திரன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் பொன்னுசாமி என்பவருடைய மகன் சீனி என்கிற சின்னுசாமி (30) குடியிருந்து வந்தார். அவர் டிரைவராக உள்ளார். பக்கத்து வீடு என்பதால் சின்னுசாமி அடிக்கடி அவரின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது சின்னுசாமிக்கும், ரவிச்சந்திரனின் மனைவி மாலதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் ரவிச்சந்திரனுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி மாலதியை கண்டித்தார். இதனால் சின்னுசாமியும், மாலதியும் மேற்கொண்டு பழகுவதற்கு முடியவில்லை. எனவே ரவிச்சந்திரனை கொலை செய்ய மாலதியும், சின்னுசாமியும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந்தேதி இரவு ரவிச்சந்திரன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது சின்னுசாமி அங்கு வந்தார். பிறகு சின்னுசாமியும், மாலதியும் சேர்ந்து ரவிச்சந்திரனை கொலை செய்ததாக தெரிகிறது.
மேற்கண்ட விவரங்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மாலதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சின்னுசாமி நேற்றுக்காலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சக்திவேலிடம் சரண் அடைந்தார். அவர் சின்னுசாமியை பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து சின்னுசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசாரிடம் சின்னுசாமி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், ரவிசந்திரனின் மனைவி மாலதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 5 வருடங்களாக பழகி வந்தோம். எங்களுடைய கள்ளக்காதல் ரவிச்சந்திரனுக்கு தெரியவந்தது. இதனால் எங்களது கள்ளத்தொடர்பை அவர் கண்டித்தார். மேலும் நாங்கள் பழகுவதற்கு அவர் தடையாக இருந்தார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து ரவிச்சந்திரனை கொலை செய்ய திட்டமிட்டோம்.
சம்பவத்தன்று இரவு ரவிச்சந்திரன் தூங்கிக்கொண்டு இருந்தார். நான் தலையணையை எடுத்து ரவிச்சந்திரனின் முகத்தை அழுத்தினேன். அவர் தலையணையை தடுத்து சத்தம்போட முயன்றார். இதனால் கத்தியை எடுத்து அவருடைய நாக்கை அறுத்தேன். பின்னர் துப்பட்டாவை எடு த்து ரவிச்சந்திரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். அப்போது ரவிச்சந்திரனின் கால்களை மாலதி இறுக்கமாக பிடித்துக்கொண்டார். ரவிச்சந்திரன் இறந்ததும் நான் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டேன்.
சிறிதுநேரம் கழித்து தனது கணவர் ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக மாலதி அக்கம் பக்கத்தினர் நம்பும்படி கூறினார். இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் உண்மை சம்பவம் அம்பலமானது. எனவே தலைமறைவாக இருந்த நான் மாட்டிக்கொள்வேன் என்று பயந்து சரண் அடைந்துவிட்டேன்.
இவ்வாறு சின்னுசாமி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment