கனவு இல்லம் எதிர்பார்த்த அழகியலில் அமைய வேண்டும் என்றால் அதற்கு சரியான திட்டமிடுதல் அவசியம். கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உடனுக்குடன் செய்துவிட வேண்டும். அந்த பணிகளை முடிப்பதில் காலம் தாழ்த்தக்கூடாது. அப்படிப்பட்ட பணிகளில் மின் இணைப்பு வசதி கொடுப்பதும் முக்கியமானதாகும்.
முடிவு செய்ய வேண்டும்
சிலர் மின் இணைப்பு கொடுப்பது பற்றி கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில்தான் சிந்திப்பார்கள். கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின் இணைப்பு கொடுப்பதற்கான இடவசதியை வரையறை செய்வது அவசியம். எந்த இடத்தில் சுவிட்சு போர்டு அமைப்பது என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்டால் அதற்கு ஏற்ப மின் இணைப்பு கொடுப்பது சுலபமாக இருக்கும்.
அப்படி இல்லாத பட்சத்தில் சுவர்களை உடைப்பது, துளையிடுவது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அது கட்டிடத்தின் வலிமையை பாதிக்கும் செயலாக மாறக்கூடும். அத்துடன் வீட்டின் அழகும் குறைபட நேரிடும். அதனால் முதலிலேயே ஒவ்வொரு அறைக்கும் மின் இணைப்பு வசதியை எப்படி அமைக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். எந்த அறையில் என்ன பொருட்கள் வைக்கப்போகிறோம் என்பது பற்றி பட்டியல் தயார் செய்துவிட வேண்டும்.
பயன்படுத்த சிரமம்
அதில் இடம்பெறும் மின் சாதன பொருட்கள் அறையின் எந்த மூலையில் அமைத்தால் பயன்படுத்துவதற்கு சவுகரியமாக இருக்கும் என்பதையும் கவனித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு வசதியாக இருக்கும். சிலர் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கட்டுமான பணியின்போது அவசர அவசரமாக மின் இணைப்பு வசதியை கொடுத்துவிடுகிறார்கள். அதில் பெயரளவிற்கு அறையில் இடம்பெறும் சில பொருட்களுக்கான மின் இணைப்பு வசதி மட்டுமே ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.
சுவிட்சு போர்டை ஏதாவது ஒரு மூலையில் பொருத்தி இருப்பார்கள். அதை பயன்படுத்துவது சிரமமாகவும் மாறக்கூடும். கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாமல் இருந்துவிட்டால் அதுவும் பிரச்சினையாக அமையும். அயன்பாக்ஸ் போன்ற மின் சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு சுவிட்சுகள் மேஜைக்கு பக்கத்தில் அமைந்து இருப்பது சுலபமாக இருக்கும். அது குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பதும் முக்கியம்.
அறையின் அழகு பாழ்படும்
இதுபோல டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி போன்ற பொருட்கள் பயன்பாட்டுக்கு ஏற்றபடி சுவிட்சுகள் அமைப்பு இருக்க வேண்டும். இதை எல்லாம் கவனிக்காமல் சுவிட்சு போர்டுகளை ஒரே நேர்கோட்டில் அமைத்து விடக்கூடாது. பொருட்களின் உயரம், பயன்படுத்தும் இடம் போன்றவற்றை கவனித்தில் கொண்டு சுவிட்சுகளை அமைக்க வேண்டும். அவை ஆங்காங்கே இடம் பெற்று இருந்தாலும் அறையின் அழகியலில் பங்கெடுப்பதாகவும் இருக்க வேண்டும்.
சில இடங்களில் சுவிட்சு போர்டு ஒரு இடத்தில் இருக்கும். அதில் இருந்து மின் இணைப்பு பெறுவதற்கு நீண்ட ஒயரை பயன்படுத்த வேண்டி இருக்கும். அதுபோன்று சரியான திட்டமிடல் இன்றி சுவிட்சுகளை அமைப்பது பயன்படுத்துவதற்கு சுமையாகவே மாறும். மீண்டும் மின் இணைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்காக சுவரை சிதைக்க நேருவது அறையின் அழகை பாழ்படுத்தும். சுவரை உடைக்காமல் மின் இணைப்பு குழாயை சுவரின் மேல் பக்கம் வழியாக அமைக்க முயல்வதும் அறைக்கு அழகு சேர்ப்பதாக மாறாது.
எதிர்கால தேவை
ஆகையால் மின் இணைப்பு வசதியை கட்டுமான நிலையிலேயே சரியான திட்டமிடுதலுடன் அமைக்க வேண்டும். அறையின் வரை படத்தின் வாயிலாக எந்த பொருட்களை எந்த இடத்தில் வைக்கப்போகிறோம் என்பது பற்றி குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அது வேலையை எளிதாக்கும். வரவேற்பறையில் இடம்பெறும் மின்சாதன பொருட்கள் அழகாக ஒளிருவதற்கு ஏதுவாக சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.
அதற்கு முதலிலேயே அங்கு இடம்பெறும் பொருட்கள் பற்றிய பட்டியலை தயார் செய்துவிட வேண்டும். அத்துடன் எதிர்கால தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிதாக மின்சாதன பொருட்கள் வாங்கும்போது அதை உபயோகிப்பதற்கு ஏற்ற வகையில் மின் இணைப்பு வசதியை ஆரம்பத்திலேயே ஏற்படுத்தி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் மின் இணைப்பில் மாற்றம் செய்ய நினைப்பது சிரமத்தை ஏற்படுத்தும். ஆகவே சரியான திட்டமிடலும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்துவது அறையின் அழகுக்கும், கட்டுமானத்தின் வலிமைக்கும் நல்லது.
No comments:
Post a Comment