ஜெயலலிதா கைதால் உயிரிழந்த 193 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டார்.
ஜெயலலிதா சிறையிலடைக்கப் பட்ட தகவல் அறிந்து அதிமுகவினர் பலர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்கள்.
இந்நிலையில், தற்போது ஜாமீன் வெளி வந்துள்ளார் ஜெயலலிதா. தான் சந்திக்கும் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு அவர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைப் பார்த்து உள்ளம் வெதும்பி, நான் சந்திக்கும் துயரங்களைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல், என் மீது மிகுந்த பேரன்பு கொண்டுள்ள தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; குறிப்பாக, என் இதயத்தின் ஆழத்தில் வேர் விட்டிருக்கும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்ற துயரச் செய்தி கேட்டும்; மேலும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் தாங்கொணா வேதனை அடைகிறேன். இந்தச் செய்தி எனக்கு மிகுந்த மன வலியைத் தருகிறது.
எனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த 193 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு; மரணமடைந்தோர்களது குடும்பத்தினருக்கு அ.தி.மு.க.வின் சார்பில் தலா மூன்று லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதையும்; மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எனக்கு ஏற்பட்ட சூழ் நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. தன்னையே மாய்த்துக் கொள்ளும் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment