இடிந்தகரை: ஆம்-ஆத்மி கட்சியிலிருந்து விலகியுள்ளார் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயக்குமார்
எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் உதயக்குமார் குழுவினர் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் அக்கட்சியிலிருந்து உதயக்குமார் உள்ளிட்டோர் விலகியுள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது....
மாற்றியமைப்பு
ஆம் ஆத்மி கட்சியோடான எனது உறவை மாற்றியமைத்திருக்கிறேன். செப்டம்பர் 19, 2014 அன்று நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சார்ந்த தம்பி ஸ்டீபன் அமிர்தராஜ் மற்றும் பிகார் நண்பர் குமார் சுந்தரத்தோடு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை தில்லியிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினேன்.
அடையாளப்படுத்துவது உகந்ததல்ல
தமிழகத்திலும், கேரளத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க வேலைகளை முனைப்புடன் செய்து கொண்டிருப்பதால் கட்சிப் பொறுப்புக்களை என்னால் ஏற்க முடியாது. அதுபோல இவ்விரண்டு மாநிலங்களிலும் பல தரப்பு மக்களோடு இணைந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால், ஒரு கட்சியோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வது உகந்ததல்ல எனும் நிலையையும் விளக்கிச் சொன்னேன்.
தெளிவான நிலை இல்லை
ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் அணுசக்திக் கொள்கை பற்றி ஒரு தெளிவான, வெளிப்படையான நிலையை எடுக்கவில்லை, கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இந்தப் பிரச்சினை குறித்து எதுவும் சொல்லவில்லை எனும் எனது ஆதங்கங்களைப் பதிவு செய்தேன். இருவருமாக மனந்திறந்து நடத்திய ஒரு விவாதத்துக்குப் பிறகு, தமிழகத்திலும், கேரளத்திலும் நான் சுதந்திரமாக இயங்குவது என்றும், தில்லி சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது நான் கட்சிக்காக என்னாலான வேலைகளைச் செய்வதாகவும் ஒத்துக் கொண்டோம்.
ஒட்டுமொத்தமாக அறுத்துக் கொள்ளவில்லை
ஆம் ஆத்மியோடான உறவை ஒட்டுமொத்தமாக அறுத்துக்கொள்ள விரும்பாததற்கு பல காரணங்கள் இருகின்றன. மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கும், ஊழல்வாத காங்கிரசு கட்சிக்கும் இந்திய அளவிலே ஒரு மாற்று தேவைப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறேன். தோழர் திருமாவளவன், தோழர் கணேசமூர்த்தி போன்றோர் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் தில்லியிலே நமக்குத் தோழர்கள் வேண்டும் என்பதை உணர்கிறேன்.
தனிமைப்படுத்தப்படக் கூடாது
கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில், காவிரி, முல்லைப் பெரியார் உள்ளிட்ட அனைத்து தமிழர் பிரச்சினைகளும் தில்லியிலே முடிவு செய்யப்படுவதால், நாம் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன். கேரளத்தையும் தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதற்கு காரணம் கூடங்குளம், நியூட்ரினோ பிரச்சினைகளில் அவர்கள் நம்மை ஆதரிப்பதால்தான். இம்மாதிரியான ஒத்துழைப்பின் மூலம், கேரளாவோடான பிற சிக்கல்களில் நியாயமான தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுவதால்தான்.
கற்பனை கூட செய்ததில்லை
அரசியலில் முனைவர் பட்டம் பெற்று, கிரேக்க அரசியல் முதல் கட்டுடைப்பு (deconstruction) விழுமியம் வரை பயின்ற நான் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து, அவர்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நடவடிக்கைகளுக்குத் தலைவணங்கி, தலைவர்களுக்கு ‘ஜே' போட்டு அரசியல்வாதியாய் நடப்பேன், தேர்தலில் நிற்பேன், வீடு வீடாக வாக்கு சேகரிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனை செய்ததுகூடக் கிடையாது.
பசுமைச் சிந்தனையாளன்
என்னை ஒரு பசுமைச் சிந்தனையாளன், தமிழ்த்தேசியன், சமத்துவவாதி, மனிதநேயன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நான், கொள்கைகளில் தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சியில் எப்படி நிலைத்திருக்க முடியும் என்ற குழப்பம் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. கேப்டன் கோபிநாத்தும், மீரா சான்யாலும் அங்கம் வகிக்கும் கட்சியில் நானும் எப்படி இயங்குவது என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் மேதா பட்கர், தயாமணி பர்லா, சோனி சோரி, ரச்னா டிங்க்ரா, அனிதா பிரதாப், அலோக் அகர்வால் போன்ற போராளித் தோழர்களுடன் இணைந்து நின்றது ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது.
ஆம் ஆத்மி கட்சியோடு இணைந்து பயணிக்க தீர்மானித்தது குறித்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே அட்டவணையிடுகிறேன்:
[1] செப்டம்பர் 2012
தமிழக அரசின், காவல் துறையின் மிகப் பெரிய அடக்குமுறைக்கு நாங்கள் ஆளானபோது அரவிந்த் கேஜ்ரிவால் இடிந்தகரைக்கு வந்தார்; தன்னந்தனியாக கூடங்குளம் காவல் நிலையம் சென்று எங்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரித்தார்; நாங்கள் ஏன் சரணடைய வேண்டும் என்று கேள்வி கேட்டார்.
[2] நவம்பர் 27, 2013
மதவாத, ஊழல் கட்சிகளான காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் மாற்றாக புது தில்லி மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்தது. இந்தியா ஒரு புதிய விடியலுக்காக ஏங்கி நிற்கும் வேளையில், நமக்கு புது கனவுகளும், புது பார்வைகளும், புது கருத்துக்களும், புது அணுகுமுறைகளும், புது தலைமையும் தேவைப்படுகின்றன. இந்த புது விடயம் புது தில்லியிலிருந்து துவங்கட்டும் என்று வாழ்த்தினோம்.
[3] டிசம்பர் 10, 2013
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவான தமிழக அரசியல் கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்து நிற்கவைக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், டிசம்பர் 1௦, 2௦13 அன்று பிரசாந்த் பூஷண் இடிந்தகரைக்கு வந்து எங்களை ஆம் ஆத்மி கட்சியில் சேரும்படி அழைத்தார். அன்றைய தினமே எங்களின் நெல்லை நகர ஆதரவுக் குழுவையும், வேறு சில நண்பர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டக் குழுவினர் கலந்தாலோசித்தோம். ஐந்து நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அந்தக் கட்சி தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று தீர்மானித்தோம்.
4] ஜனவரி 6, 2014
ஆம் ஆத்மி கட்சியினரின் அழைப்பைப் பற்றியும், எங்கள் நிபந்தனைகள் பற்றியெல்லாம் போராட்டக் குழுவினரும், தோழர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், தோழர் அரிமாவளவன் ஆகியோர் விவாதித்து ஒரு கடிதம் எழுதினோம். கட்சி அணுசக்திக் கொள்கை பற்றிய தங்கள் நிலையினைத் தெரிவிக்க வேண்டும்; கட்சிக்கு தமிழ் பெயர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்; தமிழ் ஈழம், தமிழ் மீனவர் மீதான தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற தமிழகம் தொடர்பான பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளைக் கேட்டுத்தான் முடிவுகள் எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.
[5] ஜனவரி 12, 2014
இடிந்தகரையில் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடத்தினோம். இரண்டரை ஆண்டுகளாக அறவழியில் போராடி, அதிகார வர்க்கம் பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில், அரசியல் தளத்திற்குச் சென்றேனும் ஒரு விடிவை உருவாக்க இயலுமா என்று போராடிய மக்களும், நாங்களும் சிந்தித்தோம்.
[6] ஜனவரி 26, 2014
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரம் மற்றும் உள்ளூர் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் இடிந்தகரையில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சுமார் 2௦௦ பேர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், தங்கள் ஊர் மக்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர். தென்தமிழக மக்களும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் சேர்ந்து நடத்திவரும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்றும், ஆம் ஆத்மியுடன் பேச்சு நடத்துவதும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விரிவாகப் பேசி முடிவு
ஒவ்வொரு நகர்வையும், முடிவையும் போராட்டக் குழுவில், இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழுவில், பெண்கள் குழுமத்தில், இளைஞர்கள் மத்தியில், ஒட்டுமொத்த சமுதாயக் கூடுகையில் விவரித்து, விவாதித்து, விரிவாகப் பேசித்தான் முடிவெடுத்தோம். முழுக்க முழுக்க திறந்தவெளித் தன்மையுடன், சனநாயகப் பண்புடன், மக்கள் நலத்தை முன்னிறுத்தியே இயங்கினோம். பற்பல கூட்டங்கள், நீண்ட விவாதங்கள், கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் என இந்த காலகட்டம் எளிதானதாகவோ, இனிமையானதாகவோ இருக்கவில்லை. தேர்தலில் சுயேச்சையாக நின்று குறைவான வாக்குகள் பெற்றால், போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சினோம்.
சிந்தித்துப் பார்த்தோம்
ஆம் ஆத்மியின் தில்லி வெற்றி; ஊழலுக்கும், நிர்வாகத் திறமையின்மைக்கும் எதிராக இந்திய மக்கள் எழுந்து நின்ற நிலை; போராட்டத்தை இடிந்தகரையிலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்; நாங்கள் ஊரை விட்டு வெளியே வரவேண்டியத் தேவை - என பல விடயங்களை சிந்தித்துப் பார்த்தோம். கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை தில்லியிலே முடிவு செய்யப்படுவது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து ஆம் ஆத்மி கட்சிக்கு 3௦-40 எம்.பி.க்கள் கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நம் மக்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாமே என்ற ஆசையும் இருந்தது.
7] பிப்ரவரி 12, 2014
"வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொள்ள இயலாது" எனக் குறிப்பிட்ட ஆம் ஆத்மி கட்சி, இதர நான்கு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. பின்னர் இடிந்தகரை மக்கள், சமுதாயத் தலைவர்கள் போன்றோரோடு பலமுறை மிக விரிவாக விவாதித்துத்தான் ஆம் ஆத்மி கட்சியில் சேருவது என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானித்தோம்.
[8] மார்ச் 29, 2014
இடிந்தகரையிலிருந்து வெளியே வந்த அன்றைய தினமே தேர்தல் பரப்புரைத் துவங்கினோம். போதிய நேரமின்றி, பணமின்றி, தொண்டர்களின்றி, அனுபவமின்றி ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்தோம். கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினையை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்றோம்.
[9] ஜூலை 4, 2014
தோழர்கள் மை.பா., தயாமணி பர்லா, மு. பாஸ்கர், ஸ்டீபன் அமிர்தராஜ் போன்றவர்களோடு அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் வீட்டில் சந்தித்தேன். மனீஷ் சிசோடியா, அஷுதோஷ், சஞ்சய் சிங் போன்றோர் அவருடன் இருந்தனர். அரவிந்த் என்னைப் பார்த்து "தமிழகத்தில் கட்சியைத் தலைமையேற்று நடத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார். மரியாதைக்காக ‘சரி' என்று சொல்லிவிட்டு, முதலில் இதைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்லி ஏற்கனவே தயாரித்துக் கொண்டுபோயிருந்த கோரிக்கை மனுவை அனைவரிடமும் கொடுத்தேன். அதில் கீழ்க்காணும் கேள்விகள் உட்பட பல கேள்விகள் கேட்டிருந்தேன்:
ராஜீவ் கொலை
இராஜீவ் காந்தி கொலைவழக்குக் கைதிகளுக்கு எதிராக அரவிந்த் கருத்துத் தெரிவித்து, அதை நான் உட்பட பலர் எதிர்த்த பிறகும், கட்சியின் தில்லி தலைமை எந்த விளக்கமும் அளிக்காதது ஏன்?
இந்தி பேசுகிறவர்கள் மட்டும் ஏன்
கட்சியின் உயர்மட்ட அரசியல் விவகாரக் குழுவிலிருக்கும் இந்தி மொழி பேசுகிற ஒன்பது ஆண்கள் மட்டுமே கட்சி மற்றும் நாடு தொடர்பான முடிவுகளை எடுக்கிறீர்கள்; தென்னிந்தியாவிலிருந்தும், வடகிழக்குப் பிரதேசத்திலிருந்தும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாதது ஏன்?
எதிர்பார்ப்பது தவறு
காங்கிரஸ், பி.ஜே.பி. கட்சிகள் போல அனைத்து முடிவுகளும் தில்லியிலே எடுக்கப்பட்டு, மாநிலங்களில் உள்ளவர்கள் தில்லி எசமானர்களுக்கும், இந்தி ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு; மாநில அமைப்புக்களுக்கு தன்னதிகாரம் வழங்க வேண்டும்.
தமிழக அரசியல் வேறுபட்டது
தமிழக அரசியல் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது; இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாடெங்கும் பி.ஜே.பி. வெற்றி பெற்றபோது, இங்கே அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதிலிருந்து இதை உணரலாம். அதனால்தான் கட்சிக்கு தமிழ்ப் பெயர் வேண்டுமேன்றோம். தில்லி ஏற்றுக் கொண்டாலும், தமிழகக் கிளை அதை பயன்படுத்தவில்லை.
பார்க்கவுமில்லை, படிக்கவும் இல்லை
அரவிந்த் உட்பட அனைவரும் மனுவை வாங்கிக் கொண்டாலும் யாரும் அதைப் படிக்கவுமில்லை, பார்க்கவுமில்லை என்பதை நான் கவனித்தேன். அடுத்த இரண்டு நாட்கள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் தில்லியில் நடந்தது. முழுக்க முழுக்க இந்தியில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் "இந்தியில் மட்டுமே பேசாதீர்கள், ஆங்கிலத்திலும் பேசுங்கள்" என்று தமிழக வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு மினிப் போராட்டமே நடத்தினோம். நான் கொடுத்திருந்த மனு பற்றியோ, அதிலுள்ள விடயங்கள் பற்றியோ ஏதாவது விவாதம் வரும் என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பச்சைத் தமிழ்த் தேசிய அரசியல்
மதவாத பாரதீய ஜனதாவுக்கும், ஊழல்மிக்க காங்கிரசுக்கும், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு தேசியக் கட்சி வேண்டும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அந்த அளவில் ஏழை எளிய மக்களின் அரசியல் ஆசாபாசங்களுக்கும், தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் ஆம் ஆத்மி கட்சி வாழட்டும், வளரட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் தமிழக நிலைமைகளை அறியாத, புரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத தில்லி தலைவர்களுக்கு காவடித் தூக்க நான் விரும்பவில்லை. தமிழர் பிரச்சினைகளை உண்மையாக, உணர்வுபூர்வமாக அணுகாத ஒரு கட்சி தமிழகத்தில் காலூன்ற உதவிய வரலாற்றுப் பிழையையும் நான் செய்ய விரும்பவில்லை. அரசியல்வாதி ஆவதோ, தலைவராவதோ எனது நோக்கமோ, விருப்பமோ அல்ல.
நெஞ்சார்ந்த நன்றி
இந்த நேரத்தில் தேர்தலின்போது பல வழிகளில் எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான பொருளாதார நெருக்கடியில் குடும்பம் உழன்று கொண்டிருந்த நிலையிலும், நானும் எனது மனைவியும் குடும்பத்தாரும் பல லட்சம் ரூபாய்களை எனக்காகவும், கட்சிக்காகவும் தேர்தலில் செலவிட்டோம். கட்சிக்கும், உதவிய தோழர்களுக்கும் விசுவாசமாகவே இருந்தேன். கட்சித் தலைமையோடு தொடர்பில் இருந்து, தில்லி சென்றபோதெல்லாம் தலைவர்களைச் சென்று சந்தித்து, எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். அனைத்து வழிகளிலும் முட்டிமோதி பார்த்துவிட்டுத்தான், இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.
நல்லதோ, நாசமோ...
அடுத்து என்ன செய்வது என்ற ஒரு கேள்வி எழுகிறது. தமிழகத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை, வருங்காலத்தை பேணிக்கொள்ளும் பச்சைத் தமிழ்த் தேசிய உணர்வினை, அரசியலை வளர்த்தெடுக்க என்னாலியன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருக்கிறது. இது குறித்த புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். டி. எஸ். இலியட் எனும் அமெரிக்கக் கவிஞர் சொல்வதுபோல, "For good or ill, let the wheel turn!" (வரப்போவது நல்லதோ நாசமோ, சக்கரம் சுழலட்டும்). உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், நல்லதே நடக்கும்! வணக்கம்!
No comments:
Post a Comment