16 சிறுமிகளை கொன்ற சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டெல்லி புறநகரான நொய்டா அருகே உள்ள நிதாரி கிராமத்தில் கடந்த 2005 மற்றும் 2006–ம் ஆண்டுகளில் சிறுமிகள் மாயமானார்கள்.
இதில் 16 சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற சுரேந்தர் கோலி, கடந்த செப்டம்பர் 8ம் திகதி தூக்கு தண்டனைக்கு எதிராக மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், அவனது தூக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
முன்னதாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொழில் அதிபர் மொகிந்தர் சிங், அவரது வீட்டு வேலைக்காரரான சுரேந்தர் கோலி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த இருவருக்கும் காசியா பாத் சிறப்பு நீதிமன்றம் 2009–ம் ஆண்டு பிப்ரவரி 13–ந் திகதி மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சுரேந்தர் கோலியும், மொகிந்தர் சிங்கும் அலகாபாத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் 2009 செப்டம்பர் 11ம் திகதி சுரேந்தர் கோலியின் தண்டனையை உறுதி செய்தது.
மொகிந்தர்சிங் விடுதலை செய்யப்பட்டார். தூக்கு தண்டனையை எதிர்த்து சுரேந்தர் கோலி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதே போல ஜனாதிபதியும் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து சுரேந்தர் கோலியை செப்டம்பர் 8ம் திகதி தூக்கில் போட ஜெயில் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் இருந்து மீரட் ஜெயிலுக்கும் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் தான் சுரேந்தர் கோலியை தூக்கிலிட நள்ளிரவில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இன்று அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் கோலி தூக்கு மேடைக்கு செல்வது உறுதியாகிவிட்டது.
No comments:
Post a Comment