திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்றார். ‘அறிவு உன்னை மகான் ஆக்கும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:–
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி. பகைவராலும் அழிக்க முடியாத கோட்டை. எத்தகைய சூழ்நிலையிலும் கோட்டை போல் நம்மை அறிவு காக்கும். கற்றல் கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி சிந்திக்கும் திறனைத் தூண்டுகிறது. சிந்தனை அறிவை வளர்க்கிறது. அறிவு உன்னை மகான் ஆக்குகிறது.
வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்துவது திருக்குறள்தான். இதில் அறிவு சார்ந்த பல பொருள்கள் உள்ளன. அறிவு என்பது மூன்று சமன்பாடுகளை உள்ளடக்கியதாகும். அறிவென்பது கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. கற்பனை சக்தி உருவாகுவதற்கு குடும்பம், பள்ளி சூழ்நிலைகள் முக்கிய காரணமாகின்றன. உள்ளம் உறுதி இளைய சமுதாயத்தின் ஆணிவேராகும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறிய லட்சியம் பெரிய குற்றமாகும்.
இந்த லட்சியத்தை அடைவதற்கு அறிவைத் தேடி தேடிப் பெற வேண்டும். லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதனுடன் விடாமுயற்சியும் வேண்டும். இந்த குணங்கள் ஒரு மாணவனிடம் இருந்தால் கண்டிப்பாக லட்சியத்தை அடையலாம்.
கனவு காண்பதென்பது ஒவ்வொரு இளைஞனுக்கும் முக்கியமான ஒன்றாகும். உறக்கத்தில் வருவது கனவல்ல. உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. அப்படிப்பட்ட கனவுதான் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையை வளர்க்கும். அந்த கனவை நனவாக்க வேண்டும் என்றால் அறிவை விரிவாக்க வேண்டும்.
இந்தச் சூழ்நிலை உருவாக ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். எண்ணத்திலே நல்லொழுக்கம் இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும். குடும்பத்தில் சாந்தி இருந்தால் நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை உயர்ந்தால் உலகத்தில் அமைதி நிலவும்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன் உழைப்பால், உன் உள்ளத்தின் உறுதியால் உன்னால் வெற்றியடைய முடியும்.
நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டும், பணி செய்து கொண்டும் இருக்கிறோம். இவைகளை செய்யும்போது, நமக்கு வாழ்வில் ஓர் லட்சியம் வேண்டும். அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் நீ நீயாக இரு. ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு இருக்க வேண்டும். மற்றவர்கள் போல் இருக்க வேண்டாம்.
இந்த உலகம் இரவும், பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் தெரியுமா?, உங்களையும் மற்றவர்களைப் போல ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழ மாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்தால், அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராயும் திறன், சிந்திக்கும் திறனை அறிந்து அதை வெளிக் கொணர வேண்டும். அவ்வாறு செய்தால் அது மாணவர்களின் படைப்புத் திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமையைப் பெற்ற மாணவர்கள் தங்களுடைய வாழ்நாளில் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவார்கள்.
இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
No comments:
Post a Comment