சென்னை ஐகோர்ட்டில் உதவியாளராகப் பணியாற்றுபவர் சீனிவாசன். நோயினால் பாதிக்கப்பட்ட அவரது மகன், அரசு காப்பீட்டுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் பணம் செலுத்திய பிறகே சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்காக செலவு செய்த தொகை ரூ.2.19 லட்சத்தை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சீனிவாசன் கேட்டார். சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிகளிடம்தான் அந்தத் தொகை தரப்படும் என்றும் தனிநபர்களிடம் பணம் கொடுக்கப்படாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் கூறிவிட்டது.
எனவே செலவுத் தொகையை அந்த நிறுவனம் கொடுக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் சீனிவாசன் மனு தாக்கல் செய்தார்.
அதுபோல, நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஜலஜா தனது கணவரை சென்னையில் அரசுக் காப்பீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
ஆனாலும் சிகிச்சைக்காக ரூ.2.50 லட்சம் தொகை செலவாகிவிட்டது. இந்தத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஜலஜா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இன்சூரன்ஸ் விவகாரங்களில் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு பட்டியலில் இடம் பெற்றிருந்தும், சிகிச்சைக்காக பணம் கேட்கும் ஆஸ்பத்திரிகளை பட்டியலில் இருந்து அரசு நீக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. இதுபோன்ற பிரச்சினையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுதாரர்கள் கேட்டும் தொகையை 9 சதவீத வட்டியுடன் இன்னும் ஒரு மாதத்தில் அரசு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment