மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இன்று பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சி ஒரு புறம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் மோடிக்கு எதிர்ப்பு அலையும் அங்கு உக்கிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடுபவர்கள் மோடிக்கு எதிராக ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் ஸ்கொயர் பகுதிக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் போராட்டம் என்று இவர்கள் தயாராகி வருகின்றனர்.
2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒரு மாநில முதல்வராக இவர் அடக்கவில்லை என்பது இவர்களது பெரும் புகார் ஆகும்.
இதுவல்லாமல் சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமை அமைப்பும் மோடிக்கு எதிராக 30ஆம் தேதி சிடிசன் கோர்ட் என்ற நடைமுறையை மேற்கொள்கிறது. வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிகப்பு கம்பளம் விரிக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த மனித உரிமை அமைப்பின் சிட்டிசன் கோர்ட் நடைபெறுகிறது. இது அமெரிக்கா முழுதும் அன்று லைவ் ஒளிபரப்பாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான நியாயப்பாடு இல்லையென்றாலும் அமெரிக்காவுக்கு முதன் முதலாக வருகை தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு இதனால் நெருக்கடியே என்று தெரிகிறது.
இதோடல்லாமல் நியூயார்க்கில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்று பெடரல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அளித்த அழைப்பாணைகளை மோடியிடம் சேர்ப்பிப்பவருக்கு 10,000 டாலர்கள் வெகுமதியும் அறிவித்துள்ளது.
இப்படியெல்லாம் நடப்பதை அமெரிக்க அரசு தடுக்குமா அல்லது அங்கு ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது செப்டம்பர் 30ஆம் தேதி தெரியவரும்.
No comments:
Post a Comment