சென்னை: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை நாளை எண்ணவுள்ளனர்.
செப்டம்பர் 18ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அடிதடி, மோதல்களுடன் இந்த வாக்குப் பதிவு நடந்தது. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் மேயர் பதவிக்கான வாக்குப்பதிவில், கோவையில் 45 சதவீதமும், தூத்துக்குடியில் 54 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. பின்னர் வாக்குப் பதிவு இயந்திங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வாக்கு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரட்சி மேயர் தேர்தலுடன், அங்கு காலியாக இருந்த 37-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான காமராஜ் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
கோவை மாநகரட்சி மேயர் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததை அடுத்து, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல், காஞ்சிபுரம், கடலூர், நாகை உட்பட பிற பகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. நாளை 22-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment