தென்அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அகோரப் பசி நோயால் அவதிப்படுகிறான். இந்த நிலையை மருத்துவர்கள் ப்ராடர்-வில்லி சிண்ட்ரோம் என்று அழைக்கின்றனர். இது மிகவும் அபூர்வமான மரபியல் நோயாகக் கருதப் படுகின்றது. எப்போதும் பசி, எப்போது உணவு உண்பதன் மீதான தீராத ஆசை என இந்த நோய் இந்த 3 வயதுக் குழந்தையை மிகவும் வாட்டி எடுப்பதாக அவனது பெற்றோர் புலம்புகின்றனர்.
பிரேசிலைச் சேர்ந்த மைக்கேலின் மகன் மிசேலுக்கு வந்துள்ள நோய், அவனை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உடலை குண்டாக்கி வருகிறது.
3 வயதை எட்டியுள்ள மிசேல், நாள்தோறும் 5 முதல் 6 முறை சாப்பிடுகிறான். அவ்வாறு ஆறு வேளைகளில் அவன் எடுத்துக் கொள்ளும் உணவு, சாதாரணமாக மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர்.
இவ்வளவுக்கும், மிசேல் பிறக்கும் போது 2.9 கிலோவாகத்தான் இருந்தானாம். ஆனால் பின்னர் அவனது எடை ஒவ்வொரு மாதமும் 2.5 கிலோ உயர்ந்து வருவதாக பெற்றோர் கூறுகின்றனர்.
இதனால் பலூனைப் போல் உடம்பு பெருத்துவிட்டதாகவும், அவனை அழைத்துக் கொண்டு எங்கும் செல்ல முடியவில்லை என்றும் பெற்றோர் வருத்தப் படுகின்றனர்.
மிசேலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ப்ராடர்-வில்லி சிண்ட்ரோம் என்ற பிரச்னை அவனுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர். இது மரபு வழி குறைபாடு என்று கூறும் அவர்கள், அளவுக்கதிமாக பசி, எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும் எண்ணம் ஆகியவைதான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
மிசேலை சிரமப்பட்டு வாடகை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பலர் அவனுடன் படம் எடுக்க ஆர்வத்துடன் வருவதாகக் கூறுகிறார் அவனது தந்தை மிக்கேல். தெருக்களில் செல்லும்போதும், தங்களைத் தடுத்து, உடன் படம் எடுத்துக் கொள்ளும் மக்கள், தங்கள் வாழ்க்கையில் இது போன்று எடையுடன் குழந்தையைப் பார்த்ததில்லை என்று கூறுகின்றனராம்.
இந்த நோய்க்கான நிரந்தரத் தீர்வும் மருத்துவமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக வருத்தமுடன் கூறுகிறார் அவரது தாயார். இருந்தாலும், குழந்தையின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தனக்குத் தெரியவில்லை என்று பாசம் நிறைந்த தாயாக அவர் தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார். பிரேசிலில் இந்தக் குழந்தையின் அபார உடல் பருமன், இப்போதைய பரபரப்புச் செய்தியாகியிருக்கிறது.
No comments:
Post a Comment