சென்னை: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் நிலையில் இன்று அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதே போல், கட்சியிலும் பல மாவட்டங்களில் மாற்றங்களை ஜெயலலிதா மேற்கொண்டார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் பதவிகள் பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டன் இல்லம் வர வேண்டும் என்று அவசர தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் அவசர அவசரமாக சென்னை வந்து சேர்ந்தனர்.
போயஸ் கார்டன் இல்லத்தில் காலை 10.30 மணியளவில் அமைச்சர்களுடன் ஜெயலலிதா நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தல் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தமிழகத்தில் மழை காலம் தொடங்க உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுரை கூறினார்.மேலும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்புக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மூத்த அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment