Latest News

வருமான வரி கணக்கு தாக்கல்… உபயோகமான தகவல்கள்!!


மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 25 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.
வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
‘மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்’ என்று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
நிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால்.
ஒரு நிதியாண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள்.
சம்பளம் தவிர, இதர வருமானம் உள்ளவர்கள்.
நிதியாண்டில் ஒருவரின் ஆண்டு நிகர வருமானம் (மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகள் எல்லாம் கழித்தது போக உள்ள தொகை) ரூ.2 லட்சத்தைத் தாண்டும்போது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.
 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.
கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.
 பங்குகள், மியூச்சுவல் யூனிட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால்.
மூலதன ஆதாய இழப்பு ஏற்பட்டு, அதனை அடுத்துவரும் ஆண்டுகளில் ஈடுகட்ட திட்டமிட்டிருந்தால்…
மேலே கூறப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அவசியம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, வரி தாக்கல் செய்வதற்காக யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
யாருக்கு என்ன படிவம்..!
‘நம்மில் பெரும்பாலானோருக்கு யார் எந்தப் படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் இருக்கிறது. அதைத் தவிர்க்கும் விதமாக அதை விரிவாகத் தந்திருக்கிறோம்.
ஐடிஆர் 1 (சஹஜ்)
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
வட்டி வருமானம்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
குறிப்பு:  ஐடிஆர் 1 – படிவத்தில் முதல்முறையாக வீட்டுக் கடன் வாங்குபவர் களுக்கு, 80இஇ பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற தனியாக இடம் விடப்பட்டிருக்கிறது. வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 2013 மற்றும் மார்ச் 31, 2014-க்கு இடையில் வாங்கப் பட்டிருக்கிறது எனில், பிரிவு 24-ன் கீழ் வழக்கமாகப் பெறும் வட்டிக்கான வரிச் சலுகை 1.5 லட்சம் ரூபாய் போக, கூடுதலாக 80இஇ-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். இதைப் பெற வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள்ளும், கடன் தொகை ரூ.25 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஐடிஆர் 2
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்.
மூலதன ஆதாயங்கள்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
 வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்.
பிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.
   குறிப்பு: பிரிவு 10-ன் கீழ் பெறும் வீட்டு வாடகை படி (ஹெச்ஆர்ஏ), விடுமுறை சுற்றுலா படி (எல்டிஏ) போன்றவற்றைத் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். இதேபோல், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் விற்பனை, சொத்து விற்பனை மூலமான மூலதன ஆதாயத்தையும் தனித் தனியாகக் குறிப்பிட வேண்டும். மேலும், மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க 80இசி-ன் கீழ் முதலீடு செய்யும் (என்ஹெச்ஏஐ/ஆர்இசி) மூலதன ஆதாய பாண்டுகள் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
  ஐடிஆர் 3
கூட்டு நிறுவனத்தில் பங்குதாரர் களாக இருப்பவர்கள்.
வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
ஐடிஆர் 4
தனி உரிமையாளர் பிசினஸ்.
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம்.
கமிஷன்.
ஐடிஆர் 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், குறிப்பாக கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள். இவர்களின் பிசினஸ் டேர்னோவர் ரூ.1 கோடிக்குள் இருக்க வேண்டும்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் (ஸ்பெக்குலேஷன்) மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐடிஆர் V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யும் படிவம்.(Verification Form)
 
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்துத் தருவார்கள்.வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்துவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது!
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில்
(இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.
(Visited 15 times, 15 visits today)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.