Latest News

காசா எரிகிறது! இசுரேலே பாலத்தீனத்திலிருந்து வெளியேறு! : மெரினாவில் மனித சங்கிலி போராட்டம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  பொதுச் செயலாளர்  கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை!

’’உலகத்தின் கண் முன்னே பாலத்தீனம் மீண்டும் பிணக்காடாக மாறி வருகிறது. காசா பிரதேசத்தில் தெருக்கள் எங்கும் கொப்பளிக்கும் குருதி ஆறு ஓடுகிறது. 

கடந்த சூலை 8-ஆம் நாள் தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக சுமார் 360 சதுர கிலோ மீட்டர் சிறிய பரப்புக்குள் யூத வெறி இசுரேலின் இடைவிடாத குண்டு மழைத் தாக்குதலில் பாலத்தீனம் எரிகிறது. வழக்கம் போல் ஐநா மன்றமும் அனைத்துலக சமூகமும் போர் நிறுத்தம் வலியுறுத்தி வெற்றுப் புலம்பல் புலம்புகின்றன. 


ஹமாஸ் அமைப்பினர் 3 இசுரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்றதற்கு பதில் தாக்குதல் இது என்று இசுரேல் அரசு கூறினாலும் உண்மையில் அவ்வரசின் தாக்குதல் இலக்காக மசூதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் ஆகியவையே உள்ளன. 


இரமலான் மாதத்தின் இப்தார் நோன்பு உணவை உண்டுக்கொண்டிருந்த 54 வயது பெண்மணி ஒருவர் கையில் கரண்டியோடு குருதி வெள்ளத்தில் பிணமாகச் சார்ய்ந்தார். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையும், மருத்துவமனையில் கொல்லப்படுகிறது. இனக்கொலையாளிகள் வழக்கமாகச் சொல்லும் பொய்க்காரணத்தையே இந்தக் கண்மூடித் தாக்குதலுக்குக் காரணமாக இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறுகிறார். “ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதி பாலத்தீன மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திகிறார்கள்” என்பதே அது. 


“மசூதி, குடியிருப்பு, மருத்துவமனை ஆகியவற்றில் பதுங்கிக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் இசுரேல் மீது இராக்கெட் தாக்குதல் நடத்துவதாலேயே நாங்கள் அவற்றின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறோம்” என்று கூறும் இசுரேல் அரசு இவ்விடங்களின் மீது வீசுவது தடைச் செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளாகும். 


கடந்த 2006 இறுதியில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலத்தீன் மக்களின் பெருபான்மை வாக்குகள் பெற்று பாலத்தீன நிர்வாக மன்றம் என்ற இடைக்கால ஆட்சிப் பகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஹமாஸ் அமைப்பினர். இவர்களைத் தான் பயங்கரவாதி என இசுரேல் அரசு கூறுகிறது.


இத்தேர்தல் முடிவு வந்த நாளிலிருந்தே காசா பகுதியின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உணவும். மருந்தும். சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களும் கிடைக்காமல் அப்பகுதி பாலத்தீனர்கள் கடும் நெருக்கடியில தத்தளித்து வருகின்றனர். உலகின் மிக மிக வறுமைப்பட்டப் பிரதேசமாக காசா அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த பகுதியின் மீது தான் கடந்த ஒரு வாரத்திற்குள் 1000க்கும் மேற்பட்ட முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி வான் தாக்குதல் நடத்தியுள்ளது இசுரேல் யூத வெறி அரசு.


இடிக்கப்பட்ட ஒரு வீட்டுக் கூரையின் மீது வெள்ளைக் கொடியை அசைத்தவாறு நின்றிருந்த ஒரு பாலத்தீன குடும்பத்தினர் மீது கடந்த 12.07.2014 அன்று இசுரேல் நடத்திய வான் படைத் தாக்குதலில் அக்குடும்பத்தினர் 17 பேரும் மாண்டனர். உண்மையில் இப்போதைய இந்தத் தாக்குதலுக்குக் காரணம் இசுரேல் இளைஞர்கள் கடத்தப்பட்டது அல்ல.


கடந்த 7 ஆண்டுகளாக பிளவுபட்டிருந்த ஹமாஸ் அமைப்பினரும் பாலஸ்தீன விடுதலை அமைப்பினரும் (பி.எல்.ஓ) ஒன்றிணைவது என முடிவெடுத்து கடந்த 2014 ஏப்ரல் 23 அன்று ஒர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.


காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரும், மேற்குக் கரைப் பகுதியில் பி.எல்.ஓ அமைப்பினரும் பிரிந்து நிர்வாகம் நடத்தி வந்த நிலையை மாற்றி ஒட்டுமொத்தப் பாலத்தீனர்களுக்கும் ஒன்றுப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை ஹமாசும் பி.எல்.ஓ-வும் உருவாக்க இவ்வொப்பந்தத்தில் ஒத்துக்கொண்டனர். 6 மாதத்திற்குள் பாலத்தீன நிர்வாக மன்றத்திற்குப் புதிதாக தோ;தல் நடத்தவும் ஏற்றுக்கொண்டனர்.


இசுரேல் - வட அமெரிக்க வல்லரசு கையடக்க ஆளாக இருந்த பி.எல்.ஓ தலைவர் அப்பாஸ் ஹமாஸ் போராளி அமைப்போடு இவ்வாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டது ஆக்கிரமப்பாளர்களின் ஆதிக்க வெறித் திட்டத்தில் மண்ணைப் போட்டது.

இதில் ஆத்திரமுற்ற ஜியோனிய இசுரேல் அரசு அன்று இரவே (ஏப்ரல் 24) காசா மீது வான் தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த இனக்கொலைத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதுவரை 160 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி யுள்ளது, இசுரேல் அரசு. பல்லாயிரக்கணக்கானோர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத வகையில் கொடுங்காயம் அடைந்துள்ளனர். தொகைதொகையாக வடக்கு காசா பகுதியை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனா;.


ஐநா மன்றத்தில் உறுப்பு வகிக்கும் நாடுகளில் 115 நாடுகளுக்கும் மேற்பட்டு பாலத்தீனப் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என அங்கீகரித்துள்ளன. முழு உறுப்பு நாடு என்ற நிலை இல்லா விட்டாலும் வாக்களிக்கும் உரிமையில்லாத உறுப்பு நாடாக பாலத்தீனம் ஐநா மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காசா, மேற்குக் கரை, கோலன் குன்று ஆகிய பாலத்தீன தாயகப்பகுதிகளை இசுரேலிய அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்று ஐநா மன்றம் வரையறுக்கிறது. 


உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலத்தீனத்திற்கு துணைத் தூதரகங்கள் உண்டு. அப்படியிருந்தும் மீண்டும், மீண்டும் சியோனிய இசுரேல் ஆண்டு தவறாமல் பாலத்தீனத்தின் மீது இனக்கொலைத் தாக்குதல் நடத்துவது இசுரேலின் தனி வலுவினால் அல்ல.


இசுரேல் எவ்வளவு முறை பன்னாட்டுச் சட்டங்களை மீறினாலும் அவை அனைத்திற்கும் முட்டுக் கொடுத்து வரும் பின்னணி பலம் வட அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். வட அமெரிக்க வல்லரசின் துணிச்சலில் தான் இசுரேல் தனது ஆக்கிரமிப்புப் போரை எந்த கேள்வியுமின்றி தொடர்கிறது. உண்மையில் இசுரேல் – வட அமெரிக்க அச்சு இணைந்து நடத்தும் ஆக்கிரமிப்பு தான் இந்த பாலத்தீன ஆக்கிரமிப்பு.


மத்தியக் கிழக்கில் உள்ள எண்ணெய் வளத்தை ஆதிக்கம் செய்ய மேற்குலக ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது இசுரேல் நாடு. ஆயினும் யூத இனத்திற்கு உரிய நாடாக இசுரேல் அமைந்திருப்பதில் யாருக்கும் எதிர்ப்பில்லை. பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் யாசர் அராபத் அவர்களே “இசுரேல் என்பது ஓர் வரலாற்று உண்மையாகி விட்டது. இசுரேலும், பாலத்தீனமும் அண்டை நாடுகளாக இருக்கலாம்” என்று ஏற்றுக்கொண்டார்.


இசுரேல் செய்யும் அனைத்து இனக்கொலை நடவடிக்கைக்கும் அரணாக வட அமெரிக்க வல்லரசு நிற்பதற்கு அரபு உலகத்தின் எண்ணெய் வளம் மட்டும் காரணமல்ல, வட அமெரிக்காவில் யூத இனம் வலுவான செல்வாக்குப் பெற்ற இனமாக இருப்பதே முக்கிய காரணமாகும்.


குடியரசுக் கட்சி, சனநாயக கட்சி, என எந்தக் கட்சி வட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சி யூத இன செல்வாக்கில் நடப்பது தான் வட அமெரிக்காவின் வழமை. ஒபாமாவும், அதற்கு விதிவிலக்கானவா; அல்ல. பொருளியல், கருத்தியல், அதிகாரவர்க்கத் தளங்களில் யூத இனத்தின் பிடி வட அமெரிக்காவில் மிக வலுவானது. 


யூத முதலாளிகள் படைக்கருவி உற்பத்தியிலும், வங்கித் துறையிலும் வலுவானவர்கள் ஆவர். டைம்ஸ் வார்னர், வால்ட்டிஸ்னி, பாக்ஸ் நியூஸ், ஏபிசி, என்பிசி, அசோசியேட்டட் பிரஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், நியூஸ் வீக் உள்ளிட்ட வலுவான ஊடகங்கள் அனைத்தும் யூதர்களுடையவை. அங்கு பணியாற்றும் முதன்மைச் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர் பெரும்பாலானோர் யூதர்களே. ஹாலிவுட் திரைத்துறை யூத ஆதிக்கத்திற்கு உட்பட்டது. 


சியோனிய அதிகார மையம் (Zionist Power Configuration - ZPC) என்ற அமைப்பு திட்டமிட்ட முறையில் வட அமெரிக்க அதிகார வர்க்கத்தை யூத மயமாக உருவாக்கி வருகிறது. வட அமெரிக்க இசுரேல் பொதுமக்கள் துறைக் குழு (American Israel Public Affairs Committee -AIPSC) என்ற அமைப்பு வட அமெரிக்க அரசியலாளர்களுக்கு பணம் அள்ளித்தரும் முதன்மையான நிறுவனமாகும். ஒபாமாவும், அவரது சனநாயகக் கட்சியும் இதில் அடங்கும்.


இவ்வாறு வட அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க ஆளும் சக்தி யூத இனத்தினர் ஆவர். இந்த யூத இணைப்புத் தான் இசுரேல் - வட அமெரிக்க அச்சின் அடிப்படையாகும்.

சனநாயகம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி என வாய் உபதேசம் செய்தாலும் எந்த மனித மாண்புகளையும் மதிக்காத அரசு வட அமெரிக்க வல்லரசு ஆகும். தேச அரசு, சனநாயக ஆட்சி முறை போன்ற எதுவும் இல்லாத பழைய மன்னர் ஆட்சிக் காலத்தை விட மிக மோசமான, நெறியற்றப் பேரரசாக (Empire) வட அமெரிக்கா செயல்படுகிறது.


அதனால் தான் சட்டப்படி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் ஆட்சியை வட அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. அதாவது தேர்தல் நடத்தி மக்கள் வாக்கு போடலாம், ஆனால் அது வட அமெரிக்க அரசு விரும்புவர்களுக்கு அளிக்கும் வாக்காக இருக்க வேண்டும் என்பது தான் வட அமெரிக்க முத்திரை சனநாயகம்.


ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டு உலகெங்கும் உள்ள தேச அரசுகளை ஆக்கிரமிக்கும் பேரரசாக விளங்கும் வட அமெரிக்க வல்லரசு தான் கடந்த 60 ஆண்டுகளாக பாலத்தீனத்தில் குருதிக் கொட்டுவதற்கு வலுவானக் காரணமாகும். இயற்கை வளத்தை சூறையாடும் பொருளியல் நோக்கமும், யூத இன இணைப்பும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மனித பேரழிவு இது.



அவ்வப்போது கோருவது போல் போர் நிறுத்தம் கோருவதால் மட்டும் சிக்கல் தீர்ந்துவிடாது. இது தீர்வதற்கு உடனடித்தேவை போர் நிறுத்தம். இறுதித் தீர்வு பாலத்தீன விடுதலை.


இந்த நிரந்தர தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பதே உலெங்கும் உள்ள மனித நேயர்களின் கடமை. ஏனெனில் மனித சுதந்திரம் என்பது அதன் குறிப்பான வடிவத்தில் தேசிய இன சுதந்திரமே ஆகும்.

இந்திய அரசு ஆக்கிரமிப்பாளன் இசுரேலையும், ஆக்கிரமிக்கப்பட்டப் பாலத்தீனத்தையும் சமத் தொலைவில் வைத்துப் பார்ப்பதும், இச்சிக்கல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே மறுப்பதும் அதன் வெளிப்படையான, வட அமெரிக்கச் சார்பை எடுத்துக் காட்டுகிறது. 


இந்திய அரசு, இசுரேலின் ஆக்கிரமிப்பை உறுதியாகக் கண்டிப்பதுடன் காசா மீதான வான்தாக்குதல் களையும், தரைவழி ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த பன்னாட்டு அரங்கத்தில் குரல் எழுப்ப வேண்டும். இசுரேலுடனான பொருளியல் உறவை நிறுத்தி வைக்க வேண்டும். பாலஸ்தீன விடுதலைக்கு உரிய பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். 


இசுரேலின் இனவெறியைக் கண்டித்தும், பாலத்தீனியர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆதரவுத் தெரிவிக்கும் வகையிலும், 19.07.2014) மாலை 4 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில், மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றை இளந்தமிழக இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இப்போராட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், மனித நேயர்களும் திரளாகக் கலந்து கொள்ள அழைக்கிறோம்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.