Latest News

  

இலங்கையில் இனக்கலவரம்: நடந்தது என்ன?

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை 2009ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு மட்டுப்பட்டு பேரினவாதிகளின் பார்வை இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள்மீது திரும்பியிருக்கின்றன. ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்குத் திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும்.

பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொது பலசேனா’ எனும் இயக்கமானது ஊர் ஊராகக் கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந்நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளைப் பல விதமாகத் துவேசத்தோடு பரப்பியது.

புனித பௌர்ணமி தினங்களில் பௌத்த விகாரைகளில் பௌத்த போதனைகளோடு சொல்லப்படும் பௌத்த பிக்கு ஞானசார தேரரின் வசீகரிக்கும் துவேசப் பேச்சால் மயங்கியவர்கள் அவரைப் பின்பற்றி அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். அவரைப் பின்பற்றும் கூட்டம் இலங்கை முழுவதும் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் பொதுபலசேனாவின் உத்தியோகப்பூர்வமான அலுவலகங்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளரும் மஹிந்த ராஜபக்?ஷவின் சகோதரருமான கோதபாய ராஜபக்?ஷவின் தலைமையில் நாட்டின் பிரதான நகரங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையில் 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவுக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் பெண்களும் பேரினவாதிகளால் இன்னல்களுக்குள்ளாகிய சம்பவங்களும் பதிவாகிக் கொண்டேயிருந்தன. ஹலால் உணவுகள் தொடர்பான சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. பேரினவாதிகள் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். பொய்யான வழக்குகளில் சிக்க வைத்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை எரித்தனர். பௌத்த பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களை இயங்க அனுமதிக்காது மூடச் செய்தனர்.

இவ்வாறான நிலையில் பௌத்த தேசத்தில் எங்கும் முஸ்லிம் மக்களுக்கு நீதி கிட்டவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் சச்சரவுகள் என வரும்போது பொறுமை காக்கவும் ஒதுங்கிச் செல்லவும் நிதானமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்தச் சச்சரவுகளுக்கும் வழியில்லாத நிலையில் ஏதேனும் சிறு பொறியாவது கிட்டாதா எனப் பொதுபலசேனா இயக்கம் காத்திருந்தது.

தர்கா நகர், அளுத்கம, பேருவளை பகுதிகள்முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள். இவை இலங்கையின் மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையோர பிரதேசங்கள் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களின் பிரதானத் தொழிலாக வியாபாரத்தைச் சொல்லலாம். இரத்தினக்கல் வியாபாரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். சர்வதேச அறபிக் கல்லூரியான ஜாமிய்யா நளீமிய்யா கல்லூரி இங்கிருக்கிறது. புராதனப் பெருமை வாய்ந்த பல பள்ளிவாசல்கள் இங்கிருக்கின்றன. இப்பிரதேசங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டவை. ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப் பட்டால், தப்பிச் செல்ல ஒரு தரைவழி மாத்திரமே உள்ள பிரதேசங்கள் என்பதால் இங்கு வாழும் முஸ்லிம் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது எளிது.

ஜூன் 12, வியாழக்கிழமை, பௌத்தர்களின் புனித தினமான பொஸொன் பௌர்ணமி. தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரர் பகல் நேரம், மோட்டார் வாகனமொன்றில் தனது சாரதியுடன் தெருவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எதிரே முஸ்லிம் இளைஞர்கள் இருவர் வீதியில் நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர். வண்டியின் சாரதியான சிங்களவர், அந்த இளைஞர்களைத்
தூஷண மொழியில் மோசமாகத் திட்டுகிறார். பதிலுக்கு முஸ்லிம் இளைஞர்களும் கோபமாகத் திட்டச் சத்தம் கேட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்துசாரதியையும் பிக்குவையும் பத்திரமாக அனுப்பிவைக்கின்றனர்.
மாலை நேரம் பேச்சுவாக்கில் பொதுபலசேனா உறுப்பினர் ஒருவரிடம் பகலில் நடந்த நிகழ்வை சாரதி விவரிக்கின்றார். அவர்கள் காவல் நிலையம் சென்று முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் சேர்ந்து ஒரு பௌத்த பிக்குவை மோசமாகத் தாக்கினர் என்று முறைப்பாடும் செய்தனர். சிங்கள ஊடகங்களுக்கு இவ்விடயத்தைத் தெரிவித்தனர். அவையும் இச்செய்திக்கு முன்னுரிமை வழங்கி, பிக்கு வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருக்கும் காட்சியையும் காட்டி, முழு இலங்கைக்கும் விடயத்தைத் தெரிவுபடுத்தின.

தம்மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாகக் காவல்நிலையம் சென்று உண்மை நிலையை எடுத்துரைத்தனர் என்ற போதிலும் போலிஸ் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் சிங்கள ஊடகங்கள் செய்தி அறிவிக்கவே பொதுபலசேனா இயக்க உறுப்பினர்களும் இன்னுமொரு இனவாத இயக்கமான இராவண பலய இயக்க உறுப்பினர்களும் சேர்ந்து அளுத்கம காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். அந்த நான்கு இளைஞர்களையும் உடனடியாகத் தம்மிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்று இறுதியில் கொழும்பு - காலி பிரதான வீதியின் போக்குவரத்து நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்தது. பதற்றமான சூழல் எங்கும் நிலவியது. அரசு சில அமைச்சர்களை அனுப்பி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர்களின் வாகனங்களுக்கும் தாக்குதல்கள் நடத்தவே, உடனடியாக இலங்கை போலிஸ்

மாஅதிபர் என்.கே. இலங்ககோன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விஜயம் செய்தார். கண்ணீர்க் குண்டுப் பிரயோகத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு காவல் துறையைப் பணித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்க் குண்டுப் பிரயோகம் நடத்தப்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடினர். இரவு 10.30 மணியளவில் முற்றாகச் சீரடைந்ததாகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலிஸால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 13, 2014 - வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். அவர்களை 25ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளையிடுகிறார். இளைஞர்களின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத் தரணிகள், இளைஞர்கள் சிறையில் வைத்துக் காவல் துறையினரால் தாக்குதல்களுக்குள்ளாகியதைச் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நீதவான், அவர்களைத் தனித் தனிச் சிறையிலடைக்குமாறு கட்டளையிடுகின்றார்.

ஜூன் 15, 2014 - ஞாயிற்றுக்கிழமை புனித பொஸொன் பௌர்ணமி தினத்தன்று பௌத்த பிக்கு தாக்குதலுக்குள்ளானதைக் கண்டித்துப் பொதுபலசேனா இயக்கம், அளுத்கம பிரதேசத்தில் ஒரு மாநாடும் பேரணியும் நடத்தவிருப்பதான தகவல் கசிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் அச்சமான சூழ்நிலை பரவுகிறது. உடனே செயற்படும் முஸ்லிம் தலைமைகள் 'பொதுபலசேனா உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் தற்போதைய சூழ்நிலையில் இப்பிரதேசத்தில் கூட்டங்களையும் பேரணியையும் நடத்துமானால், அது ஆபத்தினை ஏற்படுத்தும்' எனத் தெளிவுபடுத்தி, இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி போலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் மகஜரொன்றைக் கையளிக்கின்றனர்.

இக்கடிதத்தில் முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் எனப் பல அமைப்புக்கள் கையெழுத்திட்டிருந்தன. என்றபோதும் அன்று அக்கூட்டத்துக்கோ, பேரணிக்கோ தடை விதிக்கப்படவில்லை. அன்றே அவற்றுக்குத் தடை விதித்திருந்தால் பல அழிவுகளையும் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம் எனப் போலிஸ் மாஅதிபர் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிட்டதன்படி இராவண பலய, புத்த சாசன கமிட்டி, பொதுபலசேனா இயக்கம் ஆகியவை ஒன்றுசேர்ந்து கூட்டத்தை நடாத்தின. நாடுமுழுவதிலிருந்தும் திரண்டு வந்திருந்த மேற்படி இயக்க உறுப்பினர்களின் முன்னிலையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளரான கலகொட அத்தே ஞானசேர தேரர் இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாக மிகக் கொச்சையான மொழியில் உரையாற்றுகிறார். அந்த உரை கூட்டத்தை உசுப்பேற்றுகிறது.
கூட்ட முடிவில், முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் சித்தரித்த புத்தபிக்கு தங்கியிருக்கும் விகாரைக்கு, முஸ்லிம் பிரதேசங்களினூடாகப் பேரினவாத உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்கின்றனர். ஊர்வலம் செல்லும் வீதியோரமாக அமைந்திருக்கும் பள்ளிவாசல்மீதும் அங்கு தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் மீதும் ஊர்வலத்தில் வந்த பேரினவாதிகள் குழு தூஷண வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கற்களாலும் தடிகளாலும் தாக்கத் தொடங்குகிறது.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல் சேதமுறாதவண்ணம் தாக்குதலைச் சமாளிக்க அரணாக நின்று காயமடைகின்றனர். அதற்கு மேலும் பொறுமைகாக்க இயலாத முஸ்லிம் இளைஞர்கள் பதிலுக்கு ஆயுதங்களேதும் இல்லாத நிலையில் கற்களைக்கொண்டு திருப்பித் தாக்குகின்றனர். இதனால் வெருண்டோடும் பேரினவாதப் பௌத்த இளைஞர்கள் நகரிலிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொள்கின்றனர். கடைகளை உடைத்துப் பெறுமதியானவற்றை எடுத்துக் கொண்டு மீதமானவற்றைச் சேதப்படுத்திக் கடைகளை முற்றுமுழுதாக எரித்துவிடுகின்றனர். நிலைமையின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போகவே அப்பிரதேசத்தில் மாலை 6.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

அளுத்கம, பேருவளை, மருதானை, வெலிப்பிட்டிய, அம்பேபிட்டிய ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமலிலிருந்த போதிலும்கூட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. தமது பிரதேசங்களிலிருக்கும் பள்ளிவாசல்களும் எரிக் கப்படவே, கலவரக்காரர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிய முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் தப்பித்து வந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்தனர்.

ஞாயிறு நள்ளிரவு 12.30ஐத் தாண்டியபோது வன்முறையாளர்கள் குழு வெலிப்பிட்டிய பள்ளி வாசலுக்கு வந்து தம் தாக்குதலை ஆரம்பிக்கிறது. பள்ளிவாசலையும் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டி அரணாக முஸ்லிம் ஆண்கள் எல்லோரும் பள்ளிவாசலுக்கு வெளியே கைகோர்த்து நிற்கின்றனர். அவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காவலுக்கு இருந்த ஆண்கள் எவரும் பின்வாங்கவில்லை. இதனால் இளைஞர்கள் சிலர் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

ஜூன் 16, 2014 - திங்கட்கிழமை விடிவதற்குள்ளாகக் கடந்த ஒரு இரவில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பதுக்கும் அதிகமான வீடுகளும் இருபதுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களும் எண்ணிக்கையிலடங்காத வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் ஆட்டோக்களும் சேதப்படுத்தப்பட்டும் எரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இங்கு போலிஸ், விஷேட காவற்படையின் முன்னிலையிலேயே கலவரக்காரர்கள் வந்து வன்முறைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலிலிருக்கிறது. பட்டினியோடும் காயமடைந்தும் இருக்கும் மக்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து உலர் உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் ஆடைகளும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. என்றபோதும் அவை எவையும் பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச் சேரவில்லை.

அதே தினம் பகலில், வெலிப்பன்ன எனும் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பலபிடிய பிரதேசத்தில் பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதான நகர்களோடு, அப்பிரதேசங்களைச் சுற்றியுள்ள சிறிய முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் அன்றைய தினம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகிக்கொண்டேயிருந்ததோடு பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

தர்கா நகரில் இடம்பெறும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இராணுவமே செயற்பட்டு வருவதை எல்லோரும் கண்டுகொண்ட வேளையில் நகரின் நிலை குறித்துக் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவித்து, பள்ளிவாசல் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சுடன் பேசியபோது, ‘வீதிக்கு வீதி இராணுவத்தை அனுப்பிப் பாதுகாப்பு தருகிறோம்’ என்று பாதுகாப்பு அமைச்சு பதில் அளித்தது.

திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்தும் நிலவியது. ஜூன் 17, 2014 செவ்வாய்க்கிழமை, மக்கள் தாம் தஞ்சம் புகுந்திருந்த இடங்களிலேயே அச்சத்தோடும் பட்டினியோடும் பொழுதைக் கழித்தனர். நள்ளிரவு தாண்டியதும் மீண்டும் வெலிப்பன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது.

அரசாங்கம் பாதுகாப்புக்காக அனுப்பியிருந்த நான்கு போலிஸாரும் தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையுள்ளதாகக் கூறிக் கைவிரித்துவிட்ட நிலையில் வெலிப்பன்ன பிரதேசத்தின் இன்னுமிரு பகுதிகளான முஸ்லிம் கொலனி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை இரண்டிலும் நூறுக்கும் அதிகமான காடையர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினர். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையொன்றுக்குள் பிரவேசித்துக் காவலாளியாக நின்ற தமிழ் முதியவரைக் கொன்றுவிட்டுப் பண்ணையை எரித்தனர்.

மேலும் வெலிப்பன்ன பள்ளிவாசல் தாக்குதலுக் குள்ளாகியுள்ளதோடு, முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரியூட்டப்பட்டன. விடிந்ததும் அங்கு விஷேட அதிரடிப்படை வந்து சேர, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனவே, காலை எட்டு மணி முதல் பகல்

12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்தன. ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் தர்கா நகர் பிரதேசத்துக்குச் சென்ற சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவின் ஊடகவியலாளர் கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. அப்பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஜூன் 18, 2014 - புதன்கிழமை அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் அமலிலிருந்த ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் இன்னுமொரு முஸ்லிம் பிரதேசமான கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுத் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நள்ளிரவு சேதமாக்கப்பட்டிருந்ததோடு, இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டுப் பேருவளை, அல் ஹுமைஸரா கல்லூரியில் எங்கும் செல்ல வழியற்றுத் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி, அங்கு வந்த அரச உயரதிகாரிகள் கட்டளையிட்டார்கள். ஒன்றும் செய்ய வழியற்ற மக்கள் செல்ல மறுக்கவே அங்கு சலசலப்பு உண்டானது. சிறிது பதற்றமான சூழ்நிலை உருவானதும் உடனே அரச உயரதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
அன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சர்கள் சிலரோடு பேருவளைக்கு விஜயம் செய்தார். இஸ்லாமிய, பௌத்த மதத் தலைவர்களையும் பிரமுகர்கள் சிலரையும் வரவழைத்து வழமை போலவே ‘விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படும்’ என்ற பதிலை அளித்துவிட்டுத் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கவுமில்லை.
பாரிய இனக்கலவரக் காலப்பகுதியில் நாடு முழுவதும் முஸ்லிம் பிரதேசங்களில் பல அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அளுத்கம, தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மருந்தகம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதே போலப் பதுளை, கஹட்டோவிட்ட, குருந்துவத்த, வரக்காபொல, பாணந்துறை நகரங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்த காரணத்தால், மாவனல்லை நீதிமன்ற வளாகத்தில், காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள்மீது ஆசிட் தாக்குதல் இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்பட்டது. படு காயப்பட்ட நிலையில் போலிஸார் இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நாளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் எனும் பிக்கு, கடத்தப்பட்டுக் கை, கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து நிர்வாணமாக மீட்கப்பட்டார். 

அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், தாக்கியவர்கள் அவருக்குக் கத்னா (சுன்னத்) செய்ய முயற்சித்துள்ளமை வைத்தியப் பரிசோதனைகளை வைத்தும் காயங்களை வைத்தும் தெளிவானது. அதற்கு முன்னரும்கூடப் பொதுபலசேனா இயக்கத்தினால் பல தடவைகள் இவர் அச்சுறுத்தலுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தார். காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும்கூட இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்து வந்ததால் வைத்தியசாலையிலும் இவருக்குப் போலிஸ் காவல் வழங்கப்பட்டது.
எரிக்கப்பட்ட NO LIMIT ஆடை விற்பனை நிலையம்

பொதுபலசேனா இயக்கத்தால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வந்த ‘NO LIMIT - நோ லிமிட்’ எனும் பெரிய ஆடை விற்பனை நிலையம், 21.06.2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந்தெரியாதோரால் தீ மூட்டி முற்றுமுழுதாக எரிக்கப்பட்டது. முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பிரதான நகரங்கள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளன.
கலவரம் தோன்றி, நாட்டில் அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களும் அண்மைய வன்முறை நிகழ்வுகளின் காரணமாக மனச்சோர்வுக்காளான நிலையிலும் கொந்தளித்த நிலையிலும் காணப்பட்டபோது இலங்கையின் முக்கியத் தலைமைகள் கூறிய கருத்துக்கள், மக்களை மென்மேலும் அசௌகரியத்துக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் ஆளாக்கியுள்ளன.
சிங்கள இனவாதிகளால் தக்கப்படும் இஸ்லாமியருக்கு சொந்தமான மெடிக்கல்

இலங்கையின் நிலவரத்தில் உடனடியாகப் பங்குகொண்டு அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது பலசேனா இயக்கமும் அதன் செயலாளருமான ஞானசார தேரோதான் குற்றவாளி எனப் பகிரங்க மாகத் தெரிந்த பிறகும்கூட “இந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்ட குற்றவாளியை இனங்கண்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்” எனக் கூறியிருப்பதுவும் இலங்கையில் பொதுபலசேனா இயக்கத்தைத் தடை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டங்களை மறுத்ததும் சம்பவங்களின் பின்னணியில் அவர் இருப்பாரோ எனப் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த ஏதுவாகியிருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டிருக்கும் பொது சன உறவுகள், பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா “ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து தந்தால் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் தயார்” எனப் பகிரங்கமாக மேடைகளில் முழங்கினார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தர்கா நகர், பேருவளை பிரதேசங்களுக்குப் பொறுப்பான ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், தனக்குப் பொறுப்பான பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் அப்பிரதேசங்களுக்குச் செல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தார். காரணம் கேட்டபோது “முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேலைகள் காரணமாக என்னால் ஊர் செல்ல முடியவில்லை. இனிமேல்தான் செல்ல வேண்டும்” (செய்தி மூலம்: விடியல், 17-06-2014, 17:58) என்றார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், உடனே எந்த முயற்சி எடுத்தேனும் அதைத் தடுக்க வேண்டியவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இந்த வன்முறைகளின் முன்னிலையில் மௌனம் சாதித்தார். வன்முறைகள் நடைபெற்ற பிரதேசங்களுக்கு உடனடியாக இவர் சமூகமளிக்கவில்லை. இதனால் நாட்டின் முஸ்லிம் சமூகம், அவரைத் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வற்புறுத்தியது. ‘முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்கினால், பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ எனவும் கூறித் தனது பதவியைப் பாதுகாத்துக் கொண்டார்.

வன்முறை நிகழ்ந்த நாட்களில் இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே கலவரம் தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிட மறுத்தன. Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் வன்முறை குறித்தான தகவல்களையும் சம்பவங்களையும் உடனடியாகப் பகிர்ந்து கொண்டதால் பல சேதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிந்ததோடு, இலங்கையைத் தாண்டி சர்வதேசரீதியிலும்கூட இந்த அநீதியை உடனடியாகத் தெரியப்படுத்த முடிந்தது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தியா, லண்டன், குவைத், பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் இன வன்முறைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் மறுநாளே பதிவு செய்யப்பட்டன. சர்வதேசம் முழுவதும் இலங்கையின் தற்போதைய இனக் கலவர வன்முறைச் செய்திகள் பரவியதும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. இதனால், பல இஸ்லாமிய நாடுகள் ‘உடனடியாக வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லையானால், இலங்கையருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர நேரிடும்’ என அரசை அச்சுறுத்தின.

இப்பொழுது உலகம் முழுவதிலிருந்தும் இலங்கையை நோக்கிக் கேட்கப்படும் கேள்வியானது‘வன்முறை களுக்கும் அசம்பாவிதச் சம்பவங்களுக்கும் காரணமான வர்கள் யார்?’ என்பதாகும். இங்கு குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது, அரசின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் பொதுபலசேனா இயக்கம், இராவண பலய இயக்கம், ஜாதிக ஹெல உருமய கட்சியின் உறுப்பினர்களேயன்றி நாட்டின் ஒட்டுமொத்தச் சிங்களவர்களுமல்ல.

ஏனெனில் வன்முறையின்போது முஸ்லிம்களைக் காப்பாற்ற முயற்சித்த எத்தனையோ சிங்கள இன மக்களும்கூடப் பேரினவாதிகளால் படுமோசமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களைத் தனது வாகனத்திலேற்றி வந்து காப்பாற்றிய, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவர். முஸ்லிம்களைக் காப்பாற்றப் போய் இவரும் இவரது வாகனமும்கூடப் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. நடந்த அசம்பாவித நிகழ்வுக்கு மிகவும் மனம் வருந்திய பல சிங்களவர்கள் பொதுபலசேனா அமைப்பை இலங்கையில் தடை செய்யும்படியே கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் குடும்பத்தை காக்கும் முயற்சியில் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவரின் காரும் கண்களும் தாக்குதலுக்குள்ளாகி நிற்கிறார்.

கிட்டத்தட்ட 20 மில்லியன்கள் அளவான மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடேயாகும். இந்நிலையில் யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் மக்கள்மீது பேரினவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கம் திணிக்கும் அழுத்தம் சொல்லி மாளாது.

இஸ்லாமியப் பெயர்களில் இருக்கும் வீதிகளின் பெயர்ப் பலகைகளை, படையோடு சென்று அழித்துச் சிங்களப் பெயர்களுக்கு மாற்றுவது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகளைச் சேதப்படுத்துவது, பள்ளிவாயில்களுக்குள் அசுத்தங்களை எறிவது, பயணங்களை மேற்கொள்ளும் முஸ்லிம்களைத் தாக்குவது, ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை எனப் பலவற்றையும் எந்தத் தயக்கமுமின்றி முஸ்லிம்கள்மீது பிரயோகித்துக் கொண்டேயிருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முஸ்லிம்களின் கைத்தொலைபேசிக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அது ஒரு எச்சரிக்கைச் செய்தி. ‘மே மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் முஸ்லிம் பெண்களைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவனமாக இருந்துகொள்ளுங்கள்’ என அக்குறுஞ்செய்தி சொன்னது. யாரால் அனுப்பப்பட்டது எனத் தெரியாதபோதும் இச்செய்தி நாடெங்கிலும் முஸ்லிம்களிடத்தில் ஒருவிதப் பதற்றத்தைத் தோற்று வித்தது. இரகசியத் தகவல் வெளியானதை அறிந்த பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அக்குறுஞ்செய்தி ஒரு வதந்தி என அறிவித்தது. (ஆதாரம் - விடிவெள்ளி வாரப் பத்திரிகை, 2014.05.22, பக்கம் - 08)

தமது திட்டம் குறித்த தகவல்கள் கசிந்து விட்டமையால் அப்போது பொதுபலசேனா அமைப்பு எவ்விதச் செயற்பாட்டிலும் இறங்காமல் அமைதியாக இருந்தது. ஆனால் அதற்குச் சரியாக ஒரு மாதம் கழித்து, குறுந்தகவலில் சொன்னது போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவும் பாதுகாப்பு அமைச்சருமான கோதபய ராஜபக்?ஷவும் நாட்டில் இல்லாத நேரத்தில் தனது இன அழிப்பு வேலையை வெற்றிகரமாக மேற்கொண்டது பொதுபலசேனா இயக்கம். அப்பொழுதே குறுந்தகவலைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருந்தால் பல அழிவுகளைத் தடுத்திருக்கலாம் என்பது பலரதும் கருத்தாக அமைந்திருக்கிறது .

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 21.06.2014 அன்று முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்தபின் ஊடகங்கள் ஊடாகவும் தனது Twitter வழியாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். இன, மத ரீதியாகத் தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவார்களானால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி போலிஸாருக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு சில வெளிநாட்டுச் சக்திகள் தமது நலனுக்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்த முனைகின்றன. சட்டம் ஒழுங்கை யாரும் தமது கையில் எடுத்துச் செயல்பட முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்?ஷ மேற்சொல்லியிருக்கும் அறிக்கைகள் எல்லாம் சிறுபான்மை இனத்தவர்மீது மாத்திரமே செல்லுபடியாகும். சிறுபான்மை இனத்தவர்மீதே பிரயோகிக்கப்படும். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே தண்டனைக்குள்ளாவர். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவர்; கடத்தப்படுவர்; கைது செய்யப்படுவர்; காணாமல் போவர்.

முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அடித்துப் போட்டால்கூடக் கேட்பதற்கு ஆளில்லை என்ற கருத்தும் நிலைப்பாடும் பேரினவாதத் தலைமைகளிடம் இருந்தது. ஆனால் அண்மைய வன்முறைகளின்போது தான் தனது நாட்டு ஊடகங்களை மௌனிக்கச் செய்த பின்னரும்கூட, சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைச் செய்திகள் உலகம் முழுவதும் பரவி, சர்வதேச அழுத்தங்கள் கிளம்பி, ஜனாதிபதியைக் கலவரத்துக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை யுத்தத்தில் வென்ற இறுமாப்பில், வெற்றிக் களிப்போடு எல்லா நாடுகளாலும் நோக்கப்படும் ஜனாதிபதி மீதும் இலங்கை மீதும் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் இக்கலவரங்கள் மூலமாக மீண்டும் திரும்பியுள்ளன.

கலவரத்தில் மாண்ட உயிர்கள் மீண்டு வராது. மீளக் கட்டியெழுப்ப முடியாத சேதங்கள். சூன்யமாகிப்போன வாழ்க்கைகள். எல்லோரையுமே அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கும் பார்வைகள். ஒரு ஜனநாயக நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் இப்படித்தான் துயரத்தோடு வாழப்போகிறார்கள். வாழ்க்கையும் இருப்பிடங்களும் தமக்குரிய மத வழிபாட்டுத் தலங்களும் என எதுவுமே நிரந்தரமற்று, அவர்களை அல்லலுறச் செய்யப்போகிறது.
இலங்கை நிலவரம் இவ்வாறிருக்கையில், 16.06.2014 கலவரத் தினமன்று ஜனாதிபதியை பொலிவியா நாட்டுக்கு அழைத்து, இராணுவ மரியாதையோடு ஒரு விருதையும் வழங்கியிருக்கிறார்கள். அது இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் பொலிவிய நாட்டின் ‘அதியுயர் கௌரவ விருது!’

நன்றி: http://www.kalachuvadu.com/issue-175/page17.asp 
நன்றி : எம். ரிஷான் ஷெரீப்

இலங்கை - கறுப்பு ஜூன் 2014 - முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் பின்னணியும் என்கிற கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு இது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.