பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இனப்படுகொலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலை கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் காஸா மீதான இஸ்ரேல் கொடுந்தாக்குதலை நடத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் விவகாரம் இன்று எதிரொலித்தது. காஸா பகுதி மீதான இஸ்ரேலின் கொடுந்தாக்குதலை கண்டித்தும் ஐ.நா. சபையில் காஸா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல், மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், மஜ்லிஸ் கட்சி ஆகிய கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, உறுப்பினர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்.
அதேநேரத்தில் எந்த ஒரு தீர்மானமும் கொண்டுவர முடியாது. உள்நாட்டு அரசியல் நமது வெளியுறவுக் கொள்கையை பாதிக்கக் கூடாது. இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றார். இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்து முழக்கங்கள் எழுப்பின. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக வெளிநடப்பும் செய்தன. முன்னதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினார். மேலும் பிரேசிலில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் காஸா பகுதியில் யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இஸ்ரேல் இனப்படுகொலையைக் கண்டித்தால் நாளை இலங்கை இனப்படுகொலையைக் கண்டிக்க வேண்டிய நெருக்கடி வருமே என்பதால்தான் மத்திய அரசு இப்படி தவிர்த்திருக்கலாம் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment