Latest News

  

தரைவழித் தாக்குதலை துவக்கியது இஸ்ரேல்! – காஸாவில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!


மேற்காசியாவில் அழிவு சக்தியான வான்வெளித்தாக்குதல், ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஃபாலஸ்தீனின் காஸா பகுதியை அநியாய தாக்குதல் மூலம் நிர்மூலமாக்கி வரும் இஸ்ரேல், தற்போது காஸாவின் மீது தரைப்போரை துவக்கியுள்ளது.

போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை புறக்கணித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு காஸாவிற்குள் இஸ்ரேல் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணை தளங்கள் மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இம்முறை முதன்முறையாக தரை வழி தாக்குதலை காஸா மீது துவக்கியுள்ளது.

கடந்த 6 தினங்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஐ கடந்துள்ளது. அரைமணிநேரம் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை காஸா மீது தாக்குதலை நடத்தியது. அதன்பிறகு திரும்பிச் சென்றது. ஹமாஸ் போராளிகளின் எதிர்ப்பு நடவடிக்கையில் நான்கு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது.

காஸாவிற்கு எதிராக முழுமையான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக ஊகமான செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு காஸாவின் எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். ஃபலஸ்தீன் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறக் கோரி இஸ்ரேலிய விமானங்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கும் பிட் லஹியாவில் துண்டு பிரசுரங்களை வீசின. மேலும் ஹமாஸ் தளங்களை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்போகும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நடத்தும் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் ஐக்கிய நாடுகள் அவை நிவாரண ஏஜன்சியின் எட்டு முகாம்களில் அபயம் தேடியிருப்பதாக ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் க்ரூஸ் கன்னஸ் தெரிவித்தார்.

அதேவேளையில், இரட்டை குடியுரிமை உடைய 800 ஃபலஸ்தீனர்கள், இஸ்ரேலின் எரஸ் க்ராஸிங் வழியாக காஸாவை விட்டு வெளியேறத் துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை இரவு பாதுகாப்பு படையின் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியிருந்தது. ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் பெரும்பாலும் வடக்கு காஸாவில் இருந்து நடத்தப்படுவதால் அங்கு ராணுவ நடவடிக்கை அத்தியாவசியம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டஃபலஸ்தீன் மக்களுக்கு காயம் ஏற்பட்டது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 800க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் இரு தரப்பையும் கேட்டுக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காஸா போலீஸ் தலைவர் தைஸீர் அல் பத்ஷின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவீச்சில் அவருடைய குடும்பத்தினர் 18 பேர் கொல்லப்பட்டனர். தைஸீர் அல் பத்ஸிற்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

சனிக்கிழமை இரவு ஹமாஸ் போராளிகள் டெல் அவீவை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியிருந்தனர். ஆனால், இஸ்ரேல் நிர்மாணித்துள்ள ஐயன் டோம் ஏவுகணை எதிர்ப்பு அவற்றை தடுத்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த பல கட்டிடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் இருக்கவில்லை. அங்கு வசித்துவந்த சாதாரண மக்கள் இஸ்ரேலின் கொடிய தாக்குதலில் பலியானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

காஸா மீது உக்கிர தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக உலகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எல்லாம் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.