சென்னை: சென்னை போரூரில் இடிந்து விழுந்த பதினோரு மாடிக் கட்டிடத்துக்கு அருகில் கட்டப்பட்டிருந்த மற்றொரு பதினோரு மாடி கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், போரூர் மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப் பட்டுக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
முழுவதும் கட்டுமானம் முடியாத இக்கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டுமான ஊழியர்கள் உட்பட பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர். தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கட்டிடத்தின் மீது இடி விழுந்ததே விபத்திற்குக் காரணம் என கட்டுமான நிர்வாகம் விளக்கமளித்தது. ஆனால், போரூர் ஏரியை ஒட்டியுள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே, இடிந்து தரைமட்டமான கட்டிடத்திற்கு அருகே அதே போன்று மற்றொரு கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது.
சென்னை பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் தலைமையில் பொறியாளர்கள் 11 மாடி கட்டிடத்தின் வரைப்பட ஒப்புதலை பார்வையிட்டு, ஆய்வு பணியை தொடங்கினர். அதன்படி, தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மையின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் ஆட்சியர் பாஸ்கரன் முன்னிலையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பாதுகாப்பு இல்லாதது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment