சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 13 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய 60க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 13 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இருப்பினும் பல வீடுகளில் அண்மையில்தான் குடியேறியும் இருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கட்டிடம் அப்படியே இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இங்கு பணிபுரிந்தவர்கள் அனைவரும் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்களும் விரைந்துள்ளன. போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியைச் சுற்றிலும் 5 மாடிகளைத் தவிர வேறு எந்த கட்டிடமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதான் முதன்முறையாக 13 மாடி கட்டிடம் ஆகும். இருள் சூழ்ந்து வருவதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்னைக்கு விரைந்துள்ளது.
No comments:
Post a Comment