சென்னை போரூரில் நேற்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில் தன் கணவர் உள்பட 8 உறவினர்களின் நிலைமை தெரியவில்லையே! என்று பெண் ஒருவர் கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணவேணி என்ற பெண் கண்ணீர் மல்க கூறியதாவது:–
பெண் கதறல்
எனக்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விஜயநகரமாகும். 28 வயதான நான், என்னுடைய கணவர் பங்காரு நாயுடு, சித்தப்பா, பெரியப்பா உறவினர்கள் உள்பட 8 பேருடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்டிடப்பணிக்காக சென்னை போரூருக்கு வந்தோம். நான் சம்பவம் நடைபெற்ற கட்டிடத்திற்கு அருகே உள்ள 14 மாடி கட்டிடத்தில் வேலைபார்த்து வந்தேன்.
எனது கணவர் பங்காரு நாயுடு உள்பட உறவினர்கள் 8 பேர் சம்பவம் நடைபெற்ற கட்டிடத்தில் வேலைபார்த்தார்கள். நேற்று மதியம் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.
குடும்பமே மாயம்
பின்னர் நான் வேலை பார்க்கும் கட்டிடத்திற்கு வந்துவிட்டேன். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. நான் பதறியபடி ஓடிவந்தேன். அப்போது சீட்டுக்கட்டு சரிவது போல என் கணவர் வேலைபார்த்த கட்டிடம் சுக்கு நூறாக சரிந்து விழுந்தது.
இதில் என் கணவர் பங்காரு நாயுடு உள்பட உறவினர்கள் 8 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. என் குடும்பமே மாயமாகி உள்ளது. அவர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்
No comments:
Post a Comment