Latest News

  

ராஜீவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சி ரத்து - தமிழக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி இன்று நடைபெறவிருந்த தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு ரத்து செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், பயங்கரவாத உறுதிமொழி ஏற்பதை தமிழக அரசு ரத்து செய்தது ஏன். இது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தமிழக அரசு இந்த தினத்தை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து உறுதிமொழியும் எடுத்து வரும். இதில் முதல்வர் பங்கேற்பார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பார்கள். ஆனால் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

அறிக்கை மூலமாகவும் கண்டனம்

இதற்கிடையே, ஞானதேசிகன் ஒரு அறிக்கையும் விட்டுள்ளார். அதில், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் 'பாரத ரத்னா' ராஜீவ்காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தால் ஸ்ரீபெரும்புதூர் தமிழ் மண்ணில் மனித வெடிகுண்டால் சாய்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் - அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சிரித்த முகத்தோடு தமிழகம் வந்திறங்கிய அந்த ரோஜா மலரை பாவிகள் இந்த மண்ணில் குற்றுயிரும், குலை உயிருமாக ஆக்கிவிட்டார்கள்.

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஜாதி, இன, மத என்று எந்த போர்வையிலும் அதனை எதிர்க்க வேண்டும் என்கிற உறுதிமொழியை ஏற்கிற நாளாக அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் மறைந்த நாளில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இந்த உறுதிமொழி ஏற்பு என்பது அரசியலைத் தாண்டி, யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தாண்டி இந்த தேசத்தில் பயங்கரவாதத்தை வேறோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கான உறுதிமொழியை ஏற்கிற நாள். இதற்கு கட்சி வண்ணம் கிடையாது. அரசியல் கிடையாது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த உறுதிமொழி ஏற்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரால் ஏற்கப்பட்டு, அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது நடைபெறுகிறது.

ஆனால் இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது. ஒரு பொதுவான உறுதிமொழியை, பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எடுக்கிறோம் என்பதை காட்டுகிற நிகழ்ச்சியாய் எடுக்கப்படுகிற இந்த உறுதிமொழி இன்று ஏன் ஏற்கப்படவில்லை என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.