Latest News

இதோ ஒரு உண்மை நாயகன் (REAL HERO)…..!


இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ்.

உத்திரப் பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன். ஏழாவது படிக்கும் சிறுவன்.

சக நண்பர்களுடன் பள்ளிக்கு மாருதி வேனில் சிரித்துப் பேசியபடி பள்ளிக்குப் போய்க் கொண்டு இருந்தான்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேன் திடீரென தீபிடித்தது. வேன் டிரைவர் வேனில் இருக்கும் பள்ளிச் சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

அதே போல வேனில் இன்னொரு புற கதவருகே இருந்த ஓம்பிரகாஷ் நினைத்திருந்தால் டிரைவரைப்போல கதவைத் திறந்து கொண்டு ஓடித் தப்பியிருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. பயத்தில் அழுது அரற்றிய நண்பர்களைக் காப்பாற்றக் கதவை உடைத்துத் திறந்தவன் ஒவ்வொரு மாணவனாக காப்பாற்றத் துவங்கினான்.

ஓம் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் பயணித்த அந்த வேனில் இருந்து ஆறு பேர்களைக் காப்பாற்றிவிட்டான். அதற்கு மேல் தீ மளமளவென பிடித்து எரியத் துவங்கியது, ஆனாலும் கவலைப்படாமல் வேனிற்குள் நுழைந்து மீதம் இருந்த இரு சிறுவர்களையும் காப்பாற்றினான்.

இந்த கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டுப் பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த எரிச்சலையும், வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் இருவரையும் காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது. சில நிமிடங்கள் தாமதித்து ஓம் பிரகாஷ் செயல்பட்டு இருந்தாலோ அல்லது தனக்குத் தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களைத் தீக்கு பலி கொடுக்க வேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் அபாயமும் இருந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களைக் காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக் கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்க முடியாத அளவிற்கு அவனது முகத்தைச் சிதைத்து இருந்தது.

ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்துக் கூறியதையும், கண்ணீருடன் நன்றியைப் பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.

இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டிச் சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கிக் கவுரவித்தார்.

இப்போது பள்ளிக்கு வரும் ஓம்பிரகாஷ் யாதவின் முகத்தை பார்க்கும் அனைவரும் அந்த முகத்தில் உள்ள வடுவைப் பெருமையாகக் கருதி அந்த வடு உள்ள முகத்திலேயே முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஓம் பிரகாஷ் யாதவ் இதெல்லாம் புரிந்தவன் போலவும், புரியாதவன் போலவும் சின்ன புன்னகையுடன் கடந்து செல்கிறான்.

நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை ஓம் பிரகாஷுக்குத் தெரிவியுங்கள் உறவுகளே…!

நன்றி: அமராவதிபுதூர் பிரேம்நாத்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.