Latest News

  

கட்சியில் இருந்து நீக்கியதால் அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது அழகிரி பேட்டி


திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
ஆலோசனைக்குப் பின்னர் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோவை நீங்கள் சந்தித்தது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியததால் இந்த விளைவா?
பொடா சட்டத்தில் சிறை சென்று வந்த வைகோவை சிறை வாசலிலேயே சென்று சந்தித்து கட்டிப்பிடித்தார் கலைஞர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவரை அவர் கட்டிப்பிடிக்கலாம். நான் சந்திக்க கூடாதா? கலைஞருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? அவர் மட்டும் வைகோவை சந்திக்கலாம் நான் சந்திக்க கூடாதா?
தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சியினரும் உங்களை வந்து சந்திப்பது, கட்சிக்கு ஒரு பலவீனத்தை ஏற்படுத்தாதா?
வீட்டுக்கு வருபவர்களை வரவேண்டாம் என்றா சொல்ல முடியும்.
உங்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்களே?
நான் யாருக்கும் ஆதரவு தருவதாக சொல்லவில்லையே.
தேர்தல் நேரத்தில் உங்கள் நடவடிக்கைகள் கட்சிக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தியதால்தான் இந்த நடவடிக்கையா?
வேறு ஏதோ ஒரு காரணத்தால்தான் என்னை நீக்கியுள்ளனர் . ஏதோ ஒரு காரணத்தைக் கூறி என்னை நீக்கியுள்ளனர். இது திமுக தலைவரால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, நிர்பந்தத்தின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரை மிரட்டிய நம் நண்பர் யார்? மிரட்டலுக்கு உதவியாக இருந்தவர் யார்? என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த விவரத்தை நீங்கள் போகப் போக தெரிந்து கொள்வீர்கள்.
கடந்த ஜனவரி மாதம் என்னை கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கினார்கள். கட்சியில் இருந்து ஒருவரை சஸ்பெண்ட் செய்தால், அதற்கு உரிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எனக்கு இதுவரை எந்த விதமான நோட்டீஸும் வரவில்லை. இப்படியிருக்க, என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதே ஆதரவாளர்கள் கூட்டத்தில் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன் என்றேன். ஒரு தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளது என்றும் கூறினேன்.
மதுரை மாநகர திமுக கலைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்றுதான் கேட்டேன். தவிர எனக்கு மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலர் பதவி கொடுங்கள் என்று கேட்கவில்லை. நான் நியாயத்துக்காக போராடினேன். உண்மையாக உழைப்பவர்களுக்காகத்தான் போராடினேன். ஆனால்,என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் நீக்காவிடாலும் நானும் என்னைச் சுற்றியிருப்பவர்களும் என்றுமே திமுககாரர்கள்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.
அறிவாலயம் எங்கள் சொத்து. எங்கள் உழைப்பால் கட்டப்பட்டதுதான் அறிவாலயம். கட்சியில் இருந்து நீக்கி விடுவதால் யாரும் எங்களை வெளியே போ என்று சொல்ல முடியாது. நான் கட்சியில் இருந்த முறைகேடுகள் குறித்து குற்றம் சாட்டியிருந்தேன். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் இல்லை.
ஆகவே என்னை நீக்கியதற்கான காரணம் கூறாமல், நீக்கியதற்கு பொதுச் செயலர் மீது வழக்கு தொடருவேன். இப்போது இருப்பவர்கள் தேர்தலுக்கு பிறகு யாரும் அங்கு இருக்க மாட்டார்கள்.

நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.