Latest News

  

கோமா நிலையில் வக்பு வாரியம் : பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மாயம்!

ஒவ்வொரு சமுதாய மக்களும்  தங்களுக்கான சமூக, பொருளாதாரப் பாதுகாப்பிற்கான திட்டங்களை தாங்களே உருவாக்கி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நடைமுறையாக உள்ளது. அந்தந்த சமுதாயத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கும், படித்தவர்களுக்கும் இது தொடர்பாக பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.  இந்திய அரசு விடுதலைக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டில் வக்புச் சொத்துக்களை பராமரித்திட,  இந்தியா முழுவதும் வாரியங்களை அமைத்து அவைகளை முறைப்படுத்திட அதற்கெனச் சட்டத்தையும் உருவாக்கித் தந்தது.  உருவாக்கப்பட்ட சட்டத்தில் பல ஒட்டைகளும் இருந்தது. அந்த ஓட்டையை பயன்படுத்தி வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்தார்கள்;.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பதிய சட்டத்தில் ஓட்டையை அடைக்கிறோம் எனக் கூறி அரசியல் தலைவர்களே வக்பு சொத்துக்களை கையாடல் செய்தனர். அதன் பின்னர் இந்த சட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறோம் என ஆய்வு செய்து விட்டு 2009 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, தற்போது மேல்சபையில் அந்த பைல் கோமா நிலையில் உள்ளது. இந்தியாவில் ரயில்வே, ராணுவம் இவற்றிற்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் உள்ளது வக்பு சொத்துக்கள் தான்.

ஆதரவற்ற மக்கள், விதவைகள்,  ஏழைகளுக்கு கல்வி உதவி, மையவாடிகள் பராமரித்தல் என அடித்தட்டு முஸ்லிம்களின் வாழ்வு சிறக்க பயன்படுத்தப்பட வேண்டிய இந்த வக்பு சொத்துக்களை மத்திய அரசும், மாநில அரசும் பங்கிட்டு ஆக்கிரமித்தது போக மீதம் உள்ளதை முஸ்லிம்களின் பெயரை தாங்கிய முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், ஏரியா ரவுடிகள், வட்டார குண்டர்கள் என்று விதிவிலக்கு இல்லாமல் நாடு முழுவதும் ஆக்கிரமித்து உண்டு கொழுத்து வருகின்றனர்.

வக்;ஃப் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயனப்டுத்த வேண்டிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்தால் தொடர்புடையவர்களின் கவனமின்மையும் அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தையும் காண முடியும்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை கணக்கிட்டால், ஆறு இலட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரியங்களின் கீழ் வரும் என்பது உத்தேச கணக்கு. பஞ்சாப், சண்டிகார், தமிழ்நாடு, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு வக்பு சொத்துக்கள் உள்ளது. இவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. நாடு விடுதலை பெற்ற பிறகு நாடாளுமன்றத்தில் பல சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என்ற போதிலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படும் கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வணிகப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மதநிறுவனங்கள் நடத்துவோர் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு, வக்பு சொத்துக்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் நாட்டையே உலுக்கிய மேற்கு வங்க வக்பு ஊழல் வெளியான பிறகே வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பை தடுப்பது, வக்பு நிர்வாகத்தை செம்மைப்படுத்துவது ஆகியன தான் இச்சட்டத்திருத்ததின் நோக்கமாகும்.

இதில் ஆட்சேபனைக்குரிய அம்சங்களும் உள்ளன. உதாரணமாக வக்பு சொத்துக்களை அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு கொடுக்க அனுமதி உள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகள் வரை குத்தகைக்கு கொடுக்கலாம் என்பது ஆபத்தான அம்சமாக இச்சட்டத்தில் உள்ளது. நீண்ட காலத்துக்குக் குத்தகைக்கு விடுவது சொத்தை ஆக்கிரமிப்பதற்குச் சமம். புதிய சட்டதிருத்தத்தால் வக்பு சொத்துக்களை பாதுகாத்து விடலாம் என்பது முட்டாள்தனமாகும்.
சமுதாய தலைவர்களின் விழிப்புணர்வு, விவேகமான நடவடிக்கை ஆகியவை மட்டுமே வக்பு சொத்துக்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் மற்றும் சமுதாயத்திற்காக பயன்படுத்துவதிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.

ஆக்கம் : வைகை அனிஷ் (செல்:9715-795795)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.