கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் (எளிய மக்கள் கட்சி) வேட்பாளராகப் போட்டியிடும் முனைவர் சுப. உதயகுமார் தொகுதி வாக்காளர்களுடன் 20 அம்சங்கள் கொண்ட ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு.அதை மக்களிடம் கொடுத்து தயவு செய்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் அடிப்படையில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
நாம் ஒன்றாக செயல்பட்டு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம். மேலும் நடவடிக்கைகளுக்கு, தொடர் செயல்பாடுகளுக்கு என்னைத் தொடர்பு கொள்ள: 42/27 இசங்கன்விளை மணி வீதி, பறக்கை ரோடு சந்திப்பு, கோட்டார், நாகர்கோவில் 629 002, கன்னியாகுமரி மாவட்டம்; Email: spudayakumar@gmail.com; skype: spudayakumar; facebook: spudayakumaran; Twitter: spudayakumar. ” என்று தெரிவித்து வருகிறார்.
S-P-Udayakumar xerox
இது தொடர்பாக உதயகுமார் இன்று வெளிட்டு உள்ள ஒரு அறிக்கையில்.”நானும், தோழர் மை. பா. ஜேசுராஜும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால், கீழ்க்காணும் ஒப்பந்தம் ஒன்றை மக்களுடன் சேர்ந்து கையெழுத்திடுவோம்.
———– தொகுதி வாக்காளர்களுடன் ஓர் ஒப்பந்தம்
——– தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் (எளிய மக்கள் கட்சி) வேட்பாளராகப் போட்டியிடும் முனைவர் சுப. உதயகுமார் / மை. பா. ஜேசுராஜ் ஆகிய நான் —— தொகுதி வாக்காளர்களுடன் கீழ்க்கண்ட அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன். இந்த ஒப்பந்தத்தை நான் முழுமையாக நிறைவேற்ற உறுதி பூணுகிறேன்.
[1] மேடைகளிலோ, சுற்றுப் பயணங்களின் போதோ மாலைகள், மலர்க் கிரீடங்கள், பொன்னாடைகள், வெள்ளிச் செங்கோல்கள் போன்றவற்றை ஏற்கமாட்டேன். ஆனால் குழந்தைகளுக்கான புத்தகங்களை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு அருகேயுள்ள அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அவற்றைப் பரிசாக வழங்குவேன்.
[2] பிரச்சாரத்தின் போதும், அதன் பிறகும் கட்-அவுட்டுகள், பெரிய ஃபிளெக்ஸ் பானர்கள் வைக்க மாட்டேன்; குடியிருப்புப் பகுதிகளில் ஒலி மாசு ஏற்படுத்தி பொதுமக்களுக்குத் தொந்திரவு செய்யமாட்டேன்.
[3] தேர்தலுக்கான குறைந்தபட்சச் செலவுகளை மட்டுமே செய்வேன்; பெரும் பணத்தை முதலீடு செய்து, பின்னர் கொள்ளையடிக்கும் வியாபாரமாக தேர்தல் அரசியலை பாவிக்கமாட்டேன்.
[4] நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், உரிய கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வேன். எனது வருகைத் தகவல்களையும், கலந்துகொள்ளவில்லை என்றால் அதற்கானக் காரணங்களையும் அறியத் தருவேன்.
[5] நாடாளுமன்றம் சுமுகமாக, திறம்பட செயல்படுவதற்கு ஆவன செய்து, இந்திய மக்களின் வளங்களை வீணடிக்க மாட்டேன். அவையின் மாண்பினைக் காத்து, என்னுடைய நடவடிக்கைகளில் கண்ணியத்தைப் போற்றுவேன். முக்கியமான பிரச்சினைக்காகப் போராட நேர்ந்தால், என்னுடைய நடவடிக்கை கண்ணியமானதாக, சனநாயகப் பண்பு கொண்டதாக, தொந்திரவு செய்யாததாக, வன்முறையற்றதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
[6] என்னுடைய அதிகாரங்களையும், ஆற்றல்களையும் இந்தியாவின் எளிய மக்களுக்காக பயன்படுத்துவேன். இந்திய மற்றும் அந்நிய நாட்டுப் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவோ, வியாபார நிலையங்களுக்காகவோ, வேறு குழுக்களுக்காகவோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்த மாட்டேன்.
[7] யாரிடமிருந்தும், எந்தக் காரணத்துக்காகவும், எந்த விதத்திலும் லஞ்சம் பெற மாட்டேன். நிச்சயமாக அவையில் கேள்வி கேட்பதற்காக, அல்லது யாருக்காகவும், எதற்காகவும் ஆதரவாக வாக்களிப்பதற்காக, அல்லது வாளாவிருப்பதற்காக லஞ்சம் வாங்க மாட்டேன்.
[8] நாடும், நாடாளுமன்றமும் முக்கியமான முடிவுகள் எடுக்கும் வேளையில், உங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும் கேட்டுப் பெறுவேன்.
[9] எம்.பி.யின் தொகுதி வளர்ச்சி நிதியை மேலாண்மை செய்வதற்கு ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு, அந்தப் பணத்தில் யாரும் ஊழல் செய்யாமல் தடுப்பேன். நிறைவேற்றப்படும் திட்டங்களில் எனது பெயரைப் பொறிக்க மாட்டேன்.
[10] மக்கள் பிரதிநிதிகளையும், உயர் அதிகாரிகளையும் கொண்ட “தொகுதி ஒருங்கிணைப்புக் குழு” ஒன்றை உருவாக்கி அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், மேயர்கள், நகரத் தந்தையர் (தாய்மார்), பஞ்சாயத்துத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சித் தலைவர்கள், வட்டாட்சித் தலைவர்கள், நகர்மன்ற, பஞ்சாயத்து ஆணையர்கள் போன்றோரை சேர்த்துக்கொண்டு தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களை, மக்கள் தேவைகளை ஒருங்கிணைப்பேன். எம்.பி. ஒருங்கிணைக்கும் இந்தக் குழுவை மாதம் ஒரு முறையாவதுக் கூட்டுவேன்.
[11] “தொகுதிச் செய்திகள்” எனும் பெயரில் தமிழ் மாத இதழ் ஒன்றை வெளியிட்டு, பல்வேறு மசோதாக்கள், அவை விவாதங்கள், தொகுதிப் பிரச்சினைகள், அவற்றுக்கானத் தீர்வுகள் போன்றவற்றை வெளியிடுவேன். கொள்கை முடிவுகள் எடுக்கும்போது, வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கும்போது, “தொகுதிச் செய்திகள்” இதழிலும், பிற பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி, உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, விமரிசனங்களை பெற்றுக் கொள்வேன்.
[12] தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து, அவர்கள் குறைகளைக் கேட்டு, அவற்றைக் களைய முக்கியமான நகரங்களிலும், கிராமங்களிலும் “அக்கம்பக்கக் கூட்டங்கள்” நடத்துவேன். மாதம் ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேள்விகளுக்கு உண்மையாக பதில் சொல்வேன்.
[13] கீழ்க்காணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்:
[i] எம்.பி. பதவிக்கு மரியாதையும், பெருமையும் சேர்ப்பேன்,
[ii] எம்.பி.க்கும் மக்களுக்குமிடையே நம்பிக்கையை வளர்ப்பேன்,
[iii] துடிப்புடன் சமூகக் கடமையாற்றுவேன்,
[iv] உள்ளூர் ஈடுபாடுகளைப் போற்றும் குழுக்களுக்கு ஆதரவளிப்பேன்,
[v] கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகளை மக்களிடம் தெரிவிக்கும் சேவகனாகப் பணிபுரிவேன்.
[14] எனது எம்.பி. பதவி முடியும் வரை, ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் எனது சொத்துக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் தொகுதி மக்களுக்குத் தெரிவிப்பேன்.
[15] எனது தொகுதி மக்களின் அதிருப்திக்கு ஆளாகி, அங்கீகாரத்தை இழந்தால், அல்லது இந்த ஒப்பந்தத்தை மீறினால், என்னை மக்கள் திருப்பி அழைப்பதற்கு அணியமாக இருப்பேன்.
[16] தேர்தலில் நான் வெற்றி பெறவில்லையென்றாலும், தொகுதியை விட்டு விலகிச் செல்லாமல், தொகுதியில் ஓர் அலுவலகம் அமைத்து “நிழல் எம்.பி.”யாக செயல்பட்டு வெற்றி பெற்றவரை மக்கள் தொண்டாற்ற ஊக்கப்படுத்துவேன். “நிழல் எம்.பி.”யாக அனைத்து வழிகளிலும் மக்களுக்காக உழைத்து அடுத்த தேர்தலுக்குத் தயாராவேன்.
[17] என்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும், சாதி, மத, குழும உணர்வுகளுக்கு இடங்கொடுக்க மாட்டேன். —— தொகுதியின் அனைத்து மக்களுக்குமான எம்.பி.ஆக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றுவேன்.
[18] நான் எப்போதுமே பூவுலகின் நண்பனாகவும், இயற்கை அன்னையின் மகனாகவுமிருந்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், எளிய மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகளைப் போற்றவும் என்னாலான அனைத்தையும் செய்வேன்.
[19] நான் எப்போதுமே பெண்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துவேன்; தினசரி வாழ்க்கையில் அவர்களின் பாதுகாப்பையும், சமத்துவத்தையும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்.
[20] நமது குழந்தைகளின் மற்றும் இளைஞர்களின் ஈடுபாடுகளை மேம்படுத்தி, அவர்களின் பத்திரமான, பாதுகாப்பான வருங்காலத்துக்காக உழைப்பேன்.


Hello! I've been following your website for some time now and finally got the bravery to go ahead and give you a shout out from Dallas Texas!
ReplyDeleteJust wanted to mention keep up the excellent job!
Also visit my page Christian Louboutin London