தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
மேலும், சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படாது எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பிரவீண்குமார் சனிக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் காலை 5 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களுக்குச் சென்று தங்களது
பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம். மேலும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
மிகவும் முக்கியமான முகாம்: மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கான கடைசி வாய்ப்பு என்பதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாம் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த முகாமில் பார்வைக்கு வைக்கப்படும் பட்டியலே வாக்குப் பதிவின் போதும் இருக்கும். எனவே, முகாமின் போது பெயர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன்பிறகு பெயர் நீக்கப்பட வாய்ப்பில்லை. சிறப்பு முகாம்களில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் வைக்கப்பட்டிருக்கும். அதை பூர்த்தி செய்து முகவரிக்கான சான்றை இணைத்து அளித்தால் போதும்.
2 வாரங்களில் கிடைக்கும்: பெயர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை வாக்குச்சாவடி அதிகாரி பரிசீலனை செய்து, உரிய ஆய்வுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும்.
சிறப்பு முகாம்களில் பெறப்படும் மனுக்கள் 2 வாரங்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டு விடும்.
தேர்தல் போன்று நடைபெறும்: வாக்குப் பதிவின் போது பின்பற்றப்படும் அனைத்து நடவடிக்கைகளும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களின்
போது பின்பற்றப்படும். அதாவது, தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஒவ்வொரு தொகுதிக்கான மண்டல அதிகாரிகளும் வாக்குச் சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை கண்காணிப்பார்கள். பெயர் சேர்ப்பதற்காக
எத்தனை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து 3 மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.


No comments:
Post a Comment