இத்தாலி நாட்டிலுள்ள ஒளி வெள்ளமும் நீர் வளமும் மிகுந்த அழகிய வெனிஸ் நகரத்தின் ஒரு காப்பிக் கடையில் நான் எனது நண்பரோடு அமர்ந்திருந்தேன். நாங்கள் காபியை ருசித்துப் பருகிக் கொண்டிருந்தபோது எங்களுக்கெதிரே காலியாக இருந்த மேஜையருகே ஒருவர் அமர்ந்தார். அவர் சர்வரை அழைத்து, இரணடுகோப்பை காபி கொடுங்கள். ஒன்று சுவற்றுக்கு என்றார். அதைக்கேட்ட எங்களுக்கு ஆச்சரியம் மேலோங்கியது. நடந்ததைக் கவனிக்க ஆரம்பித்தோம். சர்வர் ஒரு கோப்பை காபியை அவரிடம் தந்து விட்டுச் சென்றார். காபியைக் குடித்தவர் இரண்டு கோப்பை காபிக்குப் பணம் கொடுத்து விட்டுச் சென்றார். உடனே அந்த சர்வர் சுவற்றில் ஒரு கோப்பை காபி என்று எழுதப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டை ஒட்டிச் சென்றார்.
அப்போது மேலும் இருவர் காபி குடிக்க வந்தனர். இரண்டு கோப்பை எங்களுக்கு, ஒரு கோப்பை சுவற்றுக்கு என்று சொல்லவே சர்வர் இரணடு கோப்பை காபி கொண்டு வந்து அவர்களுக்குத் தந்தார். அந்த இருவரும் மூன்று கோப்பை காபிக்கான பணம் கொடுத்து விட்டுக் கடையை விட்டு வெளியேறியவுடன், சர்வர் ஒரு கோப்பை காபி என்று எழுதிய சீட்டைச் சுவற்றில் ஒட்டினார். அந்தச் செய்கை எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. நாங்கள் காபியைக் குடித்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டுக் கடையை விட்டு வெளியேறினோம்.
சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காபி கடைக்குச் செல்லும் சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் காபி குடித்தக் கொண்டிருந்தபோது, மிகவும் ஏழையான ஒருவர் அழுக்கான உடையணிந்து உள்ளே நுழைந்தார். அவர் ஆசனத்தில் அமர்ந்ததும் சுவற்றைப் பார்த்தார். சர்வரிடம் சுவற்றிலிருந்து ஒரு கோப்பை காபி என்று ஆர்டர் கொடுத்தார். சர்வர் மரியாதை குறையாமல் அவருக்கு ஒரு கோப்பை காபி கொண்டு வந்து கொடுத்தார். வந்தவர் காபி குடித்து விட்டுப் பணம் தராமல் வெளியேறினார். எங்களுக்கு அந்தச் செயல் மிகவும் வேடிக்கையானதாக இருந்தது. சர்வர் ஒரு கோப்பை காபி என்று எழுதப்பட்டிருந்த ஒரு பேப்பரை சுவற்றிலிருந்து எடுத்து குப்பைக் கூடையில் போட்டார்.
நாங்கள் ஆசனத்திலிருந்து விடுபட்டோம். எல்லாமே எங்களுக்குத் தெளிவாக விளங்கியது. வெனிஸ் நகர மக்கள் ஏழை எளிய மக்களிடம் காட்டிய பரிவும் பாசமும் எங்கள் கண்களைக் குளமாக்கியது.
ஏழைகளின் தேவைகளை எண்ணிப் பாருங்கள். ஏழையான அந்த மனிதர் சுயமரியாதையை இழக்காமலே காபிக் கடையில் நுழைந்தார். இலவசமாக அவர் காபி குடிக்கவில்லை. யாரோ சிலர் அவருக்காக ஏற்கனவே பணம் கொடுத்திருந்தார்கள். சுவற்றைப் பார்த்தார். காபிக்கு ஆர்டர் பண்ணி ருசித்துப் பருகினார், வெளியே சென்றார்.
அவருக்கு எந்த கௌரவக் குறைவும் ஏற்படவில்லை. வெனிஸ் நகர மக்களின் பெருந்தன்மை அந்த சுவற்றில் அழகுடன் மிளிர்கிறது.
நாடுகள் தோறும் இது போன்று மனிதாபிமானமும், ஏழைகளிடம் இரக்கமும் உருவானால் உலகமே செழிப்பாகி விடும்.
ஆங்கில மூலம்
தமிழில் மொழி பெயர்த்தவர்
திரு.சி.சந்திரசேகரன், எம்.ஏ., பி.எட்., தலைமையாசிரியர் (ஓய்வு) கேந்திரிய வித்யாலயா, திருச்சி
அலைபேசி 9843769972
நன்றி : நா.பிரசன்னா - திருச்சி
No comments:
Post a Comment