முசாபர்நகர் கலவரத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்பாக 22 பேரை கைது செய்ய முசாபர்நகர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாஜக தலைவர்கள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர்.
கலவரத்தின்போது, புகானா பகுதியில் 6 முஸ்லீம் பெண்களை ஒரு கோஷ்டியினர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பாலியல் பலாத்காரம் செய்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உ.பி. அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது. விசாரணையில், பாலியல் பலாத்கார சம்பவங்களில் 27 பேர் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் 5 சம்பவங்களில் தொடர்புடைய 22 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. குற்றவாளிகளை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி, முசாபர்நகர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மற்றொரு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், குற்றவாளிகளை கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதற்கு தேசிய சிறுபான்மையினர் கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment