இவர் இருபது ஆண்டுகளாக நீந்தும் தூரத்தைக் கணக்கிட்டால் அது பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கும் இங்கிலீஷ் கால்வாயின் தூரத்துக்கு சமமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆம், அனக்காயம் பஞ்சாயத்தைச் சேர்ந்த படினிஜட்டுமுரியில் உள்ள முஸ்லீம் லொயர் பிரைமரி பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரியும் அப்துல் மாலிக் நாள் தோறும் கடலுண்டிபுழா ஆற்றை நீந்திக் கடந்து தன்னுடைய பள்ளிக்கு பாடம் கற்பிக்க செல்கிறார் என்ற செய்தி புதுமையாகவும், அவருடைய கடமையுணர்வை வெளிப்படுத்தும் தகவலாகவும் இருக்கலாம். ஆனால் அவர் சாலை வழியாக சென்றால் 24 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு மூன்று பேருந்துகளில் மாறிமாறிச் செல்ல வேண்டும் என்பதுடன் அவர் அதிகாலையில் எழுந்து பேருந்தை பிடிக்க தயாராக வேண்டும்.
அத்துடன் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் அவர் நடந்து செல்ல வேண்டும். பலமுறை அவர் பள்ளிக்கு தாமதமாகி தலைமையாசிரியரின் முறைப்புக்கு ஆளாகி வந்துள்ளார். எனவே அவர் கடலாண்டிபுழா ஆற்றை நீந்திக் கடக்க தீர்மானித்தார். இதன் மூலம் அவர் தலைமையாசிரியரின் திட்டுக்கு ஆளாகாமல், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்குச் செல்ல இது உதவுகிறது. மஞ்சேரி மாவட்டத்தில் அனக்காயம் பஞ்சாயத்தை சேர்ந்த பெரும்பாலம் கிராமத்து மக்களுக்கு ஆசிரியர் அப்துல் மாலிக்கின் செயல் ஒரு ஆர்வத்தைக் கிளப்பவில்லை. மாறாக அவர் ஒரு நேரம்காட்டியாக மாறிவிட்டார். தொடக்கத்தில் அவருடைய குடும்பத்தாரும், நண்பர்களும், ஊராரும் அவர் ஆற்றை நீந்திக் கடப்பதை எதிர்த்து வந்தனர். இன்று அவர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஆற்றை நீந்திக் கடப்பதின் மூலம் அவருக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரமும் முப்பது ரூபாயும் மிச்சமாகிறது. அவர் தன்னுடைய வீட்டை விட்டு கிளம்பி ஆற்றங்கரையை அடைய பத்து நிமிடங்கள் ஆகிறது. நாளொன்றுக்கு அவர் 100மீட்டர் போக வர நீந்துகிறார். ஆற்றை நெருங்கியவுடன் ஆற்றங்கரையிலுள்ள வீட்டில் தன்னுடைய சைக்கிளை நிறுத்தி விட்டு, உடைகளை மாற்றிக் கொள்கிறார். தன்னுடைய உடைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்துக்கொண்டு செருப்பை கையில் ஏந்தியபடி ஆற்றில் இறங்குகிறார்.
ஆனால் அவர் தன்னுடைய கண்ணாடியை எக்காரணம் கொண்டும் கழற்றுவதில்லை. ஆற்றைக் கடந்த மூன்றாம் நிமிடத்தில் அவர் தன் உடைகளை மாற்றிக் கொண்டு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் வகுப்பெடுக்க தயாராகி விடுவார். அப்துல் மாலிக் 1992ம் ஆண்டில் இருந்து இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது 40 வயதாகும் இவர் இந்த ஆற்றை பத்தொன்பது ஆண்டுகளாக நீந்திக் கடந்து வருகிறார். அவர் ரசனையோடு நீந்துகிறார். கோடை காலத்தில் அவர் முழங்கால் மட்ட நீரில் நடந்து பள்ளிக்கு செல்கிறார். ஜூன் முதல் டிசம்பர் வரை அவர் காற்றடிக்கப்பட்ட கார் டியூபுடன் ஆற்றில் இறங்கி நீந்துகிறார். டியூப் ஒரு பாதுகாப்புக்காக பயன்படுகிறது. ஆறு பெருக்கெடுத்தோடும் போது டியூப் அவருக்கு உதவுகிறது. ஆற்றில் வெள்ளமோடும் போது கூட தனக்கு ஒரு பிரச்சனையும் எழுந்ததில்லை என்று அப்துல் மாலிக் சொல்கிறார். ஆற்றை நீந்திக் கடப்பதால், தனக்கு நேரம் மிச்சமாகிறது என்றும் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக பள்ளியில் புகார் எழவில்லை என்றும் அவர் கூறுகிறார்.அவர் தன்னுடைய சகா கே.எம் பப்புட்டிக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அவர்தான் ஏன் நீங்கள் ஆற்றை நீந்திக் கடந்து வரக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய பள்ளியும் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ளது. அவர் நீந்தி வருவதைக் கண்ட மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட புதிய உணர்வுகளை இவர் நீச்சலின் பக்கமாக திருப்பி விட்டுள்ளார். அவர்களை நீச்சல் கற்றுக்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். அத்துடன் ஏராளமான மாணவர்களுக்கு அவர் நீச்சலும் கற்றுத்தருகிறார். அவர் நீச்சல் மட்டும் கற்றுத் தரவில்லை, ஆரோக்கியமாக வாழ்வது எவ்வாறு என்றும் சொல்லித் தருகிறார் என்று மாணவர்கள் கூறுகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருக்கும் போது நான் அப்துல் பற்றிக் கவலைப்படுவேன் என்று தலைமையாசிரியர் முகமது பஷீர் கூறுகிறார். ஆனால் அவர் ஒரு போதும் மிரண்டதில்லை என்றும் அவர் சொல்கிறார். ஆற்றில் அவர் நீந்துவதுடன் நின்று விடுவதில்லை. அவரும் அவருடைய நீச்சல் மாணவர்களும் சேர்ந்து ஆற்றில் மிதந்து வரும் கழிவுகளையும், பிளாஸ்டிக்குகளையும் சேகரித்து அகற்றி வருகிறோம் என்று அப்துல் மாலிக் சொல்கிறார்.
இயற்கை நமக்கு கடவுள் தந்த வரமாகும். எனவே அதை நாம் மாசு படுத்தக்கூடாது என்று அவர் உபதேசிக்கிறார். 2029ம் ஆண்டில் தான் ஓய்வு பெறும் முன்பு சுமார் ஆயிரம் மணி நேரம் நீந்தியிருப்பேன் என்று ஒரு கணக்கை அப்துல் கூறுகிறார். தன்னுடைய 35 ஆண்டு கால ஊழிய காலத்தில் சுமார் 700 கி.மீ நீந்தியிருப்பார். இது ஒரு மகத்தான சாதனை. இதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
No comments:
Post a Comment