Latest News

டிசம்பர். 6: பாபர் மசூதி இடிப்பு தினம் குறித்து பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வின் சிறப்பு பேட்டி !!


டிசம்பர். 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நமது வெப்துனியா ஊடகத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி.

இன்று டிசம்பர். 6 – பாபர் மசூதி இடிப்பு நாள், பாபர் மசூதி இருக்கும் இடம் – ராமர் பிறந்த இடம் என்கிற கருத்தின் வரலாற்று பின்னணி என்ன?ராமர் பிரேத்தா யுகத்தில் பிறந்ததாக சொல்லுகிறார்கள். த்ரேத்தா யுகம் என்பது பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டமாகும். இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதை நான் சொல்லவில்லை.
அயோத்தி மகாத்மியம் என்ற நூல் இருக்கிறது. அந்த நூலில் தசரத மன்னனுடைய நான்கு புதல்வர்களும் கெளசல்யாவின் வீட்டில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். பாபரி மஸ்ஜித் இருக்கின்ற இடத்திற்கு பல மீட்டர்கள் தூரத்தில்தான் தற்போதும் கெளசல்யா பவன் இருக்கிறது. ஆக பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்வது சரியாக இருக்க முடியாது. அதுமட்டுமல்ல ராமர் பெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயத்தை விக்ரமாதித்தன் கட்டினார். அந்த ஆலயத்தைத்தான் இடித்துவிட்டு அங்கு பாபரால் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

உதாரணமாக சொல்லவேண்டுமானால், சமஸ்கிருத மொழியிலிருந்த ராமாயணத்தை ராமச்சந்திரமணாஸ் என்று ஹிந்துஸ்தானி மொழியில் மொழிபெயர்த்தவர் துளசிதாசர். அவர் அந்த அயோத்தி நகரத்தைச் சார்ந்தவர்தான். அந்த காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். தன்னுடைய காப்பியத்தின் நாயகனான ராமருடைய கோவிலை பாபர் படையெடுத்து வந்து இடித்தார். அங்கே ஒரு பள்ளிவாசலை கட்டினார் என்று ஒரு குறிப்பைக் கூட பார்க்க முடியவில்லை. கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட காலகட்டத்தில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கும் அந்த பகுதியிலே வசித்து வருகிறார். அவர் பாபர் ஆட்சியைப் பற்றி பல விமர்சனங்கள் செய்திருக்கிறார். ஆனால் ராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை பாபர் இடித்தார் என்று எந்த விமர்சனத்தையும் அவர் வைக்கவில்லை.

பாபர் எப்படிப்பட்ட ஒரு ஆட்சியாளராக இருந்தார் என்று சொன்னால் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயிலியே உன்னுடைய மக்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சி உண்பதை விரும்பவில்லை. எனவே நீ மாட்டிறைச்சி உண்ணக்கூடாது. ஆலயங்களை இடிக்கக்கூடாது என்று உயில் எழுதியிருக்கிறார். அந்த உயில் இப்போதும் டெல்லி தேசிய அருங்காட்சியத்திலே வைக்கப்பட்டுள்ளது. இப்படியாக பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். இல்லாத ஒரு ஆலயத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டதுதான் பாபரி மஸ்ஜித் என்பது சங்பரிவார் அமைப்புகள் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக உற்பத்தி செய்த ஒரு பொய்யான தகவல் என்பதுதான் எனது கருத்து.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து உங்கள் கருத்து?பாபரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் பாபரால் கட்டப்பட்டதில்லை. பாபருக்கு முந்தைய ஆட்சியாளர்கள்தான் இந்த பள்ளிவாசலை கட்ட துவங்கினார்கள். இந்த மஸ்ஜித் கட்டிமுடிக்கப்படாத ஒரு சூழலில் மீர்பாகி என்ற பாபரின் ஆளுநரால் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு தனது ஆட்சியாளர் பெயரையே அவர் சூட்டுகிறார். தொடர்ச்சியாக அந்த பள்ளிவாசலிலே வழிபாடுகள் நடந்து வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இது ராமர் ஆலயம் இருந்த இடம் என்று யாரும் உரிமை கோரவில்லை என்று நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு தொழுகை நடத்தி முடித்துவிட்டு முஸ்லீம்கள் சென்றபிறகு ஒரு கும்பல் பள்ளிவாசலுக்குள்ளே நுழைந்து பூட்டை உடைத்து ராமர், லக்ஷ்மணன், அனுமன், சீதை சிலைகளை வைத்துவிட்டனர். இதுகுறித்து அயோத்தி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின் எப்.ஐ.ஆரில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, “கள்ளத்தனமாக உள்ளே நுழைந்து சிலைகள் வைக்கப்பட்டன” என்று.

அப்போது என்ன செய்திருக்க வேண்டும் என்று சொன்னால் இந்த சிலைகளை அகற்றி பள்ளிவாசலை முஸ்லீம்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அன்று அவுத் மாநிலத்தினுடைய, அதாவது இன்றைய பைசாபாத் மாவட்டத்தினுடைய ஆட்சியராக இருந்த, அங்கே மேஜிஸ்ட்ரேட் என்று அழைக்கப்படும் கே.கே.நயார் நியாயத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டார். அதனால்தான் அவர் பாரதிய ஜன சங் சார்பாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பள்ளிவாசல் பூட்டப்பட்டது. முஸ்லீம்கள் அதன் அருகே செல்வதைக் கூட தடுத்தார்கள்.இந்த சூழலில்தான் பிப்ரவரி 2 ஆம் நாள், 1986 ஆம் ஆண்டு இந்த பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பென்ச்சில் நிலுவையில் உள்ள சூழலிலே ஒரு சாதாரண மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார் என்ற காரணத்துக்காக பூட்டுகள் உடைக்கப்படுவதற்கு உத்தரவிடப்படுகின்றது. அதற்கு பிறகு அங்கே வழிபாடுகள் நடைபெற்று வரும் ஒரு சூழலைப் பார்க்கின்றோம். இது தொடர்பாக வழக்குகள், பிரச்சனைகள் இருக்கின்ற சூழலிலே, இழந்துவிட்ட செல்வாக்கை மீட்க அத்வானி தலைமையில் ரத யாத்திரை போன்ற நிகழ்வுகளும், ராமர் பேரிலே மத உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்த நிலையிலேதான் 1992 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் நாங்கள் கரசேவை செய்யப் போகிறோம் என்று அறிவிப்பு செய்தன.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்னது, கரசேவையில் பஜனைகளும், கீர்த்தனைகளும்தான் இருக்க வேண்டும். அந்த பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடிதான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுருத்தியது. தீர்ப்பே சொன்னது. ஆனால் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு 1992, டிசம்பர் 6 ஆம் நாள் உலக மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது வெளிச்சத்திலே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

இடிக்கப்பட்டது பாபரி மஸ்ஜித் மட்டுமல்ல. இந்தியாவினுடைய வழிபாட்டு உரிமை; இந்தியாவினுடைய மதசார்பின்மை; இந்தியாவினுடைய சமூக நல்லினக்கம்; அனைத்தையும் அந்த தீவிரவாதிகள் இடித்து தரைமட்டமாக்கினார்கள் என்பதுதான் யதார்த்தமான நிலை.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட வகுப்பு கலவரங்கள் குறித்து உங்கள் கருத்து?பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக மும்பையிலே டிசம்பர் 1992-லும், ஜனவரி 1993-லும் மிகப்பெரிய அளவில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்கள் வெடித்தன. இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் மிகத்தெளிவாகச் சொன்னது, மும்பையில் நடைபெற்ற கலவரத்திற்கு சிவசேனா மிக முக்கியமான காரணம். சிவசேனா தலைவர் பால்தாக்ரே ஒரு ராணுவ ஜெனரல் போல இந்த கலவரத்தை வழிநடத்தினார் என்று அவர் தாக்கல் செய்த அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த பால்தாக்ரே இறந்தபோது அவர் தேச மரியாதையுடன், அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதைப் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக 1992-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.எஸ்.லிபரான் ஆணையம், 2009 தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதிலே 63 பேர் குற்றவாளிகள் என்று கூறியிருந்தது. அதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், அகோக் சிங்ஹால் உள்ளிட்ட 63 பேரை குற்றவாளிகள் என்று சொன்னது. ஆனால் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பு என்ற நிகழ்வு பாஜக-வுக்கு அரசியல் ரீதியிலான ஒரு லாபத்தைக் கொடுத்தது. ஆனால் இந்தியா என்ற மதச்சார்பற்ற நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைத்துவிட்டது என்பதுதான் யதார்த்தமான நிலை.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்திருப்பதையும், ஊடகங்கள் அவரை ஊதிப் பெருக்குவதையும் ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?மிக அழகாக சொன்னீர்கள், ஊடகங்கள் ஊதி பெருக்குகின்றன என்று! ரூ.500 கோடி செலவிலே ஒரு அமெரிக்க நிறுவனத்தை மோடி தன்னுடைய விளம்பரத்துக்காக நியமித்துள்ளார். இந்த நிறுவனம் எப்படிப்பட்டதென்றால் புகைப்பிடிப்பதற்கு எதிராக உலகம் முழுவதும் ஒரு எழுச்சி வந்தபோது அதை மட்டுப்படுத்துவதற்காக, புகைப் பிடிப்பதில், சிகரெட் பிடிப்பதில் நன்மை இருக்கிறதென்று சொல்லி விளம்பரம் செய்த நிறுவனத்தைதான் மோடி தேர்ந்தெடுத்து, அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, இணையதள ஊடகமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் ஊதி பெருக்குகின்ற ஒரு நிலையைதான் பார்க்கிறோம். அதனுடைய வெளிப்பாடுதான் உத்தரகாண்ட்டிலே வெள்ளம் ஏற்பட்டபோது ஒரே நாளில் 17,000 பேரை 90 இன்னோவா காரில் மோடி தூக்கிக் கொண்டுவந்தார் என்ற செய்தி. இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்தான். இதில் யதார்த்த நிலை இல்லை. இந்த பலூன் ஊதப்பட்டு வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த பிம்பம் உடையும் என்பதில் ஐயமில்லை.

குஜாராத்தில் வளர்ச்சியில்லை என்பதுதான் யதார்த்தம். உதாரணமாக ‘வைபரன்ட் குஜராத்’ அதாவது ‘உயிர்துடிப்பான குஜராத்’ என்ற பெயரிலே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டி பல விளம்பர நிகழ்ச்சிகளை மோடி செய்கிறார். அப்படி செய்தபிறகும் குஜராத் முதல் இடத்திற்கு வந்திருக்கிறதா? என்றால் இல்லை. 5-வது இடத்தில்தான் இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டுக்கும் கீழேதான் இருக்கிறது. குஜராத்தில் நாங்கள் மக்களை சரிசமமாக நடத்துகிறோம். யாருக்கும் எந்த பேதமும் பார்ப்பதில்லை என்று சொல்லக்கூடிய அதே குஜராத்தில் அகமதாபாத் மாவட்டத்திலேயே, தீண்டாமை இன்னும் கொடிகட்டி பறக்கிறது.

நம்முடைய தமிழ்நாட்டில் இன்னமும் சில கிராமங்களில் இரட்டைகுவளை இருக்கிறதென்று சுட்டிக்காட்டி பேசி வருகின்றோம். மோடி ஆளக்கூடிய குஜராத்தில் அது யதார்த்தமான நிலையாக இருக்கிறது. காய்கறி கடைக்குப் போய் ஒரு தலித் சகோதரன் காய்கறியை பதம் பார்த்து, கை தொட்டு வாங்க முடியாது. இவர் சுட்டிக்காட்ட வேண்டும். அவர் வீசுவார். இவர் பணத்தை வீச வேண்டும். தண்ணீர் கொடுப்பதற்குக் கூட ஜாதி ரீதியாக நேரம் ஒதுக்கிய மாநிலமாக குஜராத் இருக்கிறது. இப்படியாக நான் அடுக்கிக் கொண்டே போகலாம். மோடி ஆட்சிக்கு வருவதென்பது பணக்கார வர்க்கத்திற்கு, கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்குமே தவிர அடித்தட்டு மக்களுக்கு எந்தவிதமான சாதகமான சூழலும் இருக்காது.மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்ட டாடா நானோ கார் உற்பத்தி சாலையை குஜராத்திற்கு கொண்டு வந்தார் மோடி. அது 2500 கோடி ரூபாய் முதலீடு உள்ள ஒரு வியாபாரம். டாடா இந்தியாவிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரர் பாருங்கள். அதனால் 10,000 கோடி ரூபாய் கடனை நரேந்திர மோடி, டாடாவுக்கு கொடுத்திருக்கிறார். மோடி ஆட்சிக்கு வரும்போது குஜராத்தின் கடன் சுமை சுமார் 45,000 கோடி ரூபாய். ஆனால் இன்று குஜராத்தின் கடன் சுமை 1,76,000 கோடி ரூபாய். எனவே குஜராத்தில் வளர்ச்சி என்று சொல்வதெல்லாம் வெறும் பிம்பமாகதான் இருக்கிறது. குஜராத்தின் உண்மை நிலை பற்றி சமூக அக்கறை உள்ள இந்தியர்களால் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இவர் பிரதமராக வருவது ஒரு கனவாகதான் இருக்க முடியும்.
டிசம்பர். 6 புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் என்பதை பாபர் மசூதி இடிப்பு நாள் என்று மாற்றியதன் அரசியல் பின்னணி குறித்து உங்கள் கருத்து?இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தலித் சமூகமும், முஸ்லீம் சமூகமும். இரண்டு சமூகங்களும் அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நிச்சயமாக ஆதிக்கம் செலுத்துகிறவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதில் மிகவும் பாதிக்கப்பட போவது நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சியைப் போன்ற சங் பரிவார் அமைப்புகள்தான். ஏனென்றால் அவர்களுடைய குருநாதர் கோல்வார்கருடைய எழுத்துக்களிலேயே அதைப் பார்க்கலாம். இந்த உலகத்திலேயே சிறந்த சட்டம் மனு ஸ்மிருதி என்று வர்ணிக்கிறார்.

அந்த மனு ஸ்மிருதி எப்படிப்பட்ட தீண்டாமையைக் கடைபிடிக்கிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படுகின்ற பட்டியலின மக்களுக்கு அதாவது பஞ்சமர்களுக்கு உடைந்த பாத்திரத்தில்தான் உணவு கொடுக்க வேண்டும். கிழிந்த ஆடைகளைதான் கொடுக்க வேண்டும். கெட்டுப் போன உணவு பதார்த்தங்களைதான் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் மனுவிலே சொல்லப்பட்டிருக்கின்றது.

முஸ்லீம்களைப் பொருத்தவரை இவர்கள் அந்நியர்கள், இவர்கள் இந்த நாட்டில் எந்தவிதமான உரிமையும் கோராமல் அடிமைகளைப் போல இருக்க வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு சமூகங்களும் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக தங்களுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடியாது என்றுதான் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை, இந்திய வரலாற்றின் கருப்பு தினமாக மாற்றியிருக்கிறார்கள். மக்கள் உணர்ந்து வருகிறார்கள். இவர்களின் சதித்திட்டங்களெல்லாம் நிச்சயமாக தவிடுபொடியாகும்.

நன்றி : வெப்துனியா & இன்று ஒரு தகவல்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.