நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அலையை உடைப்போம் என்று தமிழக சமாஜ்வாதி கட்சி சபதம் எடுத்துள்ளது.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநிலத்தலைவர் இளங்கோ யாதவ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதவெறிபிடித்த பா.ஜ.க, ஊழல் கறைப்படிந்த காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக இந்திய அளவில் 15 கட்சிகள் இணைந்த 3வது அணி உருவாகி வருகிறது. இந்த அணி, தேர்தலுக்கு பின் முழுமை அடையும். வரும் தேர்தலில் 3வது அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, உ.பி., மாநிலங்கள்தான் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. முலாயம்சிங் யாதவ் 3வது அணியின் சார்பில் பிரதமர் ஆவார். காங்கிரஸ், பா.ஜ.விற்கு நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழக்கும் நிலை வரும்.
தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் எங்கள் கட்சி வலுவாக உள்ளது. இந்த 6 தொகுதிகளில் ஒன்றில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிட வேண்டும் என தமிழக சமாஜ்வாதி விரும்புகிறது.
ஏற்காடு இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கிறது. வரும் 27 ஆம் தேதி எங்கள் கட்சி சார்பில் ஏற்காட்டில் பிரசாரம் செய்ய உள்ளோம். டிசம்பர் 21ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் கட்சி தொண்டர்கள் மாநில மாநாடு நடக்க உள்ளது. அதில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்கிறார்.
பிறகு வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திருநெல்வேலியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாநில மாநாடு நடைபெறும். அதில் சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவரும் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் மோடி அலைவீசுவதாக சொல்கிறார்கள் அந்த அலையை எங்கள் கூட்டணி பொய்யாக்கும்” என்றார்.
சி.ஆனந்தகுமார்
No comments:
Post a Comment