Latest News

  

உடல் வலியை ஏற்படுத்தும் பல்வேறு காரணங்கள்


இன்றைய காலச்சூழ் நிலையில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் வலி. பொதுவாக இந்த உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ சந்திக்க நேரிடும். 


ஆனால், சில நேரங்களில் இந்த உடல் வலி சில நோய்களுக்கான அறிகுறியாகவும் உள்ளது. உடல் வலி எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று. இத்தகைய உடல் வலியில் பல வகைகள் உள்ளன. 

அதில் தலை வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தசை வலி போன்றவை பொதுவானவை. மற்றொரு வித்தியாசமான வலி தான் நரம்புகளில் ஏற்படக்கூடிய வலி. இந்த வலியானது நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் பலவீனமடையும் போது ஏற்படும். இதற்கு நரம்புநோய் வலி என்று பெயர். 

இப்போது அத்தகைய உடல் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.. உடல் வலி ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்று தான் காய்ச்சல். அதிலும் காய்ச்சல் வந்தால், உடலில் எந்த பகுதி வலிக்கிறது என்று சொல்லவே முடியாது. 

அந்த அளவில் உடல் முழுவதும் வலி ஏற்படும். ஏனெனில் உடலில் கிருமிகளை எதிர்த்துப் போராடக்கூடிய கெமிக்கல் குறைவாக இருப்பதால், அந்த கிருமிகள் உடலை தாக்குவதால் வலி ஏற்படுகிறது. 

மலேரியா : கொசுக்களால் ஏற்படும் மலேரியா என்னும் தொற்று நோயின் காரணமாகவும் உடல் வலி ஏற்படும். அதிலும் மலேரியா தான் உள்ளது என்று எளிதில் அறியும் வகையில், உடலில் கடுமையான வலியை உணரக்கூடும். 

நீரிழிவு  : நீரிழிவு நோய் இருந்தால், அடிவயிறு மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்படும். இவ்வாறு நீரிழிவு நோயால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த, சரியான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 

ஆர்த்ரிடிஸ்  : உடல் வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் முதன்மையானவை ஆர்த்ரிடிஸ். எப்படியெனில் ஆர்த்ரிடிஸ் வந்தால், குறுத்தெலும்புகளில் தோய்வு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி, கடுமையான வலியை உண்டாக்கும். மேலும் இந்த ஆர்த்ரிடிஸ் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது சிறியவராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி. 

பைப் ரோமியால்ஜியா  : இந்த நாள்பட்ட வலியின் முக்கிய அறிகுறி தான் உடல் வலியுடன் கூடிய, சோர்வு மற்றும் தூக்கமின்மை. இது பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள். 

நாள்பட்ட சோர்வு  : நாள்பட்ட சோர்வு இந்த நோய்த் தாக்கத்தின் அறிகுறிகளில் முக்கியமானது. அதன் தொடர்ச்சி தான் கடுமையான உடல் வலி. இந்த நோய் வந்தால், உடல் வலியுடன், அதிகப்படியான சோர்பு மற்றும் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். 

மன அழுத்தம்  : தற்போது மன அழுத்தத்தினால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு கடுமையான தலை மற்றும் தசை வலியுடன், சோர்வு, தூக்கமின்மை, அத்துடன் சில நேரங்களில் மார்பு வலியும் ஏற்படும். 

காசநோய்  : காசநோயானது ஒரு தொற்றுநோய். இந்த நோய் வந்தால் கல்லீரலானது அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படும். மேலும் ஆய்வு ஒன்றிலும், கடுமையான இருமலுடன், நாள்பட்ட உடல் வலியும் இருந்தால், அது காசநோய்க்கான முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

புற்றுநோய்  : காரணமின்றி அளவுக்கு அதிகமாக உடல் வலி இருந்தால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். ஏனெனில் புற்று நோய் செல்கள் உடலில் பரவுவதால், அவை கடுமையான வலியை உண்டாக்குகின்றன. 

லூபஸ்  : என்ன பெயர் புதுசா இருக்கா ஆம், இது ஒரு கொடிய நோய். ஏனெனில் பொதுவாக உடலில் கிருமிகளை எதிர்த்துப் போராடும் செல்கள், உடலில் உள்ள நல்ல செல்களை அழிக்க ஆரம்பிக்கும். இவ்வாறு அழிக்க ஆரம்பிக்கும் போது, உடலில் பல பிரச்சனைகளுடன், அளவுக்கு அதிகமான மற்றும் கடுமையான உடல் வலியை சந்திக்க நேரிடும். 

இரைப்பை குடல் அழற்சி  : பொதுவாக உடலில் நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். ஆனால் இரைப்பை குடல் அழற்சி இருந்தால், அத்துடன் உடல் வலியும் ஏற்படும். 

நாள்பட்ட மூட்டுவலி  : நாள்பட்ட மூட்டுவலிகள் என்பது மூட்டுகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அதனை அசைக்க முடியாத அளவில் வலியை உண்டாக்குவதாகும். இந்த நோய் வந்தால், உடலில் உள்ள மூட்டுகளில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும். 

டெங்கு காய்ச்சல்  : டெங்கு வைரஸால் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏற்படும் ஒரு வகையான காய்ச்சல் தான் டெங்கு காய்ச்சல். இந்த காய்ச்சல் இருந்தால் மூட்டு வலி, தசை வலி மற்றும் தலை வலி ஏற்படும். 

பொட்டாசியம் குறைபாடு  : உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், அடிக்கடி உடல் வலி ஏற்படும். 

டாக்சோபிளாஸ் மோஸிஸ்  : டாக்சோபிளாஸ்மோஸிஸ் ஒரு ஒட்டுண்ணி நோய். இந்த நோய் பெரும்பாலும் பூனைகளின் மூலம் தான் பரவும். இந்த நோய் இருந்தாலும், நாள்பட்ட உடல் வலி உண்டாகும். 

உடற்பயிற்சி  : உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக மேற்கொண்டால், தசை மற்றும் மூட்டு வலி ஏற்படும். அதிலும் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன், ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சியை செய்யாவிட்டாலும், உடல் வலி ஏற்படும். 

ஊறு விளைவிக்கும் காயம்  : தொடர்ச்சியாக நரம்புகள் அல்லது தசைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டால், உடல் வலி ஏற்படும். 

எய்ட்ஸ்  : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொடிய நோயான எய்ட்ஸ் இருந்தாலும், கடுமையான உடல் வலியை சந்திக்கக்கூடும். எனவே மேற்கண்ட வலிகளுக்கான காரணங்களை முறையாக அறிந்து தகுந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.  நன்றி : http://www.kulasaivaralaru.blogspot.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.