தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவசர சட்டத்தை திரும்பப் பெறலாம் என்று அரசுக்கு இக்கூட்டம் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் முடிவை அவர் ஜனாதிபதியிடம் விவரித்தார்.
இருப்பினும் அவசர சட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தியது. அதே நேரத்தில் இடதுசாரித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோர் மத்திய அரசு அவசர சட்டத்தை திரும்பப் பெறுவது என்பது நல்ல நடவடிக்கை என்று கருத்து தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸோ, அது பற்றி பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. பின்னர் கூட்டணிக் கட்சிகளிடம் அவசர சட்டம் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார். அத்துடன் அவசர சட்டம் வாபஸ் குறித்து அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியுடனும் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி அமைச்சர்களான சரத்பவார், அஜீத்சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் தண்டனை பெற்ற கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டத்தைக் கைவிட மத்திய அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்தது. மேலும் இது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது திரும்பப் பெறுவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment