டமாஸ்கஸ்: சிரியா அருகே மத்திய தரைக் கடல் பகுதியில் இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வந்து விழுந்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன. ஆனால், இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஏவுகணை பயிற்சி நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுவிட்டது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, ஐ.நா. சபையிடம் கேட்காமலேயே நேரடியாக சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த விவகாரத்தில் தனது நாடாளுமன்றத்தில் அனுமதி பெற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முயற்சித்து வருகிறார். இந்த அனுமதி கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இந் நிலையில் சிரியாவை நோக்கி இரு நீண்ட தூரம் சென்று தாக்கும் பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதை தெற்கு ரஷ்யாவின் அர்மவீர் பகுதியில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு ரேடார்கள் கண்டுபிடித்தன. இன்று காலை 10.16 மணியளவில் சிரியாவை நோக்கி வந்த இந்த இரு ஏவுகணைகளும் மத்திய தரைக் கடல் பகுதியில் (Mediterranean Sea) விழுந்துவிட்டதாகவும், அவை சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா கூறியது.
மேலும் இது குறித்து அதிபர் விளாடிமீர் புடினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு விவாதித்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. கடந்த வாரம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை சிரியாவுக்கு நெருக்கமாக அனுப்பியது. இதை கடுமையாக கண்டித்த ரஷ்யா, போட்டிக்கு தனது உளவு பார்க்கும் போர்க் கப்பல்களை சிரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது. அதே போல அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான USS Nimitz கப்பலும் ரெட் சீ பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளன. இந்தக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இஸ்ரேல் கூறியது. அமெரிக்காவும் ஆழ்ந்த அமைதி காத்தது. இந் நிலையில் நீண்ட நேரத்துக்குப் பின் அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணை சோதனை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. இதன்மூலம் இந்த இரு நாடுகளின் ஏவுகணைகள் தான் சிரியாவை நோக்கி வந்தன என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேலின் இந்தச் செயல், அந்தப் பிராந்தியத்தில் ஒரு போருக்குக் காரணமாகிவிடும் என்று சிரியா எச்சரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிரடியாய் உயர்வு:
எப்படா சண்டை வரும் என்று காத்திருக்கும் யூக வியாபாரிகள், புரோக்கர்களுக்கு இந்த ஏவுகணைகள் விவகாரம், காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்ததால், லண்டன் பங்குச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உடனடியாக 1.2 சதவீதம் உயர்ந்தது. இது இன்னும் மேலே போகவும் வாய்ப்புள்ளது.
நன்றி : on india
No comments:
Post a Comment