அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின்அழகிய திருப்பெயரால்...
மீடியா உலகில் முஸ்லிம்கள்
முஸ்லிம் தொழிலதிபர்கள் வியாபாரத்திலோ, இன்ன பிற தொழில்துறைகளிலோ மட்டும் கவனம் செலுத்தி வந்த காலம் மலையேறி விட்டது. இன்று சமுதாயத்தில் மிகப் பலமுள்ள மீடியாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லோரையும் எளிதில் சென்றடையக்கூடிய தொலைக்காட்சி ஊடகத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தொழில்துறைகளில் உடனே ஈட்டும் லாபம் மாதிரி மீடியா உலகில் ஈட்ட முடியாது என்றறிந்திருந்தும், அது பிரபலமாகி சூடுபிடிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றறிந்திருந்தும் காலத்தின் தேவையறிந்து பெரும் மூலதனத்தை இதில் கொட்டியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.
இது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தில் எற்படவிருக்கம் பிரகாசத்தை இப்போதே காட்டுகிறது. ஆனால் அப்படி ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முஸ்லிம் ஊடகம் என்றாலே வெறும் பயானும், இன்ன பிறமதச் சடங்குகளும், ஆச்சாரங்களும் தான் காட்டப்படும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
கடந்த ரமலானில் முஸ்லிம்கள் தொலைக்காட்சிச் சானல்களில் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து ஆளூர் ஷாநவாஸ் ஒரு கட்டுரையில் அழகாக அலசியிருந்தார். எந்தச் சானலைத் திருப்பினாலும் வெறும்பயான் மட்டும் தான் நடத்தப்படுவதாக அதில்அவர் கவலை தெரிவித்திருந்தார்.
காட்சி ஊடகம் என்பது காட்சிப்படுத்துதலை மையப்படுத்தி அமைந்திருக்க வேண்டும். ஆயிரம் வார்த்தைகளை ஒருகாட்சி அழகாக வர்ணித்துவிடும். அது தான் மக்கள் மனங்களில் பதியவும் செய்யும்.
இன்று மீடியா என்பது பெரிய பெரிய ஜாம்பவான்களின் கைகளில் உள்ளது. அவர்களோடு நாம் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நமது நிகழ்ச்சிகள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் நாம் மீடியாவில் நிலைத்திருக்க முடியும்.
திஹிந்து-ஃப்ரண்ட்லைன்
சில வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள திஹிந்து- ஃப்ரண்ட்லைன் அலுவலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரமாண்டமான இடம். ஒருபக்கம் அலுவலகம். இன்னொரு பக்கம் அச்சுக்கூடம். அலுவலகம் அத்துணைஅழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள். குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதி. மனிதத் தலைகள்மட்டும் தெரியும். அரைகேபின் அறைகளிலுருந்து DTP தட்டச்சு செய்யும் சப்தம் மட்டும் தட் தட்.. என்று வந்து கொண்டிருந்தது. மறுபக்க அச்சுக் கூடத்திலோ உலகிலேயே அதிக விலையுள்ள வெப் ஆஃப் செட் அச்சு இயந்திரங்கள்.
ஒரு நிமிடத்திற்கு இத்தனை பிரதிகள் என்று அச்சடித்துத் தள்ளும் வேகம் கொண்டவை அவை. லாரி லாரியாக நியூஸ் பிரிண்ட் காகிதங்களின் ரோல்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன.
இன்னொரு பக்கம் லாரி லாரியாக அச்சடிக்கப்பட்ட பிரதிகள் டெலிவரிக்காக வெளியே சென்று கொண்டிருந்தன. பார்க்கப் பார்க்கப்பரவசமாக இருந்தது. ஆனால் அடிமனதில் ஓர் ஏக்கமே மிஞ்சியது. நாம் இவர்களை விட மீடியா உலகில் சுமார்100 வருடங்கள் பின்தங்கியுள்ளோம் என்ற எண்ணம் தோன்றி, மனதை ஆட்டிப் படைத்தது.
இன்று மீடியாவில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கும் முஸ்லிம் தனவந்தர்கள் முன்பே இதில் கவனம் செலுத்தியிருந்தால் நாமும் இன்று மெயின்ஸ்ட்ரீம் மீடியா எனும் பொது ஊடக உலகில் ஒரளவு சாதித்திருப்போம்.
நாம் அதில் காலடி எடுத்து வைக்காததன் விளைவை இன்று அனுபவித்து வருகிறோம். இன்று மீடியாவில் ஃபாசிசம் வேரூன்றிவிட்டது.
ஃபாசிசம் வேரூன்றிவிட்ட இன்னொரு முக்கிய துறை நமது அரசு அதிகாரவட்டம். இன்று மீடியாவும், அதிகார வட்டமும் இணைந்து முஸ்லிம்களை வேட்டையாடி வருகின்றன.
அதிகாரவட்டத்திற்கு முஸ்லிம்களை வேட்டையாட வேண்டுமென்றால் மீடியாவின் தேவைமிக அவசியம். மீடியாவுக்கோபயங்கரவாதம், தீவிரவாதம் என்று குய்யோ முய்யோ என்று பரபரப்பாக்கி காசு பார்ப்பதற்கு முஸ்லிம்கள் வேட்டையாடப்பட வேண்டும். ஆக, மீடியாவும், அதிகார வட்டமும் நகமும் சதையும் போல இணைந்திருந்து இந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றுகின்றன.
இன்று நவீன காலனியாதிக்க சக்திகள் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கெதிராகவும் கச்சை கட்டி களம் இறங்கியிருக்கின்றன. இவர்களுக்கு ஒத்தூதி ஒத்தாசை புரிபவர்கள் சாதாரண பத்திரிகையாளர்கள் அல்ல.
நல்ல தரம்மிக்க பத்திரிகையை நடத்துபவர்கள். மீடியாவில் சாதித்தவர்கள். சக்கை போடு போட்டவர்கள். இவர்களெல்லாம் இன்று அறிந்தோ, அறியாமலோ ஃபாசிசத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றனர்.
மீடியா என்றால் உலகின் அனைத்துத் தரப்புச் செய்திகளும் அங்கே அங்கம் வகிக்கவேண்டும். எல்லோரது செய்திகளும் இடம்பெற வேண்டும். உலகின் நாலா புறங்களிலிருந்தும் செய்திகள் பரிமாறப்பட வேண்டும். அனைத்து மக்களின் கலாச்சாரங்களும் அதில் பிரதிபலிக்க வேண்டும். எல்லா மக்களின் இன்பங்களும், துன்பங்களும் அங்கே பரிசீலிக்கப்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் உகந்த பார்வையில் செய்திகள் சொல்லப்படவேண்டும். இதுதான் மீடியா தர்மம்.
ஆனால் அப்படி நடக்கிறதா? இன்று இந்திய அளவிலும் சரி, உலக அளவிலும்சரி... மீடியாவில் ஒரு குறிப்பிட்ட மக்களின் கலாச்சாரங்கள் தான் பிரதிபலிக்கின்றன. ஆதிக்க சக்திகளின் கஷ்ட, நஷ்டங்கள் தான் அலசப்படுகின்றன. வல்லரசு நாடுகளின் பார்வையில்தான் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அப்படியென்றால் அதனை மீடியா என்று சொல்லமுடியுமா?
உலக அளவில் எடுத்துக்கொண்டால் மேற்கிலிருந்து கிழக்கிற்கு செய்திகள் வருகின்றன. அவ்வளவுதான். அதாவது மேலை நாடுகள் என்ன எண்ணுகின்றனவோ, அவை எவைகளை செய்திகளாகக் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கின்றனவோ அவை கீழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம் : M.S அப்துல் ஹமீத்
நன்றி : http://www.kayalnews.com
No comments:
Post a Comment