Latest News

  

தக்வா பள்ளியில் இடர்கள் கலைந்து, பயான் தொடர்ந்தது…!


அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே..

திருக்குர்ஆன் 8:30.  (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

திருக்குர்ஆன் 3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

திருக்குர்ஆன் 4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

திருக்குர்ஆன் 6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

திருக்குர்ஆன் 8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

அல்லாஹ்வின் மிகப்பெறும் கிருபையால் நமதூர் பாரம்பரியமிக்க தக்வா  பள்ளியில் மார்க்க பிரச்சாரகர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு, தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 28-ஏப்ரல்-2013, மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வழமைபோல் இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

27-ஏப்ரல்-2013 அன்று தக்வா பள்ளி 7 பேர் கொண்ட செயற்குழுக் கூட்டம், நடைபெற்றது. இதில் வழக்கம் போல் தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு இனியும் தொடர்ந்து நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது என்ற உண்மைச் செய்தியை உடனுக்குடன் அதிரை செய்திகளை சுடச்சுட அளித்துவரும் நமதூர் வலைத்தளங்கள் தர தவறியது மட்டுமன்று சில வலைத்தளத்தில் தவறான தகவல்களும் பதியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த ஒருவாரமாக மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் பேசப்பட்டு வந்த அதிரை பற்றிய செய்தியில் தக்வா பள்ளியில் வழக்கமாக நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிறுத்தப்பட்டதாக வெளிவந்த சர்ச்சையான தகவலுக்கு பின்னர் நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் அந்தச் சூழலின் உண்மை நிலவரத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே ஆய்வு செய்து இரண்டு பதிவுகள் பதிந்தோம். 


நம்மிடம் இருந்த, மேலும் கிடைத்த வலுவான ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, இந்த சர்ச்சையில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சி வலை கிழித்தெறியப்பட்டது.

மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி  மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல், நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் குழுவில் உள்ளவர்களின் சொந்தங்களிடம் மறைமுக மிரட்டல்கள் செய்தும், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். இவை அனைத்தையும் அல்லாஹ்வின் மாபெறும் உதவியால் வென்றெடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

தக்வா பள்ளியில் மார்க்க சொற்பொழிவு வழக்கம் போல் நடைபெற்றது என்பதை நினைத்து ஒரு வகையில் நாம் சந்தோசமடைந்தாலும், நம் சகோதரர்கள் சத்தியத்துக்கு எதிராக அல்லாஹ்வின் விபரீதங்கள் அறியாமல் மேலும் மேலும் சூழ்ச்சிகள் செய்து அவமானப்பட்டு போவார்களோ என்ற ஓருவித அச்சவுணர்வும் நம்மில் பலரிடம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

யா அல்லாஹ்,  இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் சூழ்ச்சிகள் செய்யும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் மார்க்க தெளிவை தந்தருள்வாயாக..

இதில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள், யார் அவமானப்பட்டார்கள் என்று நாம் தனி நபர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களைப் பதிவதைவிட. இறைவனை மட்டும் புகழ்ந்து, தவறு செய்த சம்பத்தப்பட்ட சகோதரர்கள் திருந்த வேண்டும், அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) என்ற அத்தியாயத்தில்  45 வது வசனம் முதல் (27:45)  முதல்  53வது வசனம் வரை (27:53) கொஞ்சம் நிதானமாக வாசித்துப்பாருங்களேன், அண்மைக் கால அதிரை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விதமாக இருக்கும். அனைத்தையும் மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே…

இங்கு நாம் அழுத்தமாக சொல்ல விரும்பும் தகவல் என்னவென்றால், தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை நிறுத்தியது தொடர்பாக உண்மைக்கு புறம்பான அரைகுறை செய்திகளை வெளியிட்ட  அதிரை வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பணம் படைத்தவர்களின் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயக்கமிருப்பின் தயவு கூர்ந்து தவறான செய்திகளைப் பதிந்து உண்மை நிலவரத்தை மறைத்து நமதூர் சகோதரர்களை குழப்ப வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பிறமதத்தவர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி செய்திகள் போட்டுவிட்டால் முஸ்லீம் ஊடகங்கள் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளுவது போல் சத்தியத்துக்கு எதிராக எல்லைமீறி சூழ்ச்சிகள் செய்துவரும் நம்மவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை அவ்வகை தவறுகளிலிருந்து திருத்தும் விதமாக செய்திகளை வெளியிடுவதும் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளலாமே இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக நினைவுறுத்துகிறோம், மெளலவி ஹைதர் அலி ஆலிம் என்ற தனி மனிதரை மட்டும் உயர்த்தி மற்ற மெளலவிகளை தாழ்த்தும் எண்ணம் எங்களுக்கு துளியளவும் இல்லை. தர்கா வழிபாடு, இணைவைப்பு மவ்லிது, அனாச்சாராங்கள், மூட நம்பிக்கைகள், பித்அத்துகளுக்கு எதிராகவும், சத்தியத்தை தைரியமாக எடுத்துச் சொல்லும் அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ், நம் அனைவருக்கும் பொறுமையையும், நிதானத்தையும் தருவானாக. 

சத்தியத்துக்கு ஆதரவாகவும், அசத்தியத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நன்மக்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல்குர் ஆன் 17:81)

நய வஞ்சகத்துக்கு எதிரான போராட்டம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

நன்றி : அதிரைநிருபர் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.