Latest News

  

சர்வதேச அமைப்பு 'கவியன்பன்' கலாம் அவர்களிடம் நடத்திய நேர்காணல் !


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு நமதூர் யாப்பில் மூத்த கவிகளில் ஒருவர் 'கவியன்பன்' , 'கவிக்குறள்' என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால அன்புடன் அழைக்கப்படும் சகோ. அபுல் கலாம் பின் ஷேய்க் அப்துல் காதிர் அவர்களிடம் நடத்திய நேர்காணல் !


கவி உலகில் தனக்கென்று ஓர் இடத்தை படித்திருக்கும் அன்பான சகோதரர் கவியன்பன் கலாம் இலங்கை மக்கள் மனங்களில் நிழலாடும் இந்தியக் கவிஞர் இந்த அன்பான சகோதரன் என் கேள்விகளுக்குள் பதிலாக அமர்ந்து கொண்டார் அவரை அன்போடு வரவேற்கின்றேன்.



01. உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள் ?
இந்தியா என் தாய்நாடு; மாநிலம் தமிழ்நாடு;மாவட்டம் தஞ்சாவூர்; ஊர்:
அழகியகடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்” ; என் வாப்பா 1957 வரை
உங்களின்இலங்கையில் - கொழும்பில் வணிகம் செய்தவர்கள்;பின்னர்
இனக்கலவரத்தால்இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள்.(இப்பொழுது என்சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனாற்றான் எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்(பி,காம்) 1980 முதல் இன்று வரை அயல்நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்அறிவும் நிறைந்த பெயரன்(மகள் வழி) அடங்கிய ஒரு சிறுகுடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன்,
ஒரு தம்பி. உம்மாஅவர்கள் இறந்து விட்டார்கள். வாப்பா அவர்கள்
இருக்கின்றார்கள்.



02. எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது ?
1973ல் பள்ளியிறுதியாண்டில் “யாப்பிலக்கணம்” வகுப்பில் தமிழாசிரியர்நடத்திய விளக்கங்களால் ஈர்க்கப்பட்டு அன்றே ஒரு வெண்பாவை வனைந்தேன்.(இலக்கணம் என்றால் தலைக்கனக்கும் என்று கைப்புடன் மற்ற மாணவர்கள் எல்லாம்அவ்வகுப்பை அவதானிக்காத பொழுது யான் மட்டுமே அவ்வகுப்பில் மிகவும்ஈடுபாட்டுடன் இருந்ததை அவதானித்த என் தமிழாசான் புலவர் திரு. சண்முகனார்அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்) அன்று தொடக்கம் இன்று வரையாப்பிலக்கணமும்,
மரபுவழியும் என்னுயிராய் ஒட்டிக் கொண்டன. அவ்வாசானின் அறிவுறுத்தலுக்கிணங்க “நூலகமே என் உலகம்” என்று அவ்விளம்
வயதில்வாசிப்பில் நேசிப்பைக் கொண்டேன். குறிப்பாக, யாப்பின் வகைகளில்
எல்லாவகைப் பாடல்களையும் வனைய வேண்டும் என்ற பேரவா கொண்டேன். இடையில் பணிநிமித்தம் அயல்நாடுகள் (சவூதி, அமெரிக்கா, ஐக்கிய அரபுநாடுகள்)சென்றதால் எனக்கு இருந்த ஈடுபாடும் குன்றியது.



03. தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான (ஒரு ஆசிரியர்) உங்கள் நெருக்கம்பற்றி சொல்லுங்கள் ?
முதலில் சொன்ன என் தமிழாசிரியர் மட்டுமல்ல, எங்களூரின்
தமிழறிஞரும்,எழுத்தாளரும், கவிஞருமான “அதிரை அஹ்மத் காக்கா” அவர்கள் என்னை மேலும்ஊக்கப்படுத்தினார்கள்; அவர்கள் என் வலைத்தளத்தில் வருகை புரிந்து ஒருபின்னூட்டம் எழுதினார்கள் இவ்வாறு:“இற்றைப் பொழுதினில் மரபுவழியினைப் பற்றிப் பிடித்தால் தமிழறிஞர்களின்பட்டியலில் இடம் பெறுவாய்” என்ற ஆசியுடன் வாழ்த்துரை அளித்தார்கள்; அன்றுமுதல் மீண்டும் யாப்பிலக்கணம் மேலும் கற்க அவர்களின் துணை நாடினேன்;மேலும், என் எழுத்தில் உண்டாகும் ஒற்றுப்பிழைகள்/ சந்திப்பிழைகள் கண்டுஅவற்றைத் திருத்தும் நல்லாசானாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.துபையில் ஒரு
கவியரங்கத்தில் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுத்தின்வாப்பா
அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்! அவர்களும் ,”என்னைப் போல்மரபு
வழிப் பாக்கள் படைப்பதில் கவியன்பன் கலாம் எனக்கு வாரிசாகஇருப்பார்”
என்று வாழ்த்துரை அளித்தார்கள்.இணையத்திலும், முகநூலிலும் எனக்கு
யாப்பிலக்கணம் கற்பிக்கும் ஆசானகளாக:கலைமாமணி இலந்தையார் (நியூ ஜெர்சி - “சந்த வசந்தம் இணையம்” நிறுவனர்)மற்றும் புதுவையில் வாழும் புலவர் இராஜ. தியாகராஜனார் ஆகியோரும் என்வழிகாட்டிகளாய் நின்று யாப்பின் எல்லா வகைப்பாக்களையும் இயற்றும் திறனைஎன்னிடம் வழங்கி வருகின்றார்கள்.



04. மரபுக்கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள் புதுக்கவிதையும் எழுதி வருகின்றீர்கள் இதில் எதில் மன
திருப்திபெறுகின்றீர்கள் ?
உண்மைதான். முன்னர்ச் சொன்னபடி 1974 முதல்
மரபுப் பாவின்பால் நாட்டம்அதிகம் உண்டானது; இடையில் கவிப்பேரரசு
வைரமுத்து அவர்களின் “இதுவரை நான்”என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்தேன்; அதுவரை நான் மரபென்னும் கடலைவிட்டு, புதுமை என்னும் நதியில் நீராடத் துவங்கினேன். எளிமையாகஇருந்தாலும், என் மனம் மரபில் தான் மீண்டும் கலக்கின்றது; அதற்கு என்ஆசான்களின் ஆசிகற்றான் காரணியமாக அமையும் என்று நினைக்கிறேன். மரபுப்பாஇனிமை; புதுக்கவிதை என்பது புதுமை; துளிப்பா(ஹைகூ) எளிமை என்ற கண்ணோட்டமும் என்னிடம் உண்டு. புதுக்கவிதையில் ஓர் உணர்வின்
உயிரோசையைக்காண்கிறேன். அதனால் மூன்று வகையிலும் என்னால் இயற்ற முடியும்; நான் கவிதைஎழுதவில்லை; கவிதையாய் வாழ்கின்றேன்! தமிழே என் மூச்சு; கவிதையே என்பேச்சு !



05. முத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது
நேரடியாகவழிகாட்டகிறார்களா ?
ஆம். வாசிப்பில் நேசிப்பைக் கொண்டவன் என்பதாலும்,
படிப்பாளிதான்படைப்பாளியாக ஆக முடியும் என்பதும் என் வாழ்வின் ஆரம்பப்பள்ளிக்காலத்திலும் உணர்ந்தவன். நூலகமே என் உலகம் என்று வாழ்ந்தவன்; இன்று,இணையமே என் இருதயம் என்று வாழ்கிறேன்.”தாய்” வார இதழின் ஆசிரியர்-வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின்எழுத்து நடையை வாசித்தேன்; புதுக்கவிதையை நேசித்தேன்என்றும் நான் போற்றும் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்களின் படைப்புகளைவாசிப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவன்; அவர்களை நேரில் காணும் பேறுபெற்றவன்.என்றும் என் மானசீகக் குருவாகக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைமுன்னிறுத்திக் கொண்டு அவர்கள் எப்படி எல்லாம் உணர்வின் ஓசையுடன்கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அவர்களின் கவியரங்க விழிமங்களைத்தேடிக் கேட்கிறேன்.முன்னர்ச் சொன்ன, என் ஆசான்களின் படைப்புகளை நேராகப் பெற்றும், இணையம்வழியாக மின்மடலில் பெற்றும் வாசிக்கிறேன்;  அவர்களின் படைப்புகளில் எப்படி இலக்கணங்களைக் கையாள்கின்றனர் என்று உன்னிப்பாக அவதானிக்கிறேன்.



06. படிப்பிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா ?
இல்லவே இல்லை; இளமையில் கல் என்பது போல், இளமையில் எழுது என்று எனக்குள் ஏற்பட்ட ஓர் இனம் புரியாத பேரவா என்னுள் தீயாய் இருப்பதால் என்னால்எழுதுவதை ஒரு சிரமமாக நினைப்பதில்லை; ஆயினும், தற்பொழுது உடல்நிலைஒத்துக் கொள்ளாத நிலைமையைக் கண்டு என் துணைவியார் அவர்களும்,என்நண்பர்களும், என்னுடன் பணியாற்றும் மேலாளர்களும் என்னைக் கடிந்துகொள்கின்றனர் “ நீ எழுதுவதை நிறுத்தினால் உன் உடல் நலம் பெறும் ‘என்று.ஆனால், என் மனம் எழுத்திலும், கற்பதிலும், கற்பிப்பதிலும் தான் பேரின்பம்= அலாதியான ஓர் ஆன்மத் திருப்தியை அடைவதை உணர்கிறேன்; தேனின் இன்பம் என்பதைச் சுவைத்தவர்க்கு மட்டும் தான் தெரியும்; புரிய வைக்க இயலாது!



07. சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன
எல்லாம் கவிதைகள் என்று வலம் வருகின்றன என்பதைத் தான் ஏற்க
மறுத்தாலும்,உணர்வின் ஓசை யாகவே ஒலிக்கின்ற அவ்வரிகள் கவிதையின்
தாக்கத்தைஏற்படுத்தத்தானே செய்கின்றன என்ற ஓர் உடன்பாட்டால் உளமேற்கும் நிலையில்உள்ளேன். ஆயினும், எந்த விதமான இசை/ஓசை நயமோ, எதுகை மோனை கூட இல்லாமல்,வரிகளை மடக்கி, மடக்கி எழுதி விட்டால் அதுவும் கவிதையாகும் என்ற ஓர் அவலநிலையைத் தான் என் மனமும் கவிதையின் உண்மையான ஆர்வலர்கள்/ பாவலர்கள்எல்லாரும் ஏறக மறுக்கின்றனர்.மரபுப்பாக்களை என் ஆசான் இலந்தையார் அவர்கள் நடத்தும் “சந்த வசந்தம்”என்னும் இணையத்திலும், புதுவைப் புலவர் இராஜ.தியாகராஜனார் அவர்களின்முகநூல் பக்கத்திலும்  வாசிக்கிறேன் புதுக்கவிதைகளைக் கவிஞர் கனடா புகாரி, கவிஞர் பொத்துவில்
அஸ்மின்,கவிஞர்பரங்கிப்பேட்டை இப்னுஹம்தூன், கவிஞர் குவைத் வித்யாசாகர், அதிரைகவிவேந்தர் சபீர் அபுசாருக்ஹ், முத்துப்பேட்டை கவியருவி மலிக்கா ஃபாருக்,கவிதாயினிஆச்சி தேனம்மை, கவிதாயினி வேதா இலங்காதிலகம் மற்றும் என்முகநூல் நண்பர்களின் படைப்புகள் வழியாகவும் தேடித் தேடி வாசிக்கிறேன்நவீனக் கவிதைகளைக் கவிஞர்கள் இத்ரீஸ், சிராஜ்டீன் சிறோ மற்றும் ஸமானின்கவிதைகளில் காண்கிறேன்ஹைகூ என்னும் துளிப்பாக்கள்: என் மின்மடல் தேடி வந்து விழுகின்றன;குறிப்பாக மதுரை இரா.இரவி. மற்றும் ரமேஷ் போன்ற ஹைகூ கவிஞர்களின் ஹைகூகவிதைகள் என் மின்மடலுக்கு நாடோறும்
வருகின்றன.; அவைகளை இரசித்துவாசிப்பேன்.



08. கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு
எந்தளவில்உதவுகின்றன ?
கவிதைக்கான இணையத் தளங்களாகவே நான் தேடித் தேடி
\இரவெலாம் விழித்துஇணையத்தில் புகுந்து நுழைந்து அனைத்துக் கவிதை
விரும்பும் தமிழ்த்தளங்களிலும் என் படைப்புகளை வரவேற்கும் வண்ணம்
நெருங்கிய நட்பைவைத்துள்ளேன்: அவற்றுள் தமிழ்த்தோட்டம் தமிழ்மணம் நீடூர்சன்ஸ் முதுகுளத்தூர்டைம்ஸ் அய்மான் டைம்ஸ் அதிரைநிருபர் அதிரை எக்ஸ்பிரஸ் சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள் மற்றும் இலண்டன் தமிழ் வானொலியின் “பா முகம்”,முகநூலின் கவிதைக் குழுமங்கள்சங்கமம் தொலைக்காட்சி,துபைஅய்மான் சங்கம், அபுதபிபாரதி நட்புக்காக, அபுதபியு ஏ இத் தமிழ்ச் சங்கம்வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு,துபைதமிழர்ப் பண்பாட்டு நடுவண் கழகம், துபைதுபாய்த் தமிழர்ச்சங்கமம் ஆகிய தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள்/ கவியரங்குகளில் என் கவிதைகள் வரவேற்கப்பட்டுள்ளன. குறிப்பாக: வானலை வளர்தமிழ் என்னும் இலக்கிய
அமைப்பு மாதந்தோறும்நடத்தும் கவியரங்கில் ஒரு கவியரங்கில் என்னைத்
தலைமைக் கவிஞராய் அமரவைத்து 33 கவிஞர்களை என் “மரபுப்பாவில்” அவர்களின் திறன் கூறிக் கவிபாடஅழைக்கும் பெரும்பணியை அவ்வமைப்பின் அமைப்பாளர் உயர்திரு. காவிரிமைந்தன்அவர்கள் எனக்களித்து என்னை மதித்து அக்கவிஞர்கட்குச் சான்றிதழ்களும் என்மரபுப்பாவில் வடித்து என்னையும் மேடையில் பரிசும் சான்றிதழும் கொடுத்துமதிப்பளித்ததை என் வாழ்நாளில் மறக்கவியலாத ஓர் அரிய தருணம்.இப்படியாக என் கவிதைகளை நாடிக் கேட்பவர்கட்குத் தவறாமல் அனுப்புகிறேன். அவற்றுள்உங்களின் “தடாகம் இலக்கிய வட்டம்” சர்வதேச அளவில் புகழ்பெற்று என்கவிதையையும் ஏற்றுள்ளது என்பது யான் பெற்ற பேறென்பேன்!



09. புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும்
இடையிலான வேறுபாடு பற்றிகூறமுடியுமா ? கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள் ? 
புதுக்கவிதை எளிமையும் புதுமையும் கலந்த ஓர் உணர்வின்
வடிவம்;நவீனக் கவிதை “ஞானத் தேடல்” போன்று உளவியல் அறிவுடன்
உன்னிப்பாய்அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற ஓர் ஆழமான கடல் ! கவிதை என்பது கற்பவரின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தும்;கவிக்கோ அப்துற்றஹ்மானின் ஒரு கவிதையில்: அண்ணல்
நபி(ஸல்)அவர்களைத்தாயிஃப் மக்கள் கல்லால் அடித்தார்கள் என்ற செய்தியைக் கவிதையில்சொல்வார்கள் இப்படியாக:\\கல்லின் மீது பூவை
வீசியவர்கள்முதன்முதலாகபூவின் மீது கல்லை வீசினார்கள்!”மேலே சொன்ன விடயம் ஒன்றுதான் அதனை உரைநடையில் சொல்வதை விட இவ்வண்ணம்கவிநடையில் சொன்னால் உள்ளத்தில் உண்டாக்கும் தாக்கம் தான் கவிதை என்னும்ஆக்கம் தரும் நோக்கம்.



10. கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?
கவிதைகள் என்பதும் ஒரு கற்பித்தலே; கற்பித்தலால் என்ன சாதிக்க முடியுமோஅதனையே கவிதையிலும் சாதிக்கலாம். உதாரணமாக என் கவிதை “வயசு வந்து போச்சு”என்ற கவிதையில் வரதக்‌ஷணை என்னும் கொடுமையைச் சாடியிருந்தேன்; அந்தக்கவிதையைப் படித்த ஓர் அன்பர் ”வரதக்‌ஷணை வாங்காமல் திருமணம் முடிப்பேன்”என்று எனக்கு மின்மடலில் மறுமொழி அனுப்பியதும்; அதே கவிதையைக்கவியரங்கில் பாடிய பொழுது ஓர் இளம் மங்கைக் கண்ணீர் மல்க,”எப்படி ஐயாஎங்களின் உணர்வுகளை இப்படி வடித்தீர்கள்” என்று வினவியதும் என் கவிதையின் தாக்கம் என்று உணர்கிறேன் ! சமுதாயப் பிரச்சினைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களை., நம் கவிதைகள்என்னும் சிரட்டையளவின் சிரத்தையால் தடுப்போம் என்பதே என் நிலைபாடு.



11. கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா ? நாவல்,
சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா
?
துவக்கத்தில் சிறுகதைகள் எழுதினேன்; அவைகள்
இதழாசிரியர்களால்ஏற்கப்படவில்லை; அதனால் நிறுத்தி விட்டேன்; ஆயினும், சிறுகதைகள்,நாவல்கள் மற்றும் இலக்கியத்தின் எல்லாப் பரிணாமங்களும் எனக்குவிருப்பமானவைகள் என்பதால் அவைகளையும்
வாசிப்பேன்;நேசிப்பேன்.12உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த
சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?ஆம். முதலில் சொன்னேன் அல்லவா. பணியின்
காரணியமாக உலகம் சுற்றியதால்என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத இயலாமற் பணி ஒன்றே நோக்கமாக அமைந்துவிடுதல்;உடல்நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் நோய்கள்துணைவியார், நண்பர்கள், மேலாளர்களின் அன்பான அறிவுறுத்தல்கள்இவைகள் என் எழுத்துப் பயணத்தின் தடைக் கற்கள்!முன்னர்ப்பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு முடிந்ததும் (1973) தமிழின்பால்கொண்ட காதலால், “புலவர்” பட்டயம் படிக்க வேண்டும் என்ற பேரவாவினால்அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்த வேளையில், என் குடும்பத்தார்கூறினார்கள்: “ பாட்டுக் கட்டினால் நோட்டுக் கட்ட முடியாது” என்று.இயல்பாகவே வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால்,“வணிகவியலை”பட்டப் படிப்பாக்கினேன்; இன்றும் வணிகவியலை இலவயமாகக்கற்பிக்கிறேன். என் வாழ்வில் இரு கண்கள்; கணக்குப்பதிவியலும்;கவிதையும்.கணக்குப் பதிவியல் (accountancy) என்
தொழில்கவிதையியல் = என் இலக்கிய எழில்



13. இறுதியாய் என்ன சொல்ல போகிறீகள் ?
கண்டது கற்கின் பண்டிதனாவான்படிப்பாளியே
படைப்பாளியாவான்கற்போம்;கற்பிப்போம்இலக்கியமென்னும் மடியில்
இளைப்பாறுவோம்; இருதயம் இந்தத் “தடாகத்தின்”தென்றலால் இன்பம் அடையும்!



14. படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது  ?
படிக்கும் காலத்தில் பயிற்றுவிக்கும் நல்லாசான்கள் கிட்டியதன் அரும்பேறு
என்பேன்.



15. எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு
உள்ளது ?
படைப்பாளிகள் எல்லாரும் தன் அனுபவங்களைத் தான் பலவேறு
பரிணாமங்களுடன்இலக்கிய வடிவில் நமக்கு விருந்தாகப் படைத்து நம் அறிவுப்பசியாறவைக்கின்றார்கள். உணவில் வகைகளும், சுவைகளும் வேறுபடுகின்றன போலவே,இவர்களின் படைப்புகள் என்னும் இலக்கிய விருந்திலும் சுவைகளில்,உருவத்தில் வேறுபாடுகள் இருப்பினும் ஏற்புடையனவாகவே வலம்வருகின்றன என்பதே என் கண்ணோட்டம்.



பொறுமையோடு எனது கேள்விகளுக்கு அமைதியாக .நிதானமாக பதில் தந்த உங்களுக்கு என் இதயம் கசியும் நன்றித்துளிள்வாழ்க மன நிறைவோடு மகிழ்வோடு மன மகிழ்வோடு, நலமோடு வாழ்த்துக்கள்



நன்றி : 
பேட்டி : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
இலங்கை அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.